ஞாயிறு, 24 ஜனவரி, 2016

கிணறு!

‘என்னை இந்த கெணத்துல புடிச்சுத் தள்ளிட்டாங்க’ என்று, என் மனைவியார் அடிக்கடி என்னைக்காட்டி, பெருமைப்படுத்திக் கூறுவது வழக்கம். ‘கெணறுண்ணா கெணறு, பாழுங்கெணறு’ என்று, உயர்வு நவிற்சியாக, அவர் இழுத்துச் சொல்வதைக் காணக் கண்கோடி வேண்டும்.
கட்டிய மனைவியே, ‘பாழுங்கிணறு’ என்று பாராட்டும்போது, அதை மறுப்பது அவ்வளவு நியாயமாகவும் இருக்காது; தர்மமும் அல்ல என்கிற காரணத்தால், நானும் அதைப் பெருந்தன்மையோடு, மனமுவந்து ஏற்றுக் கொள்வேன்.
நான் தொடங்கிய வலைத்தளத்துக்கு, ‘கிணறு’ என்று பெயர் சூட்டியதற்கான காரணமும் இதுதான். தொடங்கிய காலத்தில்,  நம்மைப்போன்ற, பெருமைக்குரிய கிணறுகளை கண்டறிந்து, தோண்டித் துருவி எழுத வேண்டும் என்றொரு எண்ணமும் இருந்தது.
சிறிது காலம், அந்த எண்ணமெல்லாம், கிணற்றுக்குள் போட்ட கல்லாகவே இருந்தது. நாட்கள் சென்று கொண்டே இருந்தன. ‘கிணற்றுத் தண்ணீரை ஆற்று வெள்ளமா அடித்துக் கொண்டு போய் விடும்’ என்று நானும், தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன்.
அப்புறம், சமீபத்தில் ஊருக்குள் பெய்த பெருமழையின்போதுதான், திடீர் ஞானோதயம் ஒன்று ஏற்பட்டது. அதாவது,  எவ்வளவு காலம்தான் நாமும், கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, இளங்கோவன் என்று உள்ளூர் அரசியல்வாதிகளைப் பற்றியே கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பது?
உலக அளவில், ஒபாமா, கிளிண்டன், கேமரூன், பான் கீ மூன், புதின் என்று கருத்துச் சொன்னால்தானே, நமக்கும் தலைக்குப் பின்னால் ஒளி வட்டம் தோன்றும்?
‘கிணற்றுத்தவளையாகவே இருந்து பழகிப்போய் விட்ட நாம், கொஞ்சம், உலக விவகாரங்கள் பற்றியெல்லாம் எழுதித்தான் பார்ப்போமே’ என்பதே, அந்த ஞானோதயத்தின் சாராம்சம்.
அவ்வளவு தான். முடிவு எடுத்தாகி விட்டது. கண்டவை, கேட்டவை, படித்தவையுடன் கொஞ்சம் மசாலாவும் சேர்த்து, வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பதிவு எழுதி விடலாம் என்கிற நம்பிக்கையும் வந்தது.
அப்படி எழுத ஆரம்பித்ததுதான், கிணறு வலைத்தளம்.
ஏதோ, கொஞ்சம் பேர் படிக்கின்றனர். நமக்கும் பொழுது போகிறது. எப்படியோ, ‘பாழும் கிணறு’ என்று சொன்னவர்களுக்கு பாடம் புகட்டி விட்டோம் என்பதை எண்ணும்போது, உள்ளபடியே மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.
‘தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு’ என்பதே, சமூகத்தின் இன்றைய தைப்பூச விடுமுறை தின கருத்து.

புதன், 13 ஜனவரி, 2016

இது, வாழைப்பழ தேசம்!

நீதிமன்ற தீர்ப்பு முக்கியமா, மக்கள் உணர்வு முக்கியமா என்ற கேள்வி மீண்டும் ஒரு முறை வெடித்துக் கிளம்பியிருக்கிறது. ‘மக்கள் எல்லோரும் சரியானவர்களாக இருந்தால், நீதிமன்றங்களே தேவையில்லையே’ என்று கேட்பதற்கு யாருக்கும் துப்பில்லாத இந்த துர்ப்பாக்கிய சூழலில், இந்தச்சமூகம் அது பற்றி கருத்துச் சொல்வது மிக அவசியமாகிறது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், நீதிமன்றத் தீர்ப்புகளை, கர்நாடகா அரசு மதிப்பதில்லை. பெரியாறு அணை தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை, கேரளா பின்பற்றுவதில்லை. இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்போதெல்லாம், ‘நீதிமன்ற உத்தரவை, அந்த மாநிலம் மதிப்பதில்லை’ என்று, தமிழகத் தரப்பில் வாதம் முன் வைக்கப்படுவது வழக்கமாகியுள்ளது.
‘எங்கள் மாநில விவசாயிகள் உணர்வுக்கு மதிப்பளித்து, காவிரியில் தண்ணீர் திறந்து விட மாட்டோம்’ என்று, கர்நாடக அரசு கூறிவிட்டால், நமது நிலை என்னவாக இருக்கும்? ஏற்கனவே, கர்நாடகா அரசு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. வெளிப்படையாக சொல்லும் நிலை வந்தால் என்ன செய்வது?
பெரியாறு அணை விவகாரத்தில், எங்கள் மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து, புது அணை கட்ட வேண்டும் என்பது கேரள அரசின் நிலையாக இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக, சட்டமன்றத்தை கூட்டி, புதிய சட்டத்தை நிறைவேற்றிய ‘பெருமை’ அம்மாநிலத்துக்கு உண்டு.
இப்படி பிரச்னைகள் வரும்போதெல்லாம், அபயக்குரல் எழுப்பிய தமிழர்கள், இப்போது மட்டும், ‘மக்கள் உணர்வுதான் முக்கியம்’ என்று சொல்ல ஆரம்பித்திருப்பதை, என்னவென்று சொல்வது?
‘நாட்டில் எந்த மாநில அரசும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிப்பதில்லை; ஆகவே நாங்களும் மதிக்க மாட்டோம்’ என்று சொல்லி விட்டால், வாதம் கொஞ்சம் எடுபடுவது போலிருக்கும்; அப்புறம், கோர்ட்டில் நாயடி பேயடி கொடுத்தால் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்!