புதன், 31 டிசம்பர், 2014

விருது வாங்கலையோ விருது!


அரசியல் நிகழ்வுகளைப் பற்றி அடிக்கடி கருத்து சொல்லாமல் இருப்பதே புத்திசாலித்தனம். நம்மிடம் அதுவெல்லாம் கிடையாது என்பதாலும், கருத்து கந்தசாமிக்களின் எண்ணிக்கை நாட்டில் குறைந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தாலும், நாமும் அவ்வப்போது எதுனாவது கருத்துச் சொல்லி, தமிழ் கூறும் நல்லுலகை வாழ்வித்து வருவது, எல்லோரும் அறிந்ததே. அந்த வகையில், இந்த கட்ஜூ, கட்ஜூ என்றொரு மகா வில்லங்க நீதிபதி இருக்கிறாரே, அவரது கருத்துக்களைப் பற்றி கருத்துச் சொல்லும் பேறு, இன்று நமக்கு வாய்த்திருக்கிறது.
கட்ஜூ, இப்போது நீதிபதியல்ல, ஓய்வு பெற்று விட்டார். பிரஸ் கவுன்சில் எனப்படும் வீணாய்ப்போன ஒரு அமைப்புக்கு, தலைவராகவும் இருந்தவர். இப்போது எந்த வேலையும் இல்லை போலிருக்கிறது. அது, அவர் வலைப்பக்கத்தை பார்த்தாலே தெரிந்து விடும். தினமும் மூன்று, நான்கு பதிவு போடுவதைப்பார்த்தால், அப்படித்தான் தோன்றுகிறது.
பாரத ரத்னா விருது வழங்குவதைப் பற்றி, வலைப்பக்கத்தில் கட்ஜூ எழுதியிருக்கிறார். ஏதோ, இப்போது மட்டும் தவறான நபர்களுக்கு விருது வழங்கப்போவது போலவும், முன்பெல்லாம் மிகச்சரியாக நடந்தது போலவும் இணையத்தில் கருத்துக்கள் உலா வருவது, வேடிக்கையாக இருக்கிறது. பாரதியாருக்கு, பாரத ரத்னா விருது தரப்பட வேண்டும் என்பதுவும், கட்ஜூவின் கருத்துக்களில் ஒன்று. ‘அதை, முந்தைய அரசும் கண்டுகொள்ளவில்லை; இப்போதைய அரசும் கண்டுகொள்ளவில்லை’ என்று, வருத்தப்படுகிறார் கட்ஜூ. இனி மேல், பாரதியாருக்கு விருது கொடுத்தால் என்ன, கொடுக்காவிட்டால் என்ன?
பாரத ரத்னா விருது இருக்கட்டும். தமிழக அரசின் புண்ணியத்தால், ஆண்டுக்கு ஆண்டு 50க்கும் மேற்பட்டோருக்கு, கலைமாமணி விருதுகள் கிடைக்கின்றன.
இது தவிர, கலை வளர்மணி, கலைமுதுமணி என்று, வயது வாரியாக வேறு விருதுகள் உண்டு. இவற்றுக்கெல்லாம் எப்படி ஆட்தேர்வு செய்கின்றனர் என்று விசாரித்துப் பார்த்தால், யாரும் விருதே வாங்க மாட்டார்கள்.
கலைமாமணி விருதுக்கு, அந்தந்த மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்து அனுப்பி வைப்பார். கலெக்டருக்கு யார் பரிந்துரை செய்வார்? கலெக்டரின் பி.ஏ., கார் டிரைவர், டபாலி, அவரது மனைவி என்று யாராவது பரிந்துரை செய்யக்கூடும். கடைசியில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சில பேரைப்புகுத்துவார். அங்கும் யாராவது சில கழிசடைகளின் பரிந்துரை இருக்கும். சினிமா நடிகைகளை கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்வதில் நடக்கும் அக்கிரமம், வெளியில் சொல்ல முடியாதது. நல்லாசிரியர் விருதுக்கு, அந்தந்த மாவட்ட கல்வித்துறை அலுவலகங்களில் ‘பிளாட் ரேட்’ நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள். இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதுகளும், அவ்வப்போது சர்ச்சைகளால் கேவலப்படுத்தப்படுகின்றன.
பத்ம விருதுகள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், மாநில அரசுகளின் பரிந்துரைகளுக்கு உட்பட்டவை. அதிலும், நடிகர், நடிகையர் பெயர்கள் எப்படியோ இடம் பிடித்து விடுகின்றன. இதற்கெல்லாம், மத்திய அரசில் என்ன அளவுகோல் வைத்திருக்கின்றனர் என்ற விவரத்தை நானும் நீண்ட காலமாக யோசித்துக் கொண்டே இருக்கிறேன்; பிடிபட்டபாடில்லை. வெள்ளைப்பணத்துக்குள், கருப்புப்பணத்தை கலந்து விட்டு, கணக்குக் காட்டி விடும் கொள்ளையர்கள் போல், கழிசடைகள் பலரோடு, நல்லவர்கள் சிலருக்கும் விருது கொடுத்து, மொத்தக்கும்பலையும், உத்தமர்கள் ஆக்கி விடுகிறது, அரசு.
சினிமா பின்னணிப்பாடகி எஸ்.ஜானகிக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது, ‘எனக்கு பாரத ரத்னா தான் வேண்டும்’ என்று அவர், வெளிப்படையாகவே கூறி விட்டார். ‘தன்னை விட தகுதி குறைந்தவர்களுக்கு அந்த விருது எப்போதோ வழங்கப்பட்டு விட்டபோது, தனக்கு இவ்வளவு தாமதமாக விருது அறிவிப்பது தவறு. ஆகவே அந்த விருது போதாது’ என்பது அவர் கருத்து. நியாயம்தான்.
சரி போகட்டும். இப்படி விருதுகளை அறிவிப்பது சரி. கூடவே, விருதுக்கு விண்ணப்பித்தவர் யார், பரிந்துரைத்தவர் யார், ஒப்புதல் அளித்தவர் யார் என்ற விவரத்தையும், மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டால், எதிர்கால சந்ததிகள், படித்துப்பார்த்து, புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் என்பது நம் கருத்து.

ஞாயிறு, 9 நவம்பர், 2014

மார்க்கெட் மதிப்பும், வழிகாட்டி மதிப்பும்!

அரசு அறிவிக்கும் வளர்ச்சித்திட்டங்கள் பல, நிறைவேற்ற முடியாமல் முடங்கிப் போவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, நிலம் எடுக்கும் விவகாரமே. அரசு நிலமாக இருந்தால் பிரச்னையில்லை. தனியார் நிலமாக இருந்தால், அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பர்; வழக்கும் தொடுப்பர்.
ஏதாவது வில்லங்கமான வக்கீல்களிடம் வழக்கு சென்று விட்டால், அந்த திட்டத்தின் கதி அதோகதி தான். தமிழகத்தின் மிக முக்கியமான ரயில் பாதை திட்டம், இப்படிப்பட்ட பிரச்னையில் சிக்கி, ஆண்டுக்கணக்கில் தாமதம் ஆனதை நான் அறிவேன்.
தனியார் நிலத்தை அரசு எடுப்பதில் இருக்கும் சிக்கல்களை ஒரேயடியாக தீர்ப்பதற்கு, மத்திய அரசோ, மாநில அரசுகளோ தயாராக இல்லை. மாற்றி மாற்றி காலை வாரிக் கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள் அமைந்திருந்தால், எந்த ஒரு திட்டமும் விரைந்து நிறைவேற வாய்ப்பே இல்லை.
தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில்கூட, நிலம் எடுப்பு பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பது வேதனைப்பட வேண்டிய ஒன்று. அதிகாரிகளை கேட்டுப்பாருங்கள்! ‘அரசாங்கம்தான், நிலத்தின் உரிமையாளர்; அதை வைத்திருப்பவர் பெயரில் பட்டா மட்டுமே தரப்படுகிறது. ஆகவே தன் நிலத்தை, தனக்குத் தேவையானபோது எடுக்க அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது’ என்று, விளக்கம் கொடுப்பர்.
இப்படி ஊருக்குள் போய்ச்சொன்னால், தர்ம அடி விழுந்து விடும். அரசியல்வாதிகள் ஓட்டுக்கேட்க மட்டுமல்ல; ஓடி ஒளியவும் முடியாத நிலை ஏற்பட்டு விடும். டாட்டாவின் டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம், குப்பைக்குப் போனதை நாடு பார்த்ததே!
ஆக, தமிழகத்தில் பாலங்கள் கட்டவோ, சாலை அமைக்கவோ, விரிவாக்கவோ, புதிதாக நிலம் எடுக்க முடியவில்லை. சென்னை, கோவை போன்ற இடங்களில் விமான நிலையங்களை விரிவாக்க முடியவில்லை.
இப்போதுகூட, எரிவாயுக் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டம், விவசாயிகள் எதிர்ப்பால் முடங்கிக் கொண்டிருக்கிறது.
‘இனி அரசு திட்டங்களுக்கு ஒரு இஞ்ச் கூட நிலம் எடுக்கவே முடியாது’ என்ற நிலை, தவிர்க்க முடியாததாகி விட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது, மார்க்கெட் மதிப்பு. மார்க்கெட் நிலவரப்படி, ஏக்கர் மூன்று கோடி போகும் நிலத்துக்கு, வழிகாட்டி மதிப்பு வெறும் பத்து லட்சத்துக்கும் கீழே இருக்கிறது.
அரசு நிர்ணயிக்கும் வழிகாட்டி மதிப்பை ஏற்க மறுப்பவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அந்த வழக்கு, ஓரிரு தலைமுறைகளில் முடிந்து விட்டால் பரவாயில்லை. முப்பது ஆண்டுக்கும் மேலாக நடக்கும் வழக்குகள், தமிழகத்தில் ஏராளம் இருக்கின்றன. பறிக்கப்பட்ட நிலத்துக்கு, தன் வாழ்நாளில் இழப்பீடே கிடைக்காமல் இறந்து போன விவசாயிகள் எத்தனையோ பேர். அரசுக்கு சொற்ப விலைக்கு நிலத்தைக் கொடுத்துவிட்ட சோகத்தில் இறந்தவர்களும், நடைபிணம் ஆனவர்களும் பலருண்டு.
வழிகாட்டி மதிப்புக்கும், மார்க்கெட் மதிப்புக்கும் இருக்கும் மெகா இடைவெளிதான் அடிப்படை பிரச்னை. அதை சரி செய்து விட்டால், நிலம் எடுப்பு பிரச்னைகள் தீர்ந்து விடும். யாராவது தேவதூதர்கள் வான்வெளியில் பறந்து வந்தால்தான், இதுவெல்லாம் சாத்தியம்.

செவ்வாய், 4 நவம்பர், 2014

ஆடு நனைகிறதாம்; அழுகிறது, ஓநாய்!

கோவையில் இருக்கிறது அந்த பிரபல மருத்துவமனை. அதன் தலைவர், நகைச்சுவையாக பேசக்கூடியவர். மருத்துவர் சங்க கூட்டம் ஒன்றில் அவர் பேசியபோது, சென்றிருந்தேன்.
‘சிகிச்சைக்கு முன், நோயாளியின் கண்களுக்கு கடவுளாகத்தெரியும் மருத்துவர், நோய் குணமாகி விட்டால், சாதாரண மனிதராகி விடுவார். சிகிச்சைக்கான பில் தரப்படும்போது, சாதாரண மனிதர், சாத்தான் போலவே தெரிவார்’ என்றார், அவர். கூட்டத்தில் இருந்த மருத்துவர்கள் மத்தியில் பலத்த சிரிப்பு, கைத்தட்டல். காரணம், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அப்படிப்பட்ட அனுபவம் நிச்சயம் இருந்திருக்கும்.
இப்போதெல்லாம், மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் கட்டணம், யாராலும் சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது. சளி, காய்ச்சல் என்று போனால்கூட, குறைந்தபட்சம் முந்நூறு ரூபாய் செலவின்றி மருத்துவமனையில் இருந்து வெளியே வர முடியாது.
அதுவும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் என்றால், குறைந்தபட்சம் ஐநூறு ரூபாயை தாண்டிவிடுகிறது. மருத்துவத் தொழில், மனிதர்களை கடந்து,
பேராசைக்காரர்களையும் தாண்டி, கொள்ளைக்கூட்டத்தினரின் கைகளை அடைந்து விட்டிருக்கிறது.
அன்றாடம் காய்ச்சிகள் மட்டுமல்ல; மாதச்சம்பளம் பெறுவோரும், மருந்துக் கடை நடத்துவோரைத்தான், தங்கள் குடும்ப மருத்துவராக பாவித்து, மாத்திரையும், ஆலோசனைகளும் பெற வேண்டியிருக்கிறது.
சாதாரண சளிக்கு, முந்நூறு ரூபாய் வசூலிக்கும் மருத்துவரைக் காட்டிலும், பத்து ரூபாய் மாத்திரையில் தீர்வளிக்கும் மருந்துக்கடை ஊழியரே, இன்று பலருக்கு கடவுளாகத் தெரிகிறார்.
மருத்துவர்கள், மருந்து நிறுவனத்தாரிடமும், ஆய்வகம் நடத்துவோரிடமும் கமிஷன் வாங்கிக்கொண்டு, நோயாளிகளுக்கு துரோகம் இழைக்கும் கொடுமை, உலக நடைமுறையாகி விட்டது.
தங்கள் தொழிலுக்கு இடையூறு செய்யும் கம்பவுண்டர்களையும், மருந்துக் கடையினரையும், ‘போலி மருத்துவர்கள்’ என்று புகார் செய்து, போலீசில் சிக்க வைக்கும் மருத்துவர்களும் இருக்கின்றனர். மருத்துவர் சங்க கூட்டங்களில், அவர்கள் விவாதிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் இரண்டாகத்தான் இருக்கும்.
ஒன்று, போலி மருத்துவர்கள் பிரச்னை; இன்னொன்று, சிகிச்சை சரியில்லை என்று நோயாளிகள் உறவினர்கள் மருத்துவமனையில் நேரடித்தாக்குதலில் இறங்குவது. போலி மருத்துவர்களால், அவர்களிடம் சிகிச்சைக்குச் செல்வோருக்குத்தான் பிரச்னை. இதில், ஒரிஜினல் மருத்துவர்களுக்கு கவலை என்ன வேண்டியிருக்கிறது? எல்லாம், ஆடு நனைகிறதே என்று, ஓநாய் அழுத கதை தான்.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

சென்சார்...நல்ல சென்சார்...!

சிங்காரச் சென்னை மாநகருக்கு முதல் முதலாக சென்றிருந்தேன். வேறெதற்கு? அலுவலகப்பணி தான். ஓட்டலில் சாப்பிட்டு முடித்தபின், கை கழுவச் சென்ற இடத்தில் ஒரு அதிசயம். முன் சென்ற நண்பர், கண்கள் அகல விரிய, ‘அட..., அட...’ என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தார்.
‘சார், என்னாச்சு என்னாச்சு’ என்றேன். ‘இங்க பாருங்க’ என்றார். அவர் கை நீட்டிய இடத்தில் தண்ணீர் வரும் டேப் தான் இருந்தது. எனக்குப் புரியவில்லை. அவர், கை கழுவுவதுபோல், கையை அருகில் கொண்டு சென்றதுமே, டேப்பில் இருந்து தண்ணீர் குபுகுபுவென கொட்டியது.
கையை அகற்றியும், தண்ணீர் நின்றது. மீண்டும் கையை அருகில் கொண்டு சென்றதும், தண்ணீர் கொட்டியது. இதெல்லாம், கிராமங்களில் இருந்து சென்றிருந்த நாங்கள், முன்னெப்போதும் கண்டே இராத, கேட்டும் இராத அதிசயம்.
அதெப்படி? ‘நாம் கை கழுவ வருவதைப் பார்த்து, யாரோ டேப்பை திருகி தண்ணீரை திறந்து விடுகிறான்போல’ என்று சந்தேகம் வேறு. அப்புறம்தான் இன்னொரு நண்பர் சொன்னார், அதெல்லாம், ‘சென்சார்’ சம்பந்தப்பட்ட மேட்டர். கை அருகில் வருவதை ‘சென்சார்’ உணர்ந்தாலே, தண்ணீர் கொட்டுமென்று.
இது நடந்து பல்லாண்டுகள் ஆனாலும், இன்னும் அந்த அதிர்ச்சியும், ஆச்சர்யமும் மனதை விட்டு அகலாமல் அப்படியே இருக்கின்றன.
இப்போதெல்லாம், சிறு சிறு நகரங்களில் இருக்கும் ஓட்டல்களில் கூட சென்சார் பொருத்திய தண்ணீர் டேப் வைத்து விட்டார்கள். டாய்லெட்டுகளில் கூட, சென்சார்கள் பொருத்தப்பட்டு விட்டன.
இத்தகைய பெருமைக்குரிய சென்சார்கள் பழுதாகி விட்டால் பண்ணும் இம்சை இருக்கிறதே! ஆளில்லாத நேரத்தில்கூட, தண்ணீரை குபுக் குபுக்கென கொட்டிக் கொண்டிருக்கும். தானே தண்ணீர் வந்து, தானே நிறுத்தி, மீண்டும் தானே வந்து, நின்று... ஐயோ...! கொஞ்சம் மனம் பலவீனமான நபர்கள், இப்படி நடப்பதைப் பார்த்து விட்டால், கூக்குரல் எழுப்பி, அலறியடித்து ஓட்டம் பிடித்து விடுவர் தானே? 

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

அமிலமாக மாறி விடும் கடல் நீர்!

மனிதர்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடு, கடல் சூழலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக, பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொழிற்துறையினர் உற்பத்தி செய்யும் கார்பன் டை ஆக்சைடில் மூன்றில் ஒரு பகுதி, கடலில் கலந்து விடுகிறது.
இது, இயற்கையான வேதிப்பண்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, கடல் நீரை அமிலமாக மாற்றி விடுகிறது. இந்த அமிலமாக்கும் செயல், முந்தைய மதிப்பீடுகளை காட்டிலும் பல மடங்கு அதிகப்படியாக நடைபெற்றுள்ளதாக, தற்போதைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்து பிரிட்டனின் தலைமை விஞ்ஞானியான சர் மார்க் வால்போர்ட் கூறுகையில், ‘‘தொழிற்புரட்சிக் காலத்தில் இருந்ததை காட்டிலும், இப்போது 25 சதவீதம், கடல் நீரின் அமிலத்தன்மை அதிகரித்துள்ளது. இதற்கு மனிதர்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடே காரணம்,’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘கடல் நீருடன் கலக்கும் கார்பன் டை ஆக்சைடு, வேதி வினை புரிந்து, கார்பானிக் அமிலமாக மாறி விடுகிறது. தற்போது வெளியேற்றப்படும் விகிதத்திலேயே கார்பன் டை ஆக்சைடு தொடர்ந்து வெளியேற்றப்பட்டால், கடல் நீரின் அமிலத்தன்மையும் தொடர்ந்து அதிகரிக்கும். இது, கடல் சுற்றுச்சூழலுக்கும், கடல் வாழ் தாவரங்கள், உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்,’’ என்றார்.
பல்வேறு காரணங்களால் கடல் நீர் வெப்பமாகி வருவதும், கடல் சுற்றுச்சூழலை பாதித்து வருகிறது. இத்தகைய பாதிப்பால், ‘எதிர்காலத்தில் கடலில் மீன் இனங்களே இல்லாத நிலை கூட ஏற்பட்டு விடும்’ என்றும், விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
http://www.bbc.com/news/science-environment-29746880

செவ்வாய், 21 அக்டோபர், 2014

தேர்தல் ஆணையமும், தேறாத பரிந்துரையும்!

தேர்தலுக்கு தேர்தல், ‘பெய்டு நியூஸ்’ என்ற வார்த்தைப் பிரயோகம் ஊருக்குள் உலா வருவதைக் காண முடிகிறது. ‘லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்’ என்கிறது சட்டம். அதுபோலத்தான், ‘பெய்டு நியூஸ்’ வெளியிடுவதும் குற்றம்; வெளியிட வைப்பதும் குற்றம்.
‘எதிர்காலம் வளமாக இருக்க வேண்டும்’ என்பதற்காக, அரசியல்வாதிகளில் பெரும்பகுதியினர், இந்தக் குற்றத்தை விரும்பிச் செய்கின்றனர். பல் இல்லாப்பாம்புகள் கடித்தாலும் விஷமில்லை என்றான பிறகு, யாருக்குத்தான் பயமிருக்கும்? ஆகவே, தேர்தல்தோறும் ‘பெய்டு நியூஸ்’ சர்ச்சை கிளம்பிக் கொண்டே இருக்கிறது.
பணம் வாங்கிக்கொண்டு, ஒரு தரப்புக்கு ஆதரவாகவோ, இன்னொரு தரப்புக்கு எதிராகவோ வெளியிடப்படும் செய்திகளை, ‘பெய்டு நியூஸ்’ எனலாம். ‘வாங்கப்பட்ட செய்தி’ என்றோ, ‘விலைக்கு வாங்கிய செய்தி’ என்றோ தமிழில் குறிப்பிடுவது சரியாக இருக்கும்.
நாடு முழுவதும் இலை மறை காயாக இருந்த ‘பெய்டு நியூஸ்’ விவகாரம், மகாராஷ்டிராவில் முந்தைய சட்டப்பேரவை தேர்தலின்போது, பூதாகரமாக வெடித்தது. முதல்வர் அசோக் சவானை புகழ்ந்து, வெவ்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாகின. ஒரே செய்தி, ஒரு தலைப்பு. வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருந்தது கட்டுரை. அதுவும், வெவ்வேறு நபர்கள் எழுதியதாக பெயருடன் இந்த கட்டுரைகள் வெளியாகின.
இவை, பணம் கொடுத்து வெளியிடப்பட்டவை என்பதற்கு ஆதாரம் தேவையில்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? இது குறித்து ஆங்கிலப்பத்திரிகையில் செய்தி வெளியானதும், உறக்கத்தில் இருந்த தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டது; கொஞ்சம் விசாரித்தது. பிறகு அப்படியே விட்டு விட்டது.
ஆதர்ஷ் அடுக்குமாடி திட்ட ஊழல் புகாரில்தான் அசோக் சவான் பதவி விலகினாரே தவிர, ‘பெய்டு நியூஸ்’ புகாரால் அவரை எதுவும் செய்து விட முடியவில்லை. விளைவு, அடுத்தடுத்த தேர்தல்களிலும் ‘பெய்டு நியூஸ்’ புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
இப்போது நடந்து முடிந்துள்ள ஹரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல்களில் கூட, ‘பெய்டு நியூஸ்’ வெளியிட்டதாக, 80 புகார்களை விசாரித்து, உறுதியும் செய்திருக்கிறது, தேர்தல் ஆணையம். அசோக் சவான் சிக்கிக் கொண்டதாலோ என்னவோ, இந்தமுறை மகாராஷ்டிராவில் வெறும் 13 புகார்கள் மட்டுமே உறுதியாகின. ஆனால், ஹரியானாவில் 67 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இப்பிரச்னைக்கு தீர்வாக, ‘பணத்துக்கு செய்தி வெளியிடுவதை, தேர்தல் குற்றமாக கருதி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. இது தொடர்பான தங்கள் பரிந்துரை, மத்திய அரசிடம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் கவலைப்படுகிறார்.
‘‘பெய்டு நியூஸ் தற்போது தேர்தல் குற்றமாக கருதப்படுவதில்லை. அதை தேர்தல் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சட்ட அமைச்சகத்துக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
‘‘அவ்வாறு தேர்தல் குற்றமாக கருதப்பட்டால், தவறு செய்யும் வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பாக அமையும். ஆணையத்தின் பரிந்துரை, மத்திய அரசிடம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதால் எதுவும் செய்ய இயலவில்லை. தற்போதைய சூழ்நிலையில், தவறிழைத்தோர் மீதான நடவடிக்கை, சட்டத்தின் துணையின்றியே மேற்கொள்ளப்படுகிறது,’’ என்கிறார், சம்பத்.
தேர்தல் குற்றமாக இருந்தால் மட்டும் என்ன நடந்து விடப்போகிறது? அது ஒரு வகையில், கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பது போலத்தான். போகாத ஊருக்கு வழிகாட்டும் தேர்தல் ஆணையம், ‘பெய்டு நியூஸ்’ விவகாரத்தில் தொலைக்காட்சிகளின் பங்கு குறித்து எந்த புகாரும் எழுப்புவதில்லை.
நாட்டில் வெவ்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் தொலைக்காட்சிகள் நடத்தப்படுகின்றன.  கட்சி சார்பு தொலைக்காட்சிகளில் வெளியாகும் செய்திகள், செய்தி போன்ற நிகழ்ச்சிகள், குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவான ஆட்களை மட்டும் வைத்து நடத்தப்படும் விவாதங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆணையம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
தனியார் எப்.எம்., ரேடியோக்களில் செய்தி வெளியிடுவதற்கு அனுமதியில்லை. உள்ளூர் சேனல்களுக்கும் இதே நிபந்தனைகள் உண்டு. ஆனால், நடப்பது என்ன? செய்தி என்ற பெயர்தான் இல்லையே தவிர, எப்.எம்., ரேடியோக்களிலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் கட்சிகளுக்கு ஆதரவான பிரசாரங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருக்கும் தேர்தல் ஆணையம், தேர்தலுக்குத் தேர்தல்,  புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதாக பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறது. ஏதோ மின்னணு ஓட்டு இயந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டதால்தான், இந்திய தேர்தல் ஆணையர்கள், உலகளவில் பெருமை பேசித்திரிய முடிகிறது. இல்லையென்றால், இந்தியத் தேர்தல்கள் நடத்தப்படும் லட்சணம், நாட்டுக்கு நாடு நாறிக் கொண்டிருக்கும் என்பதே உண்மை. 

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

பெருகுவது யார் வருவாய்?

உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில், வருவாயை பெருக்குவதாக சொல்லி, ஆங்காங்கே, கடைகள், வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருப்பர். அவற்றில் ஒரு முறை, ஒருவர் வாடகைக்கு வந்து விட்டால் போதும், அதன்பிறகு அவர்தான் அந்த கடையின் உரிமையாளர் ஆகி விடுவார்.
அவர் செத்துப் போனாலும், அவரது வாரிசுதாரர் வந்து உட்கார்ந்து விடுவார். அவரால் கடை நடத்த முடியவில்லை என்றால், வேறு யாருக்காவது கடையை விற்று விட்டுப் போய் விடுவார். அதெப்படி அரசு கட்டடத்தை, விற்க முடியும் என்றெல்லாம் கேட்கப்படாது. அது அப்படித்தான்.
இரண்டு பேரும் பாகஸ்தர்களாக இருந்து தொழில் செய்தது போல், ஒரு ஒப்பந்தப் பத்திரம் ஒன்றை தயார் செய்து கொள்வர். பிறகு, 'இருவரும் தொழிலில் பிரிந்து விடுவோம், எனக்கு தொழில் செய்ய விருப்பமில்லை, வாடகைக்கு பிடித்த கடையை இனிமேல் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்' என்று பிரிவினை பத்திரமும் தயார் செய்வர். அப்புறம் அந்தக்கடை புதியவருக்கு சொந்தமாகி விடும். அவருக்கு முடியவில்லை என்றால், அடுத்தவருக்கு வி்ற்பார். எல்லாம், முதலில் சொன்ன நடைமுறைதான். தமிழகம் முழுவதும் அரசு வணிக வளாகங்கள் எல்லாம் இப்படித்தான் சீரழிகின்றன.
ஒரு சம்பவம். நகராட்சி பஸ்ஸ்டாண்டில், ஒரு வணிக வளாகம் இருக்கிறது. அதில் தரை தளம், முதல் தளம் என இரண்டு தளங்கள் கொண்ட வணிக வளாகத்தை வாடகைக்கு எடுத்திருந்தவர், நொடிந்து போனார். அவரால் கடை நடத்த முடியவில்லை. பெரும் தொகைக்கு விற்று விட்டார். பத்தாண்டுக்கு முன்னாகவே, 60 லட்சம் என்றார்கள். நம்புங்கள், நகராட்சி கட்டடத்துக்குதான், இந்த விலை. நகராட்சியின் முக்கிய புள்ளிகளுக்கான கவனிப்புச் செலவு தனி.
அரசு வணிக வளாகங்களில் கடை வாடகைக்கு எடுப்பவர்களுக்கென்று ஆயிரம் விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை அரசும் சரி, அதிகாரிகளும் சரி, பெரிதாக மதிப்பதில்லை. அவற்றில் இருக்கும் ஓட்டைகள் பலவற்றை அவர்கள் தானே, காட்டிக்கொடுக்கின்றனர்.
தரை தளத்தில் கடை நடத்தும் ஒருவர், பக்கத்து கடையை மேற்சொன்ன நடைமுறைப்படி கடையை விலைக்கு வாங்கி விட்டார். இப்போது இரு கடைகளையும் இணைத்தால்தான் அவருக்குப் பயன். நடுவில் சுவர் இருக்கிறது. அதை அகற்றி விட்டார். இது தரை தளம். அதன் சுவரை அகற்றினால், மேல் தளம் பாதிக்காதா? பாதிக்கும்தான். கட்டட உறுதித்தன்மை போய் விடும். பாதாளம் வரை பாயும் பணம், பக்கத்து கடை சுவர் இடிப்பதற்கு பாயாதா என்ன? இப்படிப்பட்ட பல வணிக வளாகங்கள், தமிழகம் முழுவதும் இருக்கின்றன.
கட்சிக்காரர் ஒருவர் சொன்னது நினைவில் இருக்கிறது. ''சார், நீங்க வேற, இப்பத்தான் பத்திரப்பதிவுல ரொம்ப உஷாரா இருக்காங்க. முன்னயெல்லாம், ஹைவேஸ் ரோட்டுல கடை வெக்குற உரிமைய 40 ஆயிரத்துக்கு வித்துட்டு, பத்திரம் பதிவு செஞ்சு கொடுத்த கதையெல்லாம் நடந்திருக்கு!''

ஞாயிறு, 6 ஜூலை, 2014

யார் குற்றம்?

அன்றாடம் வெளியாகும் பத்திரிகை செய்திகளைப் பார்க்கும்போது, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர சம்பவங்கள்,  அதிகரித்து விட்டது நன்றாகவே தெரிகிறது. ‛மனித மனதின் அடி ஆழத்தில், ஏதோ ஒரு மூலையில் படிந்து கிடக்கும் வக்கிரம்தான் இதற்கெல்லாம் காரணம்’ என்கின்றனர், உளவியல் வல்லுநர்கள்.
மனதை அடக்கி ஆளும் வல்லமை கொண்ட மனிதன், வக்கிர எண்ணங்களை வெற்றி கொண்டு விடுகின்றான்; மனதை ஆளத் தெரியாத மனிதன், வக்கிரங்களுக்கு அடிமையாகி விடுகிறான். வக்கிர எண்ணங்கள், வகைதொகையற்றவை. அவற்றின் உந்துதலே, உலகின் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம். மது, அவற்றை உந்தி மேலெழுப்பி, ஊருக்குள் அனுப்பி விடுகிறது. விளைவுகளே, அன்றாடம், பத்திரிகை செய்திகளாக இடம் பெறுகின்றன.
......
கரூரில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கிராமம் அது. அதிகபட்சம் 100 வீடுகள் இருக்கும். சாலையோரம் சில டீக்கடைகள், பெட்டிக்கடைகளை தவிர வேறு பெரிதாக சொல்லிக் கொள்வதற்கு எதுவுமில்லாத ஊர் அது.
இரவு 10 மணிக்கு மேலாகி விட்டால், அந்த ஊரில் போக்குவரத்து நெரிசல் தாறுமாறாக அதிகரித்து விடும். சில நேரங்களில், போலீசார் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நிலைகூட ஏற்படுவதுண்டு. இப்படி பெரும்கூட்டம் கூடுவதால், இரவு ரோந்து  போலீசாருக்கு, அங்கு செல்வது கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது.
அந்த வழியில் வாகனம் இயக்கும் டிரைவர்கள், கிளீனர்கள், வாலிப, வயோதிக அன்பர்கள் அனைவருக்கும் அத்துபடியான கிராமம் அது.  இரவுப்பணிக்காக தினமும் சேலம் சென்று திரும்பியபோதுதான், அந்த கிராமத்துக்கு இருக்கும் கிராக்கி,  தெரியவந்தது.
நான் பணி முடிந்து வீடு திரும்பும்போது, அதாவது அதிகாலை 2 மணிக்குக்கூட, அந்த கிராமத்தில் குறைந்தது 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், லாரிகள் நின்றிருக்கும். எதற்கு...? டீ குடிப்பதற்குத்தான்!  அதுவும் குறிப்பிட்ட கடையில் மட்டுமே கூட்டம் இருக்கும். மற்ற கடைகளில் எல்லாம் ஈ, கொசு கூட இருக்காது; கடைக்காரர்கள் தூங்கி வழிந்து கொண்டிருப்பர்.
குறிப்பிட்ட இந்த கடையில் மட்டும், ‛நான்-ஸ்டாப்’ ஆக, டீ போடும் வேலை நடந்து கொண்டே இருக்கும். டீயில் ஏதேனும் விசேஷம் இருக்கிறதா என்றெல்லாம் கேட்கத்தோன்றுமே? அதையும் சொல்லி விடுகிறேன். அதில் அப்படியொன்றும் சிறப்பில்லை. வழக்கமான கலப்படத்
தூள்; விலையும் வழக்கமான விலைதான். வேறு என்னதான், ஸ்பெஷல்...?
கடையில் கல்லாவில் இருக்கும் பெண் ஒருவர்தான், இவ்வளவு களேபரத்துக்கும் காரணம். அவர் ஒன்றும், மோசமானவர் அல்ல. அவரது பேச்சிலும், செய்கையிலும் யாரும் குறை கூற வாய்ப்பில்லை.
கல்லாப்பெட்டியில் அமர்ந்திருக்கும் அவர், வாடிக்கையாளர்களிடம் சிரித்த முகத்துடன் பேசும் வழக்கம் கொண்டவர். அவரது அழகும், சிரிப்பும் தான், ஏராளமானோரை கடைக்கு கவர்ந்திழுக்கின்றன என்பது சில நாட்களிலேயே எனக்குப் புரிந்து விட்டது. ஆனால், கடைக்கு செல்பவர்களில் பெரும்பகுதியினர், அவரது சிரிப்புக்கும், பேச்சுக்கும்தான் செல்கின்றனர் என்பது உண்மையிலேயே வருந்தத்தக்க செய்தி.
போலீசார் உட்பட அனைவருக்கும் இந்த விஷயம் தெரியும். கடையில் இருந்து வியாபாரம் செய்வதை யாராவது, தவறென்று சொல்ல முடியுமா? இப்படி டீக்கடையில் இருக்கும் பெண்ணுக்காக, பல் இளித்துக் கொண்டு திரியும் ஜொள்ளர்களால் எதுவும் அசம்பாவிதம் நேரிட்டு விடக்கூடாது என்பதற்காக, போலீசார் இரவு மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருந்த நாட்களும் உண்டு.
பிஞ்சுக் குழந்தையை கூட விட்டு வைக்காத கொடியவர்கள் சுற்றும் பூமியில், பிறன்மனை நோக்காப் பேராண்மையாளர்கள், அதுவும் இரவு நேரத்தில் டீ குடிக்க வருவதெல்லாம் சாத்தியமா என்ன?


வியாழன், 3 ஜூலை, 2014

சத்திய சோதனை!

‛நல்லவர்களை கடவுள் அடிக்கடி சோதிப்பார்’ என்பது நாமறிந்த ஒன்றுதான். அன்று காலை 6 மணிக்கெல்லாம், எனக்கு கடவுளின் சோதனை ஆரம்பமாகி விட்டது. உயர் அதிகாரி தொலைபேசியில் அழைத்தார்.
‛‛ கோவிலுக்கு ஏழரை மணிக்கு வந்துடறேன். கொஞ்சம் வர முடியுமா?’’
வேண்டுதல் தொனி இருந்தாலும், அது உத்தரவுதான். அதிகாரியாயிற்றே! அவசரம் அவசரமாக குளித்து, உடைமாற்றி, கோவிலுக்கு ஓடினேன். கோவில் அர்ச்சகர்களை தெரியாது. ‛மரியாதை எல்லாம் நல்லபடியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதிகாரி முன் நம் மானம் போய்விடும்’ என்று, படபடப்பாக இருந்தது.
‛தெரிந்த முகங்கள் இருக்கின்றனரா’ என, தேடினேன். நல்ல வேளையாக, ஊழியர்கள் இருவர் இருந்தனர். அவர்களுக்கு, வாயெல்லாம் பல்லாக சிரித்தபடி, வணக்கம்போட்டு, குசலம் விசாரித்து, விஷயத்தை சொன்னேன்.
‛அதுக்கென்ன சார், தாராளமா வரட்டும், சிறப்பா செஞ்சுருவோம்’ என்றார், கோவில் ஊழியர். லேசாக நிம்மதி வந்தது.
கோவில் வாசலில் காத்திருந்தேன். அதிகாரி, காரில் வந்தார்.
முன்கூட்டியே சிக்னல் தரப்பட்டிருந்தபடியால், கோவில் அர்ச்சகர்கள் இருவர் வந்து அதிகாரியை வரவேற்றனர். சன்னதி முன் உட்கார வைத்து, சிறப்பு பூஜை செய்தனர். அர்ச்சனை எல்லாம் செய்தாகி விட்டது. பரிவட்டம் கட்டி, மாலை மரியாதை செய்து, பிரசாதம் கொடுத்து, பெரிய கும்பிடுபோட்டு வழியனுப்பினர்.
அதிகாரிக்கு மிக்க மகிழ்ச்சி. ‛வெரிகுட், வெரிகுட்’ என்று பாராட்டினார். ‛ கோவிலை ஒரு சுத்து சுத்திரட்டுமா’ என்று கேட்டபடி புறப்பட்டார்.  ‛எப்படியோ, மிக எளிதில் சமாளித்து விட்டோம்’ என்று எனக்கு உள்ளூர கொண்டாட்டம்.
அதற்குள், கோவில் வாசலுக்கு கார் வந்து விட்டது. கார் கதவை திறந்து வைத்துக் கொண்டு, டிரைவர் காத்திருந்தார்.  கோவிலை சுற்றி வந்த அதிகாரி, எதையோ தேடிக் கொண்டிருந்தார். ‛ஏம்ப்பா, இங்கதான் விட்டிருந்தேன், காணமே’ என்றார். அவர் செருப்பைத்தேடுவதை, வினாடி நேரத்திலேயே புரிந்து கொண்டு விட்ட எனக்கு, நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது.
ஐயோ! பதற்றத்தில் அங்குமிங்கும் ஓடினேன், இல்லையில்லை தேடினேன். அதிகாரியும்தான். ஓரிரு நிமிடங்கள் தேடிய அதிகாரி, பின் சுதாரித்துக் கொண்டார். ‛சரி விடுப்பா, பழைய செருப்புதான், போகட்டும், கார்ல ஷூ இருக்கு’ என்றபடி, காருக்குள் ஏறிக் கொண்டார். ‛சரி வரட்டுமா’ என்று, அவர் கூறிச் சென்று இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகியும், எனக்கு சுய நினைவே இல்லை.
கோவில் ஊழியர் வந்து கூப்பிட்டபோதுதான், நினைவு திரும்பியது. பெரும் அதிர்ச்சி. எல்லாவற்றையும் சிறப்பாக செய்து, செருப்பை கோட்டை விட்டு விட்டோமே! அதிகாரி கோபித்துக் கொள்வாரோ? கிலி பிடித்துக் கொண்டது. கோவில் ஊழியர், ‛‛சார், அதெல்லாம் எதுவும் நடக்காது. பகவான் மேல பாரத்தப்போட்டுருங்க சார்,’’ என்று ஆறுதலாக பேசினார்.
‛‛சரி சார், காலங்காத்தால யாராச்சும் செருப்பு திருடுவாங்களா’’
இது, எனது சந்தேகம்.
‛‛சார், நீங்க தேங்கா, பழம், மாலை எல்லாம் இங்க கடைல வாங்குனா, செருப்புக்கு பங்கம் வராது.  தேங்கா பழம் வாங்காமப்போனாலோ, இல்ல பிச்சைக்காரங்களுக்கு பிச்சை போடாம போனாலோ, செருப்ப காணாமப் போக்கிடுவாங்க. இதுல கடைக்காரங்களும், கோவில் வாசல்ல இருக்க பிச்சைக்காரங்களும் கூட்டு. இனியாவது உஷாரா இருந்துக்குங்க’’
இன்று ஒரு தகவல் மாதிரி, அன்று ஒரு உண்மையை நான் புரிந்து கொண்டேன். எப்போது, எந்த கோவிலுக்கு போனாலும், செருப்பில்லாமல் போவதுதான், நமக்கும் நல்லது; பாக்கெட்டுக்கும் நல்லது; பாவம், பகவானுக்கும் நல்லது. பிறகு, நாட்டில் இருக்கும் ஆயிரம் பிரச்னைகளை தீர்க்கவே, பகவான் ஓவர்டைம் பார்க்க வேண்டியிருக்கும். இதில், நமது செருப்புக்கெல்லாமா, அவர் காவல் இருப்பார்?

.....
திருப்பூரில் 20 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவம் இது. அந்த நிறுவனத்துக்குப்பிறகு, மூன்று நிறுவனங்கள் மாறி வி்ட்டேன் . ஆனாலும், மேற்கண்ட சம்பவம் நினைவுக்கு வந்தாலே, வியர்த்துக் கொட்டி விடும். கடவுளின் சோதனையல்லவா?