செவ்வாய், 21 அக்டோபர், 2014

தேர்தல் ஆணையமும், தேறாத பரிந்துரையும்!

தேர்தலுக்கு தேர்தல், ‘பெய்டு நியூஸ்’ என்ற வார்த்தைப் பிரயோகம் ஊருக்குள் உலா வருவதைக் காண முடிகிறது. ‘லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்’ என்கிறது சட்டம். அதுபோலத்தான், ‘பெய்டு நியூஸ்’ வெளியிடுவதும் குற்றம்; வெளியிட வைப்பதும் குற்றம்.
‘எதிர்காலம் வளமாக இருக்க வேண்டும்’ என்பதற்காக, அரசியல்வாதிகளில் பெரும்பகுதியினர், இந்தக் குற்றத்தை விரும்பிச் செய்கின்றனர். பல் இல்லாப்பாம்புகள் கடித்தாலும் விஷமில்லை என்றான பிறகு, யாருக்குத்தான் பயமிருக்கும்? ஆகவே, தேர்தல்தோறும் ‘பெய்டு நியூஸ்’ சர்ச்சை கிளம்பிக் கொண்டே இருக்கிறது.
பணம் வாங்கிக்கொண்டு, ஒரு தரப்புக்கு ஆதரவாகவோ, இன்னொரு தரப்புக்கு எதிராகவோ வெளியிடப்படும் செய்திகளை, ‘பெய்டு நியூஸ்’ எனலாம். ‘வாங்கப்பட்ட செய்தி’ என்றோ, ‘விலைக்கு வாங்கிய செய்தி’ என்றோ தமிழில் குறிப்பிடுவது சரியாக இருக்கும்.
நாடு முழுவதும் இலை மறை காயாக இருந்த ‘பெய்டு நியூஸ்’ விவகாரம், மகாராஷ்டிராவில் முந்தைய சட்டப்பேரவை தேர்தலின்போது, பூதாகரமாக வெடித்தது. முதல்வர் அசோக் சவானை புகழ்ந்து, வெவ்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாகின. ஒரே செய்தி, ஒரு தலைப்பு. வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருந்தது கட்டுரை. அதுவும், வெவ்வேறு நபர்கள் எழுதியதாக பெயருடன் இந்த கட்டுரைகள் வெளியாகின.
இவை, பணம் கொடுத்து வெளியிடப்பட்டவை என்பதற்கு ஆதாரம் தேவையில்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? இது குறித்து ஆங்கிலப்பத்திரிகையில் செய்தி வெளியானதும், உறக்கத்தில் இருந்த தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டது; கொஞ்சம் விசாரித்தது. பிறகு அப்படியே விட்டு விட்டது.
ஆதர்ஷ் அடுக்குமாடி திட்ட ஊழல் புகாரில்தான் அசோக் சவான் பதவி விலகினாரே தவிர, ‘பெய்டு நியூஸ்’ புகாரால் அவரை எதுவும் செய்து விட முடியவில்லை. விளைவு, அடுத்தடுத்த தேர்தல்களிலும் ‘பெய்டு நியூஸ்’ புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
இப்போது நடந்து முடிந்துள்ள ஹரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல்களில் கூட, ‘பெய்டு நியூஸ்’ வெளியிட்டதாக, 80 புகார்களை விசாரித்து, உறுதியும் செய்திருக்கிறது, தேர்தல் ஆணையம். அசோக் சவான் சிக்கிக் கொண்டதாலோ என்னவோ, இந்தமுறை மகாராஷ்டிராவில் வெறும் 13 புகார்கள் மட்டுமே உறுதியாகின. ஆனால், ஹரியானாவில் 67 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இப்பிரச்னைக்கு தீர்வாக, ‘பணத்துக்கு செய்தி வெளியிடுவதை, தேர்தல் குற்றமாக கருதி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. இது தொடர்பான தங்கள் பரிந்துரை, மத்திய அரசிடம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் கவலைப்படுகிறார்.
‘‘பெய்டு நியூஸ் தற்போது தேர்தல் குற்றமாக கருதப்படுவதில்லை. அதை தேர்தல் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சட்ட அமைச்சகத்துக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
‘‘அவ்வாறு தேர்தல் குற்றமாக கருதப்பட்டால், தவறு செய்யும் வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பாக அமையும். ஆணையத்தின் பரிந்துரை, மத்திய அரசிடம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதால் எதுவும் செய்ய இயலவில்லை. தற்போதைய சூழ்நிலையில், தவறிழைத்தோர் மீதான நடவடிக்கை, சட்டத்தின் துணையின்றியே மேற்கொள்ளப்படுகிறது,’’ என்கிறார், சம்பத்.
தேர்தல் குற்றமாக இருந்தால் மட்டும் என்ன நடந்து விடப்போகிறது? அது ஒரு வகையில், கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பது போலத்தான். போகாத ஊருக்கு வழிகாட்டும் தேர்தல் ஆணையம், ‘பெய்டு நியூஸ்’ விவகாரத்தில் தொலைக்காட்சிகளின் பங்கு குறித்து எந்த புகாரும் எழுப்புவதில்லை.
நாட்டில் வெவ்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் தொலைக்காட்சிகள் நடத்தப்படுகின்றன.  கட்சி சார்பு தொலைக்காட்சிகளில் வெளியாகும் செய்திகள், செய்தி போன்ற நிகழ்ச்சிகள், குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவான ஆட்களை மட்டும் வைத்து நடத்தப்படும் விவாதங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆணையம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
தனியார் எப்.எம்., ரேடியோக்களில் செய்தி வெளியிடுவதற்கு அனுமதியில்லை. உள்ளூர் சேனல்களுக்கும் இதே நிபந்தனைகள் உண்டு. ஆனால், நடப்பது என்ன? செய்தி என்ற பெயர்தான் இல்லையே தவிர, எப்.எம்., ரேடியோக்களிலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் கட்சிகளுக்கு ஆதரவான பிரசாரங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருக்கும் தேர்தல் ஆணையம், தேர்தலுக்குத் தேர்தல்,  புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதாக பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறது. ஏதோ மின்னணு ஓட்டு இயந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டதால்தான், இந்திய தேர்தல் ஆணையர்கள், உலகளவில் பெருமை பேசித்திரிய முடிகிறது. இல்லையென்றால், இந்தியத் தேர்தல்கள் நடத்தப்படும் லட்சணம், நாட்டுக்கு நாடு நாறிக் கொண்டிருக்கும் என்பதே உண்மை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக