ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஆயிரம் ரூபாய் அக்கப்போர்!

இது, யாரும், யாரையும் நம்பாத உலகம். ஆகவேதான், பணம் புழங்கும் நிறுவனங்களில் மட்டுமல்ல; பஸ், ரயிலில்கூட, கண்காணிப்பு கேமராக்கள் வந்து விட்டன. ‘நம்பிக்கை, அதுதானே வாழ்க்கை’ என்பதெல்லாம், வெற்று விளம்பரம் மட்டுமே என்பதை, வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு விழித்துக் கொண்டு நிற்கும் கேமராக்கள், சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதாக, சமீப காலம் வரை நம்பிக் கொண்டிருந்தது சமூகம்.
‘பார்த்தால் சங்கடப்படுவாரே’ என்றெண்ணி, மறைத்து வைத்திருக்கும் இயந்திரத்தில் ரூபாய் நோட்டின் உண்மைத்தன்மையை கடைக்காரர்கள் உறுதி செய்த காலம் மலையேறி விட்டது. நம் கண்களுக்கு முன்பாகவே, ரூபாய் நோட்டுக்களை உற்று உற்றுப் பார்த்து, ஒரு முறைக்கு இரு முறை இயந்திரத்தில் பரிசோதித்து வாங்கும் காலமிது.
அப்பேர்ப்பட்ட சோதனைகள் பலவற்றை சந்தித்திருக்கும் சமூகம், பணத்தை பொறுத்தவரை, எதற்கும், யாரையும் நம்புவதில்லை என்பதை கொள்கையாகவே கொண்டிருந்தது. வங்கி கேஷியர்களை தவிர, வேறு எவரையும் நம்பக்கூடாது என்பதே, கொள்கையின் அடிப்படை. அதற்குரிய காரணங்கள் பலப்பல. அவற்றை நீட்டி முழக்குவது, தனக்குத்தானே தம்பட்டம் தட்டிக் கொள்வது போலாகும் என்கிறபடியால், தன்முனைப்புடன் அதைத் தவிர்க்கவே விரும்புகிறது, இந்த தற்பெருமையற்ற சமூகம்.
அதற்காக, ‘கடன் கொடுப்பதும் இல்லை; வாங்குவதும் இல்லை’ என்பதான இரும்புத்திரை கொள்கைக்குள் சிக்கி சீரழிய விரும்பாத சமூகம், அதில் பாதியை மட்டும் ‘ரிலாக்ஸ்’ செய்து, அவ்வப்போது கடனும், கைமாற்றும் வாங்கிக் கொள்வதை வழக்கமாக்கி வைத்திருந்தது.
அதாகப்பட்டது, ‘சமூகமே சிரமத்தில் சிங்கியடிக்கிறது’ என்பதாக, அவ்வப்போது ஏரியாவுக்குள் கருத்தொன்று, நிறுவப்பட்டு விடும் என்பதுவும், அதன் வாயிலாக, கடன் கேட்பாளர்கள் தொல்லை அவ்வளவாக இருக்காது என்பதுவும், கொள்கையை ‘ரிலாக்ஸ்’ செய்வதற்கான முக்கிய காரணிகள். பார்க்கும் யாரிடமும், சிரித்துச் சிரித்துப்பேசுவதையன்றி, வேறொன்றை அறியாத சமூகத்துக்கு, கொடுத்த கடனை திருப்பி வாங்கி விடுமளவுக்கு துப்பில்லை என்பது, கொள்கையில் பிடிப்பு ஏற்படுவதற்கான பிரதான காரணி.
சமூகம் அறிந்திருந்த வங்கி கேஷியர் ஒருவர், ஒரு முறைக்கு மூன்று முறை நோட்டுக்களை எண்ணி எண்ணிப் பார்ப்பார். கையில் தேய்த்துப் பரிசோதிப்பார். கண்களுக்கு அருகில் வைத்துப் பார்ப்பார். எந்திரத்தில் சரி பார்ப்பார். அப்படியொருமுறை சரிபார்த்தபோது, பொறுமையின் சிகரம் என்று பெயரெடுத்த சமூகத்துக்கே கொஞ்சம் கோபம் வந்து விட்டது. ஆனாலும், அதை சமூகம், சிரிப்பாகவே சிரித்து வெளிப்படுத்தியது.
அதிலிருந்த நாகரிக நையாண்டியை நன்றாகவே புரிந்து கொண்ட கேஷியர், ‘யாரையும் நம்பக்கூடாதுங்குகிறதுதான், இந்த வேலைக்கு பால பாடம். நீங்கெல்லாம், இந்த வேலையில ஒரு நாள் உட்காந்து பாத்தாத்தான் தெரியும்’ என்று, ‘முதல்வன்’ படத்து ரகுவரனைப்போல் சொல்லி விட்டு, மீண்டுமொருமுறை எண்ணத் தொடங்கினார்.
அதைக்கேட்டு கொஞ்சம், ‘ஜெர்க்’ ஆன சமூகம், ‘வேதம் புதிது’ படத்தில் சத்யராஜ் கன்னத்தில் அறைபடுவதைப் போன்றதொரு ரியாக்ஷனைக் காட்டிவிட்டு, பின்வாங்கியது.
சரி, சமூகத்துக்கு மனமாற்றம் ஏற்பட்டதற்கு காரணமான பிரச்னைக்கு வருவோம். மாத இறுதியை நோக்கிய வாரமொன்றில், அந்த ஆயிரம் ரூபாய் நோட்டு சமூகத்தின் கண்ணில் பட்டது. நோட்டு என்னவோ, நல்ல நோட்டுத்தான். ஆனால், ஓரத்தில் கொஞ்சம் கிழிந்து விட்டிருந்தது. கிழிந்த துண்டை வேறு காணோம். அய்யகோ! அது, எல்லாம் வல்ல சமூகத்தின் மனைவியின் கண்ணில்வேறு பட்டுத் தொலைத்து விட்டதே!
அந்த வினாடியே அக்கப்போர் கிளம்பி விட்டது. ‘எப்படியாவது அந்த நோட்டுக்கு மாற்று நோட்டு, இன்றே வாங்கி வந்தாக வேண்டும்’ என்று உத்தரவு போட்டு விட்டார் சமூகத்தின் மனைவி. ‘எந்த வங்கிக்கு போய் வாங்குவது’ என்று, சமூகத்துக்கு வந்தது பெருங்குழப்பம்.
கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. ‘ஏடிஎம்’ல் வந்த நோட்டுத்தான் என்றால், எந்த வங்கிக்கார மடையன், ‘ஆமாம், நாங்கள்தான் கிழிந்த நோட்டு, தெரியாமல் வைத்து விட்டோம்’ என்று ஏற்றுக்கொள்ளப் போகிறான் என்று, திருவிளையாடல் தருமி கணக்காக புலம்ப ஆரம்பித்தது சமூகம்.
‘சரி, ஏதாவது ஒரு முயற்சி செய்து பார்ப்போமே’ என்று அந்த தனியார் வங்கிக்குள் பயந்து பயந்து போனது சமூகம். அங்கிருந்த பெண்மணிக்கு, சமூகத்தைப் பார்த்தவுடன் பாவம் பரிதாபமாக தோன்றியிருக்க வேண்டும்.
‘எங்க ஏ.டிஎம்.ல, தவுசன்ஸ் வைக்கிறதில்லயே’ என்றபடி, பரிசோதிக்கும் கருவியில் ரூபாய் நோட்டை வைத்து, ஒரு முறைக்கு இரு முறை அம்மணி சோதித்து கொண்டிருந்தபோது, சமூகத்துக்கு இருதயம் நின்று விட்டது போலிருந்தது; சற்றே தொண்டையும் வறண்டு விட்டிருந்தது. வார்த்தைகளே வரவில்லை.
‘இல்ல மேடம், வந்து, வந்து... இங்க தான் எடுத்த ஞாபகம்’ என்று, தட்டுத் தடுமாறிய சமூகத்தின் வார்த்தைகளை கேட்டு மனமிரங்கிய அம்மணி, ‘சரி பரவாயில்ல, நீங்க சொல்றீங்க, நான் நம்புறேன்’ என்று கூறி, நோட்டை மாற்றிக் கொடுத்து விட்டார்.
அன்று, சமூகம் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே! ‘யாரையும், எப்போதும் நம்பக்கூடாது’ என்ற கொள்கைக்கு அன்றோடு முடிவு கட்டிய சமூகம், ‘ஆயிரம் ரூபாய் மாற்றிக் கொடுத்த அம்மணிக்காக, ஒரு மாமழை பெய்யட்டும்’ என்று வாயார வாழ்த்தி விடைபெற்றது.