ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஆயிரம் ரூபாய் அக்கப்போர்!

இது, யாரும், யாரையும் நம்பாத உலகம். ஆகவேதான், பணம் புழங்கும் நிறுவனங்களில் மட்டுமல்ல; பஸ், ரயிலில்கூட, கண்காணிப்பு கேமராக்கள் வந்து விட்டன. ‘நம்பிக்கை, அதுதானே வாழ்க்கை’ என்பதெல்லாம், வெற்று விளம்பரம் மட்டுமே என்பதை, வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு விழித்துக் கொண்டு நிற்கும் கேமராக்கள், சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதாக, சமீப காலம் வரை நம்பிக் கொண்டிருந்தது சமூகம்.
‘பார்த்தால் சங்கடப்படுவாரே’ என்றெண்ணி, மறைத்து வைத்திருக்கும் இயந்திரத்தில் ரூபாய் நோட்டின் உண்மைத்தன்மையை கடைக்காரர்கள் உறுதி செய்த காலம் மலையேறி விட்டது. நம் கண்களுக்கு முன்பாகவே, ரூபாய் நோட்டுக்களை உற்று உற்றுப் பார்த்து, ஒரு முறைக்கு இரு முறை இயந்திரத்தில் பரிசோதித்து வாங்கும் காலமிது.
அப்பேர்ப்பட்ட சோதனைகள் பலவற்றை சந்தித்திருக்கும் சமூகம், பணத்தை பொறுத்தவரை, எதற்கும், யாரையும் நம்புவதில்லை என்பதை கொள்கையாகவே கொண்டிருந்தது. வங்கி கேஷியர்களை தவிர, வேறு எவரையும் நம்பக்கூடாது என்பதே, கொள்கையின் அடிப்படை. அதற்குரிய காரணங்கள் பலப்பல. அவற்றை நீட்டி முழக்குவது, தனக்குத்தானே தம்பட்டம் தட்டிக் கொள்வது போலாகும் என்கிறபடியால், தன்முனைப்புடன் அதைத் தவிர்க்கவே விரும்புகிறது, இந்த தற்பெருமையற்ற சமூகம்.
அதற்காக, ‘கடன் கொடுப்பதும் இல்லை; வாங்குவதும் இல்லை’ என்பதான இரும்புத்திரை கொள்கைக்குள் சிக்கி சீரழிய விரும்பாத சமூகம், அதில் பாதியை மட்டும் ‘ரிலாக்ஸ்’ செய்து, அவ்வப்போது கடனும், கைமாற்றும் வாங்கிக் கொள்வதை வழக்கமாக்கி வைத்திருந்தது.
அதாகப்பட்டது, ‘சமூகமே சிரமத்தில் சிங்கியடிக்கிறது’ என்பதாக, அவ்வப்போது ஏரியாவுக்குள் கருத்தொன்று, நிறுவப்பட்டு விடும் என்பதுவும், அதன் வாயிலாக, கடன் கேட்பாளர்கள் தொல்லை அவ்வளவாக இருக்காது என்பதுவும், கொள்கையை ‘ரிலாக்ஸ்’ செய்வதற்கான முக்கிய காரணிகள். பார்க்கும் யாரிடமும், சிரித்துச் சிரித்துப்பேசுவதையன்றி, வேறொன்றை அறியாத சமூகத்துக்கு, கொடுத்த கடனை திருப்பி வாங்கி விடுமளவுக்கு துப்பில்லை என்பது, கொள்கையில் பிடிப்பு ஏற்படுவதற்கான பிரதான காரணி.
சமூகம் அறிந்திருந்த வங்கி கேஷியர் ஒருவர், ஒரு முறைக்கு மூன்று முறை நோட்டுக்களை எண்ணி எண்ணிப் பார்ப்பார். கையில் தேய்த்துப் பரிசோதிப்பார். கண்களுக்கு அருகில் வைத்துப் பார்ப்பார். எந்திரத்தில் சரி பார்ப்பார். அப்படியொருமுறை சரிபார்த்தபோது, பொறுமையின் சிகரம் என்று பெயரெடுத்த சமூகத்துக்கே கொஞ்சம் கோபம் வந்து விட்டது. ஆனாலும், அதை சமூகம், சிரிப்பாகவே சிரித்து வெளிப்படுத்தியது.
அதிலிருந்த நாகரிக நையாண்டியை நன்றாகவே புரிந்து கொண்ட கேஷியர், ‘யாரையும் நம்பக்கூடாதுங்குகிறதுதான், இந்த வேலைக்கு பால பாடம். நீங்கெல்லாம், இந்த வேலையில ஒரு நாள் உட்காந்து பாத்தாத்தான் தெரியும்’ என்று, ‘முதல்வன்’ படத்து ரகுவரனைப்போல் சொல்லி விட்டு, மீண்டுமொருமுறை எண்ணத் தொடங்கினார்.
அதைக்கேட்டு கொஞ்சம், ‘ஜெர்க்’ ஆன சமூகம், ‘வேதம் புதிது’ படத்தில் சத்யராஜ் கன்னத்தில் அறைபடுவதைப் போன்றதொரு ரியாக்ஷனைக் காட்டிவிட்டு, பின்வாங்கியது.
சரி, சமூகத்துக்கு மனமாற்றம் ஏற்பட்டதற்கு காரணமான பிரச்னைக்கு வருவோம். மாத இறுதியை நோக்கிய வாரமொன்றில், அந்த ஆயிரம் ரூபாய் நோட்டு சமூகத்தின் கண்ணில் பட்டது. நோட்டு என்னவோ, நல்ல நோட்டுத்தான். ஆனால், ஓரத்தில் கொஞ்சம் கிழிந்து விட்டிருந்தது. கிழிந்த துண்டை வேறு காணோம். அய்யகோ! அது, எல்லாம் வல்ல சமூகத்தின் மனைவியின் கண்ணில்வேறு பட்டுத் தொலைத்து விட்டதே!
அந்த வினாடியே அக்கப்போர் கிளம்பி விட்டது. ‘எப்படியாவது அந்த நோட்டுக்கு மாற்று நோட்டு, இன்றே வாங்கி வந்தாக வேண்டும்’ என்று உத்தரவு போட்டு விட்டார் சமூகத்தின் மனைவி. ‘எந்த வங்கிக்கு போய் வாங்குவது’ என்று, சமூகத்துக்கு வந்தது பெருங்குழப்பம்.
கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. ‘ஏடிஎம்’ல் வந்த நோட்டுத்தான் என்றால், எந்த வங்கிக்கார மடையன், ‘ஆமாம், நாங்கள்தான் கிழிந்த நோட்டு, தெரியாமல் வைத்து விட்டோம்’ என்று ஏற்றுக்கொள்ளப் போகிறான் என்று, திருவிளையாடல் தருமி கணக்காக புலம்ப ஆரம்பித்தது சமூகம்.
‘சரி, ஏதாவது ஒரு முயற்சி செய்து பார்ப்போமே’ என்று அந்த தனியார் வங்கிக்குள் பயந்து பயந்து போனது சமூகம். அங்கிருந்த பெண்மணிக்கு, சமூகத்தைப் பார்த்தவுடன் பாவம் பரிதாபமாக தோன்றியிருக்க வேண்டும்.
‘எங்க ஏ.டிஎம்.ல, தவுசன்ஸ் வைக்கிறதில்லயே’ என்றபடி, பரிசோதிக்கும் கருவியில் ரூபாய் நோட்டை வைத்து, ஒரு முறைக்கு இரு முறை அம்மணி சோதித்து கொண்டிருந்தபோது, சமூகத்துக்கு இருதயம் நின்று விட்டது போலிருந்தது; சற்றே தொண்டையும் வறண்டு விட்டிருந்தது. வார்த்தைகளே வரவில்லை.
‘இல்ல மேடம், வந்து, வந்து... இங்க தான் எடுத்த ஞாபகம்’ என்று, தட்டுத் தடுமாறிய சமூகத்தின் வார்த்தைகளை கேட்டு மனமிரங்கிய அம்மணி, ‘சரி பரவாயில்ல, நீங்க சொல்றீங்க, நான் நம்புறேன்’ என்று கூறி, நோட்டை மாற்றிக் கொடுத்து விட்டார்.
அன்று, சமூகம் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே! ‘யாரையும், எப்போதும் நம்பக்கூடாது’ என்ற கொள்கைக்கு அன்றோடு முடிவு கட்டிய சமூகம், ‘ஆயிரம் ரூபாய் மாற்றிக் கொடுத்த அம்மணிக்காக, ஒரு மாமழை பெய்யட்டும்’ என்று வாயார வாழ்த்தி விடைபெற்றது.

ஞாயிறு, 15 நவம்பர், 2015

வந்ததே சோதனை!

நாட்டு நிலவரமே தெரியாமல், பல பேர், ஆர்வக்கோளாறில், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு கும்மியடிக்கிறார்கள். அதுவும், விடுமுறை நாளென்றால் கொண்டாட்டம் அளவில்லாமல் போய் விடுகிறது. அவர்களுக்கெல்லாம், ஊட்டியில் நடந்த கதை தெரியவில்லை போலிருக்கிறது.
ஸ்டேட்டஸ் போட்டவரை, போலீஸ் பிடித்துக் கொண்டு போன நாள் முதலே, ஊருக்குள் ஒரே பீதியாக இருக்கிறது. தெரிந்தவர் என்பதற்காக, ‘என்ன ஸ்டேட்டஸ் போட்டார்’ என்றே படித்துப் பார்க்காமல், லைக் போட்டு விடுவதுதான், நம்மவர் பலருக்கு வழக்கம்.
அப்படி லைக் போட்ட பல பேர், இப்போது, ‘போலீஸ் வந்து விடுமோ’ என்ற பீதியில் இருக்கிறார்களாம். இதில், சில பேர், அந்த வில்லங்க ஸ்டேட்டஸை ஷேர் செய்து விட்டார்களாம். அவர்களது நிலைமையெல்லாம் என்னவாகும் என்றே தெரியவில்லை.
‘ஏதோ, என் புருஷனும் கச்சேரிக்குப் போனான்’ கதையாக பேஸ்புக்கில், காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் பல பேர், ‘இது, ஏதோ விவகாரம் போலிருக்கிறது’ என்று, கணக்கை க்ளோஸ் பண்ணுவது எப்படி என்று விசாரித்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி.
உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் விட்டால், நமது டைம்லைனில் யாரேனும் வில்லங்கப் பேர்வழிகள், எதையாவது கொண்டு சேர்த்து விடும் அபாயம், நிறையவே உண்டு. அப்படி ஏதேனும் நடந்துவிட்டால், போலீஸ்காரர்கள் யாரைப்பிடிப்பார்கள் என்கிற சந்தேகம், சில நாட்களாகவே மண்டையை குடைகிறது.
‘அடுத்தவர் டைம்லைனில் போட்டு விட்டவர் மீது தான் தவறு, அவரை மட்டும்தான் பிடிப்போம்’ என்றெல்லாம், நிச்சயமாக, எந்தப் போலீஸ்காரரும் சொல்ல வாய்ப்பில்லை. அதற்கெல்லாம் ஞானம் வேண்டுமே! ஆகவே, டைம்லைன் உரிமையாளர் நிச்சயம் குற்றவாளியாகவோ, குறைந்தபட்சம் சாட்சியாகவோ வழக்கில் சேர்க்கப்பட வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது.
இப்படியெல்லாம் யோசித்து, யோசித்து, நமது நிலைமை, தெனாலி படத்து கமலைப் போல் ஆகி விட்டது. எந்த ஸ்டேட்டஸை கண்டாலும் பயமாக இருக்கிறது. லைக் போடுவதற்கு முன்னதாக, மொக்கை ஸ்டேட்டஸ்களையும் விழுந்து விழுந்து படிக்க வேண்டியிருக்கிறது. ‘படித்துப் பார்த்தேன், சரி’ என்று எழுதி வைப்பது மட்டும் தான் பாக்கி.
ட்விட்டரில், கண்டதையும் ரீட்வீட் செய்வதை வழக்கமாக வைத்திருந்த நமக்கு, இப்போது புத்தி தெளிந்திருக்கிறது. ‘கடவுள் நல்லவர்; அவர் நம்மைப்போன்ற அப்பாவிகளையும், நம்மைப் போன்றவர் டைம்லைன்களையும், வில்லங்கம் விவகாரங்களில் இருந்து நிச்சயம் காப்பாராக’ என்று வேண்டிக் கொண்டே, ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்ல வேண்டியிருக்கிறது. என்ன செய்வது, சத்திய சோதனை!

புதன், 27 மே, 2015

மதிப்பற்றதா மதிப்பெண்?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானவுடன் பதிவு போடலாம் என்று காத்திருந்தேன். ஆனால், தேர்வு முடிவு பற்றிய எதிர்மறை விமர்சனங்கள், அந்த எண்ணத்தை தடுத்து விட்டன. முடிவு வெளியான தினத்தில் சந்தித்த நண்பர் ஒருவர்,  ‘நீங்க வேணா விசாரியுங்க, யாராச்சும் நிச்சயமா 500க்கு மேல மார்க் வாங்கீருப்பாங்க’ என்றார். நக்கல்தான். ‘இந்த முறை மார்க் அள்ளிப் போட்டுட்டாங்க’ என்பது, பலரும் கூறும் கருத்தாக இருக்கிறது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் ஏனோதானோவென இருப்பதாகவும், விடைத்தாள் திருத்தும் முறை சரியில்லை என்றும், பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாகி விடக்கூடாது என்ற கவலையில், எல்லோருக்கும் கூடுதலான மதிப்பெண் போட்டு தேர்ச்சி பெற வைப்பதாகவும், மதிப்பெண்களை, மதிப்பே இல்லாத வெற்று எண்களாக தேர்வு முடிவுகள் மாற்றி விட்டதாகவும், பல விதமான விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதிகப்படியான பேர், சென்டம் வாங்கியிருப்பதும் இத்தகைய கருத்துகளுக்கு வலுச் சேர்த்து விட்டது.
மதிப்பெண் தாறுமாறாக அதிகரித்தமைக்கு, எனக்குத் தெரிந்த காரணம் ஒன்றுண்டு. அது, ஒரு தேர்வுக்கும், மற்றொரு தேர்வுக்குமான இடைவெளி. தமிழ் முதல் தாளுக்கும், இரண்டாம் தாளுக்கும் இடையே நான்கு நாட்கள் விடுமுறை. அறிவியல் தேர்வுக்கு ஆறு நாட்கள்; சமூக அறிவியலுக்கும், கணிதத்துக்கும், தலா மூன்று நாட்கள். விடுமுறை இல்லாத தேர்வு, ஆங்கிலம் மட்டுமே.
அறிவியலில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்டம் வாங்கியதற்கு, ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்ததும், 75 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தியதும் முக்கிய காரணங்கள்.
தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதும், மாணவர்கள் 499 மதிப்பெண் பெறுவதும், தமிழகத்தில் இதுவொன்றும் முதல் முறையல்ல; சில ஆண்டுகளாகவே இதே நிலைதான் இருந்து வருகிறது. மகனோ, மகளோ, என்ன வகுப்பில் படிக்கின்றனர் என்றே தெரியாமல் இருந்த தாய், தந்தையர் காலம் மலையேறி விட்டது. இப்போதைய பெற்றோர், ஆசிரியரின் குலம், கோத்திரம், குடும்ப விவகாரம் வரை தெரிந்து வைத்திருக்கின்றனர். கிராமத்துப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் கூட, புளூபிரிண்ட்டும், வினா வங்கி புத்தகங்களும் வைத்துக் கொண்டு தேர்வுக்கு தயார் செய்கின்றனர்.
பல அரசுப்பள்ளிகளில், ஆசிரியர்கள், தங்கள் கைக்காசை செலவழித்தும், ஸ்பான்சர் பிடித்தும், மாணவியருக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதை காண முடிகிறது. விளைவு, ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆகவே, ‘நான் படித்த காலத்தில் இப்படியெல்லாம் மதிப்பெண் போடவில்லையே’ என்று பேசுவதும், எழுதுவதும், சரியான ஒப்பீடாக இருக்க முடியாது என்பதே என் கருத்து.

டெய்ல் பீஸ்: என் மூத்த மகள், 481 மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறாள். மிகவும் சிரமப்பட்டு பயிற்சி செய்த கணிதத்தில் 92 மதிப்பெண்கள். இதையொட்டி நடத்தப்பட்ட ஒரு வார கால கொண்டாட்டங்கள் புதன்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளன.

தேர்வு முடிவு பற்றிய விலாவாரியான பார்வை:
மேலோட்டமான பார்வை:

திங்கள், 9 பிப்ரவரி, 2015

பலித்தது, கணிப்பாளர் கணக்கு!

‘அரசியல் விஞ்ஞானி, அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் மிருகம்...’ என்கிறது, அவரது ட்விட்டர் தன் விவரக்குறிப்பு. அவர், யோகேந்திர யாதவ். டில்லித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு, கெஜ்ரிவாலை தவிர்த்த பிற காரணங்களை பட்டியலிட்டுப் பாருங்கள்; அதில், முதலிடத்தில் யோகேந்திர யாதவ் பெயர் இருக்கும்.
தேர்தல் கணிப்பாளராக ஒரு காலத்தில், ‘டிவி’ அரங்குகளில், மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்த தாடிக்காரர் யோகேந்திரா, ஹரியானா மாநிலம், குர்கானை சேர்ந்தவர்.
ஆம் ஆத்மியின் பின்னணியில் இவர் இருக்கும் விஷயத்தை மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட முந்தைய காங்கிரஸ் அரசு, பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றியது.
அதைப்பற்றி கவலைப்படாத யோகேந்திரா, ஆம் ஆத்மியில் நீடித்தார். முந்தைய டில்லி சட்டசபை தேர்தலிலும், தொடர்ந்த லோக்சபா தேர்தலிலும், அவரது பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
குர்கான் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு டிபாசிட் இழந்தாலும், தேர்தல் அரசியலில் இருந்து அவர், ஓடிவிடவில்லை. மீண்டும் டில்லி தேர்தலுக்கான திட்டமிடுதலில் களம் இறங்கினார்.
ஒரு சில நாட்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றிவாய்ப்பு என்று வெளியான செய்திகளைப் பற்றிக்கூறிய அவர், ‘கருத்துக் கணிப்புகள் கூறும் இடங்களைக் காட்டிலும், எங்கள் கட்சி அதிக இடங்கள் பிடிக்கும். 57 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது’ என்றார். இப்போது வெளியாகி வரும் முடிவுகளைப் பார்த்தால், கணிப்பாளரின் கணக்கு பலித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

இந்தா பிடி, சாபம்!

பொதுவாழ்க்கை, பொதுவாழ்க்கை என்று, மூச்சுக்கு முந்நூறு முறை, நாமெல்லாம் ஊருக்குள் உதார் விடும் இந்த அற்ப மானிடப்பிறவியில், அப்பாவிகள் சந்திக்கும் அவமானங்கள், எண்ணிலடங்காதவை. அவற்றில், அதிமுக்கியமானது, போலீஸ்    சோதனை.
இரவு நேரங்களில், டார்ச் விளக்கும், குண்டாந்தடியும் கைகளில் ஏந்தி, வாகனத்தை வழி மறிக்கும் அவர்களிடம், அன்னைத்தமிழின் அருமை பெருமைகளையும், பன்மை, ஒருமை விதிமுறைகளையும், இன்னபிற இலக்கண இலக்கிய சங்கதிகளையும் எதிர்பார்ப்பது, மனைவியானவள், ஞாயிற்றுக்கிழமை மூன்று வேளையும் சமைக்க வேண்டுமென எதிர்பார்ப்பதற்கு சமம்.
சமூகத்துக்கு அப்படி பேராசை கிடையாது. நரி இடம் போனாலென்ன, வலம்  போனாலென்ன, நம்மைக் கடிக்காமல் விட்டால் போதாதா? ஆகவே, இரவு நேரமெனில், போலீஸ்காரர்கள் வம்பிழுத்தாலும், பதில் பேசாமல், அமைதி காப்பதே சமூகத்தின் கொள்கை.
ஆனால், பகல் நேரத்தில், அப்படியெல்லாம் எளிதில் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணாகதி அடைவதற்கு சமூகத்தின் மனம் ஒப்புவதில்லை. அதிலும், வீடு, அலுவலகம், பள்ளி, வீடு, அலுவலகம் என சுற்றிச்சுழல வேண்டிய, மதிய உணவுக்கும், மாலை காப்பிக்கும் இடையிலான சிறுபொழுது இருக்கிறதே! அப்பப்பா...! பெரும் சிக்கல்கள் நிறைந்தது; அவற்றைச் சமாளிப்பதற்கு, சமூகம் வைத்திருக்கும் ஹோண்டாவும், நோக்கியாவும் போதவே போதாது.
அன்றொரு நாள், இளைய மகளை பள்ளியில் இருந்து, வீட்டில் கொண்டுசென்று விட்டு, சமூகம் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழக்கமானதொரு போலீஸ் சோதனை.
பெண் போலீஸ் ஒருவர், ஒற்றைக் கையை மட்டும், ஸ்டைலாக காட்டி, வழிமறித்தார்.
‘டாக்குமென்ட்ஸ் எடுங்க’ என்று உத்தரவு போட்டுவிட்டு, அடுத்த வண்டிக்கு கை காட்டப் போய் விட்டார். ‘வண்டியை தடுத்து நிறுத்துவது மட்டும்தான் அவருக்கு இடப்பட்ட வேலை போலும்’ என்றெண்ணிக் கொண்டது, சமூகம்.
அன்றைக்குப் பார்த்து, அலுவலகத்தில் கொஞ்சம் அவசர வேலை. ஆகவே, சமூகம், வண்டியிலேயே உட்கார்ந்தபடி, டிரைவிங் லைசென்ஸை எடுத்து நீட்டிவிட்டது.
நான்கடிக்கு அப்பால் நின்று கொண்டிருந்த போலீஸ்காரருக்கு, வீட்டில் சம்சாரத்துடன் ஏதோ பிரச்னை இருந்திருக்க வேண்டும்.
‘ஏன், எறங்கி வர மாட்டீங்களோ’ என்று, சமூகத்தைப் பார்த்து, சுடச்சுட கேட்டு விட்டார். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு, மானம், அவமானம் பார்த்தால் முடியுமா? வண்டியை ஆஃப் செய்து, சைடு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, லைசென்ஸ், ஆர்சி, இன்சூரன்ஸ் நகல்களை கொண்டு சென்றது சமூகம்.
வாங்கிப்பார்த்த போலீஸ்காரர், பொடி எழுத்தில் இருந்த இன்சூரன்ஸ் ஆவணத்தை எழுத்துக்கூட்டி, சிரமப்பட்டு படித்தார். அப்படியும் அவரால், பெயர் எங்கே, தேதி எங்கே என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை.
‘எல்லாம் கரெக்டா இருக்குதா’ என்றார்.
‘நீங்களே பாத்துக்கலாமே’ என்றது, சமூகம்.
அவர் மனதுக்குள் திட்டிக் கொண்டே, இன்சூரன்ஸ் நகலை உற்று உற்றுப் பார்த்தார். அப்புறம், எதுவுமே பேசாமல், சமூகத்திடமே திருப்பிக் கொடுத்து விட்டார். போவென்றோ, இரு என்றோ, எதுவும் சொல்லவில்லை.
‘சார், கரெக்டா இருக்குதா, நான் போலாமா’ என்றது, சமூகம்
அவருக்கு, நக்கல் செய்வதாக, தோன்றியிருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, அந்தப்பக்கம் சென்று விட்டார். ‘போனால் போகட்டும்’ என்று, வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டது சமூகம்.
அந்த வழித்தடத்தில், செயின் பறிப்பு அடிக்கடி நடக்கும். ஆகவேதான், 24 மணி நேரமும் போலீஸ் சோதனை நடந்து கொண்டே இருக்கிறது; திருடர்கள் தான் பிடிபட்டபாடில்லை.
‘யாராவது ஏமாந்தவன் கிடைத்தால், வண்டியை விட்டு இறங்கி வரச்சொல்லும் போலீஸ்காரர்கள் இருக்கும்வரை, எந்த திருடனும் கிடைக்க மாட்டான்’ என்பதே, சமூகத்தின் இன்றைய கருத்து; இல்லையில்லை, சாபம்!

திங்கள், 5 ஜனவரி, 2015

எங்கே இருக்கிறது, சேவை?

தேசிய நெடுஞ்சாலைகளில், முக்கிய சாலை சந்திப்புகளில், அவசர உதவிக்கென்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். சாலை விபத்துக்களில் சிக்குவோரை உடனுக்குடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றி, உயிர் பிழைக்க வைப்பதற்கு அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் காத்திருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால், அது மிக மிகத்தவறு.
இந்த ஆம்புலன்ஸ்கள் எல்லாம், தனியார் மருத்துவமனைகளின் மார்க்கெட்டிங் எந்திரங்கள். அணைகளுக்கு தண்ணீர் வரத்து அளிக்கக்கூடிய மலைப்பகுதியை, ‘கேட்ச்மெண்ட் ஏரியா’ அல்லது நீர்ப்பிடிப்பு பகுதி என்பார்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு லட்சம் லட்சமாக கொட்டித்தரும் நோயாளிகளை அளிக்கக்கூடிய ‘கேட்ச்மெண்ட் ஏரியா’வாக, இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
மக்களுக்கு சேவை செய்வதாக, தனியார் மருத்துவமனைகள் போடும் வேஷத்துக்கு வசதியாகவே, இந்த ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப் படுகிறது. ‘சேவை’யை அனுபவித்தவர்களுக்குத்தான், அதன் சிரமம் புரியும்.
சாலைகளில் விபத்து நடந்து விட்டால், இந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் புயல் வேகத்தில் போட்டி போட்டுக் கொண்டு வருவர். ‘ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்குத்தான் இவர்களுக்கு எத்தனை அக்கறை’ என்று மெச்சிக்கொள்ளும் வகையில் இருக்கும், அவர்கள் வேகம். அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது. அடிபட்டவரை தங்களிடம் கொண்டு வரும் ஒவ்வொரு டிரைவருக்கும், குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் மூவாயிரம் ரூபாய் வரை, கோவை மருத்துவமனைகள் கமிஷன் தருகின்றன.
அடிபட்டவரை, சிகிச்சைக்கு அட்மிஷன் போட்டவுடனேயே, டிரைவர் கையில் பணம் தரப்பட்டு விடுகிறது. ஆகவே, சாலையில் எங்கு விபத்து நேரிட்டாலும், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பறந்தடித்துக் கொண்டு வருவதும், ‘எந்த மருத்துவமனைக்கு போகலாம்’ என்று அடிபட்டவருக்கும், உடன் இருப்பவருக்கும் அறிவுரை, ஆலோசனை வழங்குவதும், அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இந்த மோசடிகளுக்கு இப்போதெல்லாம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் துணைபோவதாக புகார்கள் வரத் தொடங்கி விட்டன.
அடிபட்டவர் அல்லது உடன் இருப்பவர், எந்த மருத்துவமனை போகச்சொல்கிறாரோ, அங்கு செல்ல வேண்டியதுதான் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கடமை. ஆனால், தனியார் மருத்துவமனைகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அத்தகைய நோக்கத்துடன் நடந்து கொள்வதில்லை. அடிபட்டவரிடம் இருந்து, தங்களுக்கோ, கமிஷன் தரும் மருத்துவமனைக்கோ, எதுவும் தேறாது என்று உறுதிப்படுத்திக் கொண்டபிறகே, அரசு மருத்துவமனைக்கு செல்வது வழக்கமாகி விட்டது.
எனது உறவினர் ஒருவர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் காலில் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக, அருகேயிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. வந்ததும், அந்த டிரைவர், குறிப்பிட்ட ஒரு தனியார் மருத்துவமனைக்கு போகலாம் என்கிறார். உறவினரோ, வேறு ஒரு மருத்துவமனைக்கு போகச்சொல்லியிருக்கிறார். டிரைவரோ, ‘நான் அந்த மருத்துவமனைக்குத்தான் போவேன்’ என்று குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரை கூறியிருக்கிறார்.
‘அந்த மருத்துவமனைக்கு வந்து, ஒரே நிமிடம் இருந்து, வேறு மருத்துவமனைக்குப் போகிறேன் என்று கூறி விட்டுப் போய் விடுங்கள்’ என்கிறார், டிரைவர். காலில் எலும்பு முறிவுடன் துடித்துக் கொண்டிருந்த உறவினரோ, எரிச்சலாகி, ‘வேறு வண்டியை பிடியுங்கள்’ என்று கூறி விட்டார். அதன்பிறகுதான், அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வழிக்கு வந்தார். இது, மூன்றாண்டுக்கு முன் கோவையில் நடந்த சம்பவம். இப்போது, இன்னும் நிலைமை மோசமாகியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், மருத்துவமனைகள் தரும் கமிஷன் தவிர, வேறென்னவாக இருந்து விட முடியும்?
‘இந்த கொள்ளையர்களும் இல்லாவிட்டால், விபத்தில் படுகாயமுற்று, சுய நினைவிழந்து கிடப்பவர்களை, காப்பதற்கு வேறு நாதியில்லை’ என்பதாலேயே, இவர்களை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேறென்ன செய்ய முடியும்?

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

‘வசூல்’ வாரியம்!

பணியிட மாறுதலில் வெளியூர் சென்றபோது, ஏழாண்டுகள் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாக்கியம் அடியேனுக்கு வாய்த்தது. அடி முதல் முடி வரை, ஊழல் புரையோடியிருக்கும் அரசுத்துறைகளில் முக்கியமானது வீட்டு வசதி வாரியம்.
அங்கு கோப்பு எதுவும், வைத்த இடத்தில் இருக்காது; கேட்ட நேரத்திலும் கிடைக்காது. ஒதுக்கீடெல்லாம், கடவுளே நினைத்தாலும் காசு தராமல் வாங்கி விட முடியாது. அலுவலகத்தில் நினைத்த இடத்தில் எல்லாம், குப்பை போல் கோப்புகள் கிடக்கும். குப்பை மலைகளுக்குள் ஆங்காங்கே பதுங்கிக் கொண்டு ஊழல் பெருச்சாளிகள் வேலை பார்க்கும். ஒரு அலுவலகத்துக்கு ஓரிருவர் நல்லவர் இருந்தாலே ஆச்சர்யம். அவர்களும் சந்தர்ப்பம் சூழ்நிலை வாய்க்காமலே நல்லவர்களாக இருந்து தொலைப்பர்.
நான் அங்கு குடிபோனபோது, அக்கம் பக்கத்தில் இருந்த பலரும் கேட்ட முதல் கேள்வி, ‘அலாட்மென்ட் ஆர்டருக்கு எவ்வளவு கொடுத்தீங்க’ என்பதுதான். ‘நான் அரசு ஊழியர் அல்ல; பத்திரிகையாளர்’ என்பதைக் காட்டிலும், ‘லஞ்சம் கொடுக்காமல் அலாட்மென்ட் வாங்கிவிட்டேன்’ என்பதுதான் அவர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
‘எங்கிட்டயே பத்தாயிரம் வாங்கிட்டான்’ என்றார், ஒரு வருவாய் ஆய்வாளர். ‘நான் அஞ்சாயிரம் கொடுத்துத்தான் ஆர்டர் வாங்கினேன்’ என்றார், ஒரு ஆசிரியர். பி.டி.ஓ., ஒருவரும், அவர்கள் இருவரையும் வழிமொழிந்தார்.
இவர்கள் எல்லோரும் அரசு ஊழியர்கள். பத்தாண்டுகள், இருபதாண்டுகள் என அரசுத்துறைகளில் ஊறியவர்கள். அவர்களையே, பல முறை இழுத்தடித்து, பல ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டுதான், ‘அலாட்மென்ட் ஆர்டர்’ தரப்பட்டிருக்கிறது என்றால், எந்த அளவுக்கு வீட்டு வசதி வாரியத்தில் லஞ்சம் விளையாடும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
லஞ்சம் தராமல், வீடு அலாட்மென்ட், கீ ஆர்டர் எதுவும் வாங்க முடியாது. கேட்டால், ‘சீனியாரிட்டி லிஸ்ட் இருக்குது சார், அதன்படி தான் தர முடியும். எங்க வேணும்னாலும் சொல்லுங்க’ என்பார்கள். ‘கலெக்டரே சொன்னாலும் காரியம் நடக்காது; காசு கொடுத்தால் கைமேல் ஆர்டர் கிடைத்து விடும்’ என்பதுதான் நிதர்சனமான உண்மை. வாடகை குறைவு என்பது மட்டுமே, வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருக்கும் ஒரே அனுகூலம்.
அரசு ஊழியர் அல்லாதவர்கள், வீட்டு வாடகையை, கருவூல சலான் பூர்த்தி செய்து, பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டு வசதி வாரியத்தின் கணக்கில் செலுத்த வேண்டும். இப்படி செலுத்தும் சலான்களை, போட்டோ காப்பி எடுத்து, வீட்டு வசதி வாரியத்துக்கு அனுப்பிவிட வேண்டும். ஒரிஜினல் சலானை, நாம் பைல் செய்து வைத்துக்கொள்வது முக்கியம்.
திடீர் திடீரென, ‘நீங்கள் வீட்டு வாடகை செலுத்தவில்லை’ என்று கடிதமோ, போன் அழைப்போ வந்து விடும். நமக்கு வந்தால் பரவாயில்லை. அலுவலகத்துக்கு போனால் இன்னும் சிக்கல். ஆகவே, சலான் ஒரிஜினலை பத்திரமாக பைலில் வைப்பது எதிர்காலத்துக்கு நல்லது. கேட்கும்போது, அதையும் போட்டோ காப்பி எடுத்து அனுப்பி விட வேண்டும்.
தீபாவளி பொங்கல் வரும்போது, சம்பந்தப்பட்ட செக்ஷன் ஊழியர் மகிழும் வண்ணம் ‘கவனித்து’ வைப்பது முக்கியம். இல்லையெனில், அவர்பாட்டுக்கு, ‘உங்கள் ஊழியர், வாடகை செலுத்தவில்லை’ என்று அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி விடுவார். அப்புறம், அக்னிப்பிரவேசம் செய்தாலும்கூட, நாம் யோக்கியர் என்பதை அலுவலகத்தில் யாரும் நம்பமாட்டார்கள். இந்த இம்சைக்கு பயந்தே, என் சக ஊழியர் ஒருவர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தார், தீபாவளிக்கு வெளியிடும் ஸ்வீட் கூப்பனை, வீட்டு வசதி வாரிய ஊழியருக்கு தபாலில் அனுப்பி வைப்பார்.
ஐந்தாறு இந்தியன் தாத்தாக்கள் அவதரித்து, தொடுவர்மம், தொடாவர்ம வித்தையெல்லாம் சரமாரியாக காட்டினால்தான், வீட்டு வசதி வாரியம் போன்ற அரசுத்துறைகளில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த முடியும் என்பதே, ஏழாண்டு அனுபவத்தில் நான் தெளிந்த உண்மை.

சனி, 3 ஜனவரி, 2015

மின் அலுவலகத்தில் ‘ஷாக்!’

கடைசி நாளில் கட்டணம் செலுத்தும் சராசரி இந்தியர்களின் வழக்கப்படி, மின் வாரிய அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். நல்ல கூட்டம். நான்கைந்து வரிசைகளில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். பத்திரிகை செய்தியாளர் என்கிற தோரணையில், நேரே அதிகாரியை சந்தித்து, ஓரிரு வினாடிகளில் கட்டணம் செலுத்தி விடுவதற்கு, கொஞ்சம் திறமையும், நிறைய கொழுப்பும் வேண்டும். நம்மிடம் அதுவெல்லாம் கிடையாதென்பதால், ‘ஆனது ஆகட்டும்’ என வரிசையில் நின்று கொண்டேன்.
இப்படி காத்திருப்பதற்கு காரணம் இருக்கவே செய்கிறது. எந்த சூழ்நிலையிலும், வரிசைகளில் காத்திருப்போர் உலகம் தனித்துவம் கொண்டதாகவே இருக்கும். பஸ்சுக்கு, ரயிலுக்கு, விமான நிலைய பரிசோதனைக்கு, சினிமா டிக்கெட் வாங்குவதற்கு, வங்கிகளில், அரசின் பிற அலுவலகங்களில் என வரிசைகளும், காத்திருக்கும் மனிதர்களும் வேறுபடுவரே தவிர, அவர்களின் குணாதிசயங்களும், அடிக்கும் கமெண்ட்டுகளும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும்.
கட்டணம் வசூலிக்கும் நபர்களை, அவர்கள் பணியை, தங்கள் சொந்தக்கதையை, கிரிக்கெட்டை, உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையிலும் பேசியபடி நின்றிருக்கும் மனிதர்களின் சுவாரஸ்யம் அத்தகையது. நமக்கும் பொழுதுபோக வேண்டுமல்லவா? ஆகவே, எங்கு சென்றாலும், வரிசை என்று வந்து விட்டால், புறமுதுகிட்டு ஓடாமல், விழுப்புண் விரும்பும் வீரனைப்போல், எதிர்கொண்டு சந்திப்பதே நம் தலையாய இயல்பு.
அப்படி சுமார் இரண்டு மணி நேரமாக காத்திருந்து, அக்கம் பக்கத்தில் நின்றவர்களின் சொந்தக்கதை, சோகக்கதை எல்லாம் கேட்டபிறகு, எனது முறை வந்தது. கட்டண அட்டையுடன், பணத்தையும் நீட்டினேன்.
கட்டணம் வசூலிக்கும் அலுவலர், அட்டையை, திருப்பித்திருப்பி பார்த்தார்.
‘‘கடைசியாக எப்ப கரண்ட் பில் கட்டுனீங்க’’
என்னைப்பார்த்து கேட்டார்.
‘‘ரெண்டு மாசம் இருக்கும்,’’ என்றேன், நான்.
‘‘இல்ல, இந்த மாசத்துக்கு பில் கட்டுனீங்களா’’
‘‘இன்னிக்குத்தான லாஸ்ட் டேட், அதான் வந்துட்டனே’’
‘‘இல்லியே, இந்த நம்பருக்கு பில் கட்டியாச்சே’’
எனக்கு அதிர்ச்சி
‘‘சார், நம்பர நல்லா செக் பண்ணுங்க,’’ என்றேன்.
‘‘எல்லாம் பண்ணியாச்சு. இந்த நம்பருக்கு பில் கட்டீருக்கு’’
‘‘நான் கட்டவே இல்லியே’’
‘‘வீட்டுல வேற யாராச்சும் கட்டிருப்பாங்களா’’
‘‘இல்லியே, எங்க வீட்டுல ஊர்ல இருக்காங்ளே’’
‘‘சரி, நானெதுவும் பண்ண முடியாது. இந்தாங்க,’’ என்று, அட்டையுடன், பணத்தை திருப்பிக் கொடுத்தார்.
’’நல்லாப்பாருங்க, அப்புறம் கட்டலைன்னு சொல்லி, பீஸ் கேரியர புடுங்குறேன்னு வரக்கூடாதுங்க’’
‘‘சார், இது உங்க அட்டைதானே’’
‘‘ஆமா, எங்களுதுதான்’’
‘‘அப்படின்னா, இந்த அட்டைக்கு கரண்ட் பில் கட்டியாச்சு. நான் வேணும்னா அட்டைல என்ட்ரி போட்டுத்தாரேன்’’
சொன்னபடி என்ட்ரியும் போட்டுக்கொடுத்து விட்டார்.
எனக்கு அதிர்ச்சி குறைந்தபாடில்லை.
‘யார் கட்டியிருப்பார்’ என்று, யோசனையாக இருந்தேன்.
எனக்குப்பின் வரிசையில் நின்றிருந்தவர்கள் எல்லோரும் நமட்டுச்சிரிப்பு சிரிப்பது போல் இருந்தது.
‘‘சார், யாராச்சும் பணம் கட்டுனத, நம்பர் மாத்தி, உங்க நம்பருக்கு கட்டுனதா என்ட்ரி போட்டுருப்பாங்க, இவுங்க வேலைபாக்குற லட்சணம் தெரியாதா,’’ என்றார், ஒருவர்
இன்னொருவர், ‘அதான் என்ட்ரி போட்டுட்டாங்களே, தைரியமா போங்க சார்’ என்றார்.
வீட்டுக்கு சென்றபிறகும், குழப்பம் தீரவில்லை.
‘எதற்கும் கேட்டு வைப்போம்’ என்று ஊரில் இருக்கும் மனைவிக்கு போன் போட்டேன்.
‘‘கரண்ட் பில் ஏதாச்சும் கட்னியா’’
‘‘இல்லியே, அதெல்லா உங்கு டிபார்ட்மென்ட் தான’’
‘‘இல்ல, கரண்டுபில் கட்டப்போனா, அங்க இந்த நம்பர் ஏற்கனவே பில் கட்டியாச்சுன்னு சொல்லிட்டாங்க, அதான் குழப்பமா இருக்கு’’
‘‘நல்லப்பாத்திங்ளா, நம்மு நெம்பர்தானா’’
‘‘எல்லாம் செக் பண்ணியாச்சு, நம்மு நெம்பர்தான்னு சொல்லிட்டாங்க’’
‘‘செரி, பணம் மிச்சம்னு நெனைங்க’’
அதன்பிறகு, நானும் அதை மறந்து விட்டேன். அக்கம் பக்கத்து வீடுகளில் அனைவரும் அரசு ஊழியர்கள். அவர்களை பகல் நேரத்தில் சந்திப்பது அரிது. ஆகவே யாருடனும் அதைப்பற்றி பேசவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, கீழ் தளத்து வீட்டில் ஏதோ கலவரம் நடப்பது போன்று சத்தம் கேட்டது. என் மனைவி போய்ப்பார்த்துவிட்டு, சிரித்துக் கொண்டே வந்தார்.
‘‘கரண்ட் பில் யாரோ கட்டிட்டாங்கன்னு சொன்னீங்களே, அது வாத்யார் சம்சாரம்தான். நம்பர் தெரியாம மாத்திச் சொல்லி பில் கட்டிருச்சாமா, பணம் கட்டுலன்னு சொல்லி, அவங்க வீட்டுல பீஸ் கேரியரை கழட்டீட்டு போய்ட்டாங்க’’
அபராதத்தை கட்டி, பீஸ் கேரியரை மீட்டு வந்தார், ஆசிரியர்.
நானும், என் மனைவியும், ஆசிரியரை சந்தித்து, நடந்த விவரத்தைக்கூறி, கட்டணத்தை கொடுத்து விட்டோம்.
ஆசிரியரின் மனைவி, ‘நான் நாலஞ்சு மாசமா, அந்த நம்பர்லதான் கரண்ட் பில் கட்றதா ஞாபகம்’ என்று கூற, எனக்குப் பகீரென்றது; பயந்து ஓடி வந்து விட்டோம்.