ஞாயிறு, 26 அக்டோபர், 2014

அமிலமாக மாறி விடும் கடல் நீர்!

மனிதர்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடு, கடல் சூழலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக, பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொழிற்துறையினர் உற்பத்தி செய்யும் கார்பன் டை ஆக்சைடில் மூன்றில் ஒரு பகுதி, கடலில் கலந்து விடுகிறது.
இது, இயற்கையான வேதிப்பண்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, கடல் நீரை அமிலமாக மாற்றி விடுகிறது. இந்த அமிலமாக்கும் செயல், முந்தைய மதிப்பீடுகளை காட்டிலும் பல மடங்கு அதிகப்படியாக நடைபெற்றுள்ளதாக, தற்போதைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்து பிரிட்டனின் தலைமை விஞ்ஞானியான சர் மார்க் வால்போர்ட் கூறுகையில், ‘‘தொழிற்புரட்சிக் காலத்தில் இருந்ததை காட்டிலும், இப்போது 25 சதவீதம், கடல் நீரின் அமிலத்தன்மை அதிகரித்துள்ளது. இதற்கு மனிதர்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடே காரணம்,’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘கடல் நீருடன் கலக்கும் கார்பன் டை ஆக்சைடு, வேதி வினை புரிந்து, கார்பானிக் அமிலமாக மாறி விடுகிறது. தற்போது வெளியேற்றப்படும் விகிதத்திலேயே கார்பன் டை ஆக்சைடு தொடர்ந்து வெளியேற்றப்பட்டால், கடல் நீரின் அமிலத்தன்மையும் தொடர்ந்து அதிகரிக்கும். இது, கடல் சுற்றுச்சூழலுக்கும், கடல் வாழ் தாவரங்கள், உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்,’’ என்றார்.
பல்வேறு காரணங்களால் கடல் நீர் வெப்பமாகி வருவதும், கடல் சுற்றுச்சூழலை பாதித்து வருகிறது. இத்தகைய பாதிப்பால், ‘எதிர்காலத்தில் கடலில் மீன் இனங்களே இல்லாத நிலை கூட ஏற்பட்டு விடும்’ என்றும், விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
http://www.bbc.com/news/science-environment-29746880

செவ்வாய், 21 அக்டோபர், 2014

தேர்தல் ஆணையமும், தேறாத பரிந்துரையும்!

தேர்தலுக்கு தேர்தல், ‘பெய்டு நியூஸ்’ என்ற வார்த்தைப் பிரயோகம் ஊருக்குள் உலா வருவதைக் காண முடிகிறது. ‘லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்’ என்கிறது சட்டம். அதுபோலத்தான், ‘பெய்டு நியூஸ்’ வெளியிடுவதும் குற்றம்; வெளியிட வைப்பதும் குற்றம்.
‘எதிர்காலம் வளமாக இருக்க வேண்டும்’ என்பதற்காக, அரசியல்வாதிகளில் பெரும்பகுதியினர், இந்தக் குற்றத்தை விரும்பிச் செய்கின்றனர். பல் இல்லாப்பாம்புகள் கடித்தாலும் விஷமில்லை என்றான பிறகு, யாருக்குத்தான் பயமிருக்கும்? ஆகவே, தேர்தல்தோறும் ‘பெய்டு நியூஸ்’ சர்ச்சை கிளம்பிக் கொண்டே இருக்கிறது.
பணம் வாங்கிக்கொண்டு, ஒரு தரப்புக்கு ஆதரவாகவோ, இன்னொரு தரப்புக்கு எதிராகவோ வெளியிடப்படும் செய்திகளை, ‘பெய்டு நியூஸ்’ எனலாம். ‘வாங்கப்பட்ட செய்தி’ என்றோ, ‘விலைக்கு வாங்கிய செய்தி’ என்றோ தமிழில் குறிப்பிடுவது சரியாக இருக்கும்.
நாடு முழுவதும் இலை மறை காயாக இருந்த ‘பெய்டு நியூஸ்’ விவகாரம், மகாராஷ்டிராவில் முந்தைய சட்டப்பேரவை தேர்தலின்போது, பூதாகரமாக வெடித்தது. முதல்வர் அசோக் சவானை புகழ்ந்து, வெவ்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாகின. ஒரே செய்தி, ஒரு தலைப்பு. வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருந்தது கட்டுரை. அதுவும், வெவ்வேறு நபர்கள் எழுதியதாக பெயருடன் இந்த கட்டுரைகள் வெளியாகின.
இவை, பணம் கொடுத்து வெளியிடப்பட்டவை என்பதற்கு ஆதாரம் தேவையில்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? இது குறித்து ஆங்கிலப்பத்திரிகையில் செய்தி வெளியானதும், உறக்கத்தில் இருந்த தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டது; கொஞ்சம் விசாரித்தது. பிறகு அப்படியே விட்டு விட்டது.
ஆதர்ஷ் அடுக்குமாடி திட்ட ஊழல் புகாரில்தான் அசோக் சவான் பதவி விலகினாரே தவிர, ‘பெய்டு நியூஸ்’ புகாரால் அவரை எதுவும் செய்து விட முடியவில்லை. விளைவு, அடுத்தடுத்த தேர்தல்களிலும் ‘பெய்டு நியூஸ்’ புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
இப்போது நடந்து முடிந்துள்ள ஹரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல்களில் கூட, ‘பெய்டு நியூஸ்’ வெளியிட்டதாக, 80 புகார்களை விசாரித்து, உறுதியும் செய்திருக்கிறது, தேர்தல் ஆணையம். அசோக் சவான் சிக்கிக் கொண்டதாலோ என்னவோ, இந்தமுறை மகாராஷ்டிராவில் வெறும் 13 புகார்கள் மட்டுமே உறுதியாகின. ஆனால், ஹரியானாவில் 67 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இப்பிரச்னைக்கு தீர்வாக, ‘பணத்துக்கு செய்தி வெளியிடுவதை, தேர்தல் குற்றமாக கருதி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. இது தொடர்பான தங்கள் பரிந்துரை, மத்திய அரசிடம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் கவலைப்படுகிறார்.
‘‘பெய்டு நியூஸ் தற்போது தேர்தல் குற்றமாக கருதப்படுவதில்லை. அதை தேர்தல் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சட்ட அமைச்சகத்துக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
‘‘அவ்வாறு தேர்தல் குற்றமாக கருதப்பட்டால், தவறு செய்யும் வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பாக அமையும். ஆணையத்தின் பரிந்துரை, மத்திய அரசிடம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதால் எதுவும் செய்ய இயலவில்லை. தற்போதைய சூழ்நிலையில், தவறிழைத்தோர் மீதான நடவடிக்கை, சட்டத்தின் துணையின்றியே மேற்கொள்ளப்படுகிறது,’’ என்கிறார், சம்பத்.
தேர்தல் குற்றமாக இருந்தால் மட்டும் என்ன நடந்து விடப்போகிறது? அது ஒரு வகையில், கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பது போலத்தான். போகாத ஊருக்கு வழிகாட்டும் தேர்தல் ஆணையம், ‘பெய்டு நியூஸ்’ விவகாரத்தில் தொலைக்காட்சிகளின் பங்கு குறித்து எந்த புகாரும் எழுப்புவதில்லை.
நாட்டில் வெவ்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் தொலைக்காட்சிகள் நடத்தப்படுகின்றன.  கட்சி சார்பு தொலைக்காட்சிகளில் வெளியாகும் செய்திகள், செய்தி போன்ற நிகழ்ச்சிகள், குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவான ஆட்களை மட்டும் வைத்து நடத்தப்படும் விவாதங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆணையம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
தனியார் எப்.எம்., ரேடியோக்களில் செய்தி வெளியிடுவதற்கு அனுமதியில்லை. உள்ளூர் சேனல்களுக்கும் இதே நிபந்தனைகள் உண்டு. ஆனால், நடப்பது என்ன? செய்தி என்ற பெயர்தான் இல்லையே தவிர, எப்.எம்., ரேடியோக்களிலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் கட்சிகளுக்கு ஆதரவான பிரசாரங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருக்கும் தேர்தல் ஆணையம், தேர்தலுக்குத் தேர்தல்,  புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதாக பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறது. ஏதோ மின்னணு ஓட்டு இயந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டதால்தான், இந்திய தேர்தல் ஆணையர்கள், உலகளவில் பெருமை பேசித்திரிய முடிகிறது. இல்லையென்றால், இந்தியத் தேர்தல்கள் நடத்தப்படும் லட்சணம், நாட்டுக்கு நாடு நாறிக் கொண்டிருக்கும் என்பதே உண்மை. 

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

பெருகுவது யார் வருவாய்?

உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில், வருவாயை பெருக்குவதாக சொல்லி, ஆங்காங்கே, கடைகள், வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருப்பர். அவற்றில் ஒரு முறை, ஒருவர் வாடகைக்கு வந்து விட்டால் போதும், அதன்பிறகு அவர்தான் அந்த கடையின் உரிமையாளர் ஆகி விடுவார்.
அவர் செத்துப் போனாலும், அவரது வாரிசுதாரர் வந்து உட்கார்ந்து விடுவார். அவரால் கடை நடத்த முடியவில்லை என்றால், வேறு யாருக்காவது கடையை விற்று விட்டுப் போய் விடுவார். அதெப்படி அரசு கட்டடத்தை, விற்க முடியும் என்றெல்லாம் கேட்கப்படாது. அது அப்படித்தான்.
இரண்டு பேரும் பாகஸ்தர்களாக இருந்து தொழில் செய்தது போல், ஒரு ஒப்பந்தப் பத்திரம் ஒன்றை தயார் செய்து கொள்வர். பிறகு, 'இருவரும் தொழிலில் பிரிந்து விடுவோம், எனக்கு தொழில் செய்ய விருப்பமில்லை, வாடகைக்கு பிடித்த கடையை இனிமேல் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்' என்று பிரிவினை பத்திரமும் தயார் செய்வர். அப்புறம் அந்தக்கடை புதியவருக்கு சொந்தமாகி விடும். அவருக்கு முடியவில்லை என்றால், அடுத்தவருக்கு வி்ற்பார். எல்லாம், முதலில் சொன்ன நடைமுறைதான். தமிழகம் முழுவதும் அரசு வணிக வளாகங்கள் எல்லாம் இப்படித்தான் சீரழிகின்றன.
ஒரு சம்பவம். நகராட்சி பஸ்ஸ்டாண்டில், ஒரு வணிக வளாகம் இருக்கிறது. அதில் தரை தளம், முதல் தளம் என இரண்டு தளங்கள் கொண்ட வணிக வளாகத்தை வாடகைக்கு எடுத்திருந்தவர், நொடிந்து போனார். அவரால் கடை நடத்த முடியவில்லை. பெரும் தொகைக்கு விற்று விட்டார். பத்தாண்டுக்கு முன்னாகவே, 60 லட்சம் என்றார்கள். நம்புங்கள், நகராட்சி கட்டடத்துக்குதான், இந்த விலை. நகராட்சியின் முக்கிய புள்ளிகளுக்கான கவனிப்புச் செலவு தனி.
அரசு வணிக வளாகங்களில் கடை வாடகைக்கு எடுப்பவர்களுக்கென்று ஆயிரம் விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை அரசும் சரி, அதிகாரிகளும் சரி, பெரிதாக மதிப்பதில்லை. அவற்றில் இருக்கும் ஓட்டைகள் பலவற்றை அவர்கள் தானே, காட்டிக்கொடுக்கின்றனர்.
தரை தளத்தில் கடை நடத்தும் ஒருவர், பக்கத்து கடையை மேற்சொன்ன நடைமுறைப்படி கடையை விலைக்கு வாங்கி விட்டார். இப்போது இரு கடைகளையும் இணைத்தால்தான் அவருக்குப் பயன். நடுவில் சுவர் இருக்கிறது. அதை அகற்றி விட்டார். இது தரை தளம். அதன் சுவரை அகற்றினால், மேல் தளம் பாதிக்காதா? பாதிக்கும்தான். கட்டட உறுதித்தன்மை போய் விடும். பாதாளம் வரை பாயும் பணம், பக்கத்து கடை சுவர் இடிப்பதற்கு பாயாதா என்ன? இப்படிப்பட்ட பல வணிக வளாகங்கள், தமிழகம் முழுவதும் இருக்கின்றன.
கட்சிக்காரர் ஒருவர் சொன்னது நினைவில் இருக்கிறது. ''சார், நீங்க வேற, இப்பத்தான் பத்திரப்பதிவுல ரொம்ப உஷாரா இருக்காங்க. முன்னயெல்லாம், ஹைவேஸ் ரோட்டுல கடை வெக்குற உரிமைய 40 ஆயிரத்துக்கு வித்துட்டு, பத்திரம் பதிவு செஞ்சு கொடுத்த கதையெல்லாம் நடந்திருக்கு!''