ஞாயிறு, 9 நவம்பர், 2014

மார்க்கெட் மதிப்பும், வழிகாட்டி மதிப்பும்!

அரசு அறிவிக்கும் வளர்ச்சித்திட்டங்கள் பல, நிறைவேற்ற முடியாமல் முடங்கிப் போவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, நிலம் எடுக்கும் விவகாரமே. அரசு நிலமாக இருந்தால் பிரச்னையில்லை. தனியார் நிலமாக இருந்தால், அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பர்; வழக்கும் தொடுப்பர்.
ஏதாவது வில்லங்கமான வக்கீல்களிடம் வழக்கு சென்று விட்டால், அந்த திட்டத்தின் கதி அதோகதி தான். தமிழகத்தின் மிக முக்கியமான ரயில் பாதை திட்டம், இப்படிப்பட்ட பிரச்னையில் சிக்கி, ஆண்டுக்கணக்கில் தாமதம் ஆனதை நான் அறிவேன்.
தனியார் நிலத்தை அரசு எடுப்பதில் இருக்கும் சிக்கல்களை ஒரேயடியாக தீர்ப்பதற்கு, மத்திய அரசோ, மாநில அரசுகளோ தயாராக இல்லை. மாற்றி மாற்றி காலை வாரிக் கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள் அமைந்திருந்தால், எந்த ஒரு திட்டமும் விரைந்து நிறைவேற வாய்ப்பே இல்லை.
தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில்கூட, நிலம் எடுப்பு பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பது வேதனைப்பட வேண்டிய ஒன்று. அதிகாரிகளை கேட்டுப்பாருங்கள்! ‘அரசாங்கம்தான், நிலத்தின் உரிமையாளர்; அதை வைத்திருப்பவர் பெயரில் பட்டா மட்டுமே தரப்படுகிறது. ஆகவே தன் நிலத்தை, தனக்குத் தேவையானபோது எடுக்க அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது’ என்று, விளக்கம் கொடுப்பர்.
இப்படி ஊருக்குள் போய்ச்சொன்னால், தர்ம அடி விழுந்து விடும். அரசியல்வாதிகள் ஓட்டுக்கேட்க மட்டுமல்ல; ஓடி ஒளியவும் முடியாத நிலை ஏற்பட்டு விடும். டாட்டாவின் டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம், குப்பைக்குப் போனதை நாடு பார்த்ததே!
ஆக, தமிழகத்தில் பாலங்கள் கட்டவோ, சாலை அமைக்கவோ, விரிவாக்கவோ, புதிதாக நிலம் எடுக்க முடியவில்லை. சென்னை, கோவை போன்ற இடங்களில் விமான நிலையங்களை விரிவாக்க முடியவில்லை.
இப்போதுகூட, எரிவாயுக் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டம், விவசாயிகள் எதிர்ப்பால் முடங்கிக் கொண்டிருக்கிறது.
‘இனி அரசு திட்டங்களுக்கு ஒரு இஞ்ச் கூட நிலம் எடுக்கவே முடியாது’ என்ற நிலை, தவிர்க்க முடியாததாகி விட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது, மார்க்கெட் மதிப்பு. மார்க்கெட் நிலவரப்படி, ஏக்கர் மூன்று கோடி போகும் நிலத்துக்கு, வழிகாட்டி மதிப்பு வெறும் பத்து லட்சத்துக்கும் கீழே இருக்கிறது.
அரசு நிர்ணயிக்கும் வழிகாட்டி மதிப்பை ஏற்க மறுப்பவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அந்த வழக்கு, ஓரிரு தலைமுறைகளில் முடிந்து விட்டால் பரவாயில்லை. முப்பது ஆண்டுக்கும் மேலாக நடக்கும் வழக்குகள், தமிழகத்தில் ஏராளம் இருக்கின்றன. பறிக்கப்பட்ட நிலத்துக்கு, தன் வாழ்நாளில் இழப்பீடே கிடைக்காமல் இறந்து போன விவசாயிகள் எத்தனையோ பேர். அரசுக்கு சொற்ப விலைக்கு நிலத்தைக் கொடுத்துவிட்ட சோகத்தில் இறந்தவர்களும், நடைபிணம் ஆனவர்களும் பலருண்டு.
வழிகாட்டி மதிப்புக்கும், மார்க்கெட் மதிப்புக்கும் இருக்கும் மெகா இடைவெளிதான் அடிப்படை பிரச்னை. அதை சரி செய்து விட்டால், நிலம் எடுப்பு பிரச்னைகள் தீர்ந்து விடும். யாராவது தேவதூதர்கள் வான்வெளியில் பறந்து வந்தால்தான், இதுவெல்லாம் சாத்தியம்.

செவ்வாய், 4 நவம்பர், 2014

ஆடு நனைகிறதாம்; அழுகிறது, ஓநாய்!

கோவையில் இருக்கிறது அந்த பிரபல மருத்துவமனை. அதன் தலைவர், நகைச்சுவையாக பேசக்கூடியவர். மருத்துவர் சங்க கூட்டம் ஒன்றில் அவர் பேசியபோது, சென்றிருந்தேன்.
‘சிகிச்சைக்கு முன், நோயாளியின் கண்களுக்கு கடவுளாகத்தெரியும் மருத்துவர், நோய் குணமாகி விட்டால், சாதாரண மனிதராகி விடுவார். சிகிச்சைக்கான பில் தரப்படும்போது, சாதாரண மனிதர், சாத்தான் போலவே தெரிவார்’ என்றார், அவர். கூட்டத்தில் இருந்த மருத்துவர்கள் மத்தியில் பலத்த சிரிப்பு, கைத்தட்டல். காரணம், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அப்படிப்பட்ட அனுபவம் நிச்சயம் இருந்திருக்கும்.
இப்போதெல்லாம், மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் கட்டணம், யாராலும் சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது. சளி, காய்ச்சல் என்று போனால்கூட, குறைந்தபட்சம் முந்நூறு ரூபாய் செலவின்றி மருத்துவமனையில் இருந்து வெளியே வர முடியாது.
அதுவும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் என்றால், குறைந்தபட்சம் ஐநூறு ரூபாயை தாண்டிவிடுகிறது. மருத்துவத் தொழில், மனிதர்களை கடந்து,
பேராசைக்காரர்களையும் தாண்டி, கொள்ளைக்கூட்டத்தினரின் கைகளை அடைந்து விட்டிருக்கிறது.
அன்றாடம் காய்ச்சிகள் மட்டுமல்ல; மாதச்சம்பளம் பெறுவோரும், மருந்துக் கடை நடத்துவோரைத்தான், தங்கள் குடும்ப மருத்துவராக பாவித்து, மாத்திரையும், ஆலோசனைகளும் பெற வேண்டியிருக்கிறது.
சாதாரண சளிக்கு, முந்நூறு ரூபாய் வசூலிக்கும் மருத்துவரைக் காட்டிலும், பத்து ரூபாய் மாத்திரையில் தீர்வளிக்கும் மருந்துக்கடை ஊழியரே, இன்று பலருக்கு கடவுளாகத் தெரிகிறார்.
மருத்துவர்கள், மருந்து நிறுவனத்தாரிடமும், ஆய்வகம் நடத்துவோரிடமும் கமிஷன் வாங்கிக்கொண்டு, நோயாளிகளுக்கு துரோகம் இழைக்கும் கொடுமை, உலக நடைமுறையாகி விட்டது.
தங்கள் தொழிலுக்கு இடையூறு செய்யும் கம்பவுண்டர்களையும், மருந்துக் கடையினரையும், ‘போலி மருத்துவர்கள்’ என்று புகார் செய்து, போலீசில் சிக்க வைக்கும் மருத்துவர்களும் இருக்கின்றனர். மருத்துவர் சங்க கூட்டங்களில், அவர்கள் விவாதிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் இரண்டாகத்தான் இருக்கும்.
ஒன்று, போலி மருத்துவர்கள் பிரச்னை; இன்னொன்று, சிகிச்சை சரியில்லை என்று நோயாளிகள் உறவினர்கள் மருத்துவமனையில் நேரடித்தாக்குதலில் இறங்குவது. போலி மருத்துவர்களால், அவர்களிடம் சிகிச்சைக்குச் செல்வோருக்குத்தான் பிரச்னை. இதில், ஒரிஜினல் மருத்துவர்களுக்கு கவலை என்ன வேண்டியிருக்கிறது? எல்லாம், ஆடு நனைகிறதே என்று, ஓநாய் அழுத கதை தான்.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

சென்சார்...நல்ல சென்சார்...!

சிங்காரச் சென்னை மாநகருக்கு முதல் முதலாக சென்றிருந்தேன். வேறெதற்கு? அலுவலகப்பணி தான். ஓட்டலில் சாப்பிட்டு முடித்தபின், கை கழுவச் சென்ற இடத்தில் ஒரு அதிசயம். முன் சென்ற நண்பர், கண்கள் அகல விரிய, ‘அட..., அட...’ என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தார்.
‘சார், என்னாச்சு என்னாச்சு’ என்றேன். ‘இங்க பாருங்க’ என்றார். அவர் கை நீட்டிய இடத்தில் தண்ணீர் வரும் டேப் தான் இருந்தது. எனக்குப் புரியவில்லை. அவர், கை கழுவுவதுபோல், கையை அருகில் கொண்டு சென்றதுமே, டேப்பில் இருந்து தண்ணீர் குபுகுபுவென கொட்டியது.
கையை அகற்றியும், தண்ணீர் நின்றது. மீண்டும் கையை அருகில் கொண்டு சென்றதும், தண்ணீர் கொட்டியது. இதெல்லாம், கிராமங்களில் இருந்து சென்றிருந்த நாங்கள், முன்னெப்போதும் கண்டே இராத, கேட்டும் இராத அதிசயம்.
அதெப்படி? ‘நாம் கை கழுவ வருவதைப் பார்த்து, யாரோ டேப்பை திருகி தண்ணீரை திறந்து விடுகிறான்போல’ என்று சந்தேகம் வேறு. அப்புறம்தான் இன்னொரு நண்பர் சொன்னார், அதெல்லாம், ‘சென்சார்’ சம்பந்தப்பட்ட மேட்டர். கை அருகில் வருவதை ‘சென்சார்’ உணர்ந்தாலே, தண்ணீர் கொட்டுமென்று.
இது நடந்து பல்லாண்டுகள் ஆனாலும், இன்னும் அந்த அதிர்ச்சியும், ஆச்சர்யமும் மனதை விட்டு அகலாமல் அப்படியே இருக்கின்றன.
இப்போதெல்லாம், சிறு சிறு நகரங்களில் இருக்கும் ஓட்டல்களில் கூட சென்சார் பொருத்திய தண்ணீர் டேப் வைத்து விட்டார்கள். டாய்லெட்டுகளில் கூட, சென்சார்கள் பொருத்தப்பட்டு விட்டன.
இத்தகைய பெருமைக்குரிய சென்சார்கள் பழுதாகி விட்டால் பண்ணும் இம்சை இருக்கிறதே! ஆளில்லாத நேரத்தில்கூட, தண்ணீரை குபுக் குபுக்கென கொட்டிக் கொண்டிருக்கும். தானே தண்ணீர் வந்து, தானே நிறுத்தி, மீண்டும் தானே வந்து, நின்று... ஐயோ...! கொஞ்சம் மனம் பலவீனமான நபர்கள், இப்படி நடப்பதைப் பார்த்து விட்டால், கூக்குரல் எழுப்பி, அலறியடித்து ஓட்டம் பிடித்து விடுவர் தானே?