வியாழன், 19 டிசம்பர், 2013

குருவிக்கூட்டம் போனதெங்கே?

என் வீட்டு முற்றத்தில்
எதையோ தேடியது சிட்டுக்குருவி!
அழுது திரிந்தபடி
அங்குமிங்கும் ஓடியது
‘அய்யோ அய்யோ’ என்றபடி
அரற்றிப் புலம்பியது
கூடு கட்ட இடம் தேடியதோ?
குஞ்சுக்கு இரை தேடியதோ? 
முல்லைக்கொடி காணோம்!
முயல் ஆடிய கூண்டும் காணோம்!
ஆடு மேய்ந்த வெளியெல்லாம் 
அம்போன்னு கிடக்குறதே!
ஆட்டாங்கல் தண்ணியெல்லாம்
அப்படியே நிக்குறதே!
குடிக்கவே யாருமில்லையோ? 
குருவிக்கூட்டம் போனதெங்கே?
புல்வெளி வாசலிலே
புழு பூச்சி தின்ற குருவி
காரை வாசல் கண்டு
கத்திக்கதறியது!
‘குருவிகளே குருவிகளே’
குரல் கொடுத்துக் கூப்பிட்டது!
வருவார் யாருமில்லை
வேதனையில் நின்ற குருவி 
விருட்டெனவே பறந்தது
சாபம் கீபம் விட்டுடுமோ?
சந்தேகம் வந்ததிப்போ
குருவிக்கு கலரடிச்சு
காதல் பேர்ல விக்குறததும்
கறிக்கடைக்கு வறுவலுக்கு
காசுக்கு விக்குறதும்
ரொம்பவே தப்புத் தப்பு!
திருந்துங்க மக்கு மக்கா!

அவசர உலகம்

அலாரம் வைத்து
விழிக்கும் உலகம்
ஆட்டம் ஆடி
ஓயும் உலகம்
அவதியில் அம்மா
ஆக்கிய சோறு
ஆறப்பொறுக்கும்
நேரமும் இல்லை
அனுபவித்துண்ண
வரமும் இல்லை
அப்பா இருப்பார்
அண்ணன் இருப்பான்
தம்பி இருப்பான்
தங்கையும் இருப்பாள்
தனித்தனியே
விடை கொடுக்க
தடுமாறும் அவசர உலகம்…

மரமெல்லாம் மரம் அல்ல!

மரமெல்லாம் மரம் அல்ல;
மனுச உசிராட்டம்!
ஆராச்சி பல செஞ்சு
ஆமான்னு கண்டாங்க!
இதுக்கெதுக்கு ஆராச்சி
இருக்குறாங்க பல சாட்சி!
எங்கூட்டு வாசல் தான்
எல்லாத்துக்கும்  கண்சாட்சி!
வெளியூரு வேலைக்கு நான்
வெடிஞ்சதுமே போகையில
வழியனுப்பி வெச்சதொரு
வாசமில்லா சிறு நாத்து!
மாசம் பல முடிஞ்சு
மத்தியானம் வந்தப்போ
மணமணக்கும் பூ மரம் தான்
எனக்கான வரவேற்பு!
சமஞ்ச பொண்ணாட்டம்
சடசடன்னு வளந்துடுச்சு
செம்பகப்பூ மரமா?
நம்பவே முடியலியே!
அய்யன் அம்மாளுக்கு
அப்புடியொரு சந்தோசம்!
மத்த மரமெல்லாம்
மழ வெய்யத்தாங்காது!
பருவம் தெச மாறி
பனி பேஞ்சாப்பூக்காது!
மகனாக வந்த மரம்
மாசமெல்லாம் பூப்பூக்கும்!
மண்ணுல வளந்தாலும்
கண்ணுக்குள்ள வளந்த மரம்!
கலகலன்னு சிரிச்சாப்புல
காத்தால பூக்கும் மரம்!
ஊடு மட்டுமல்ல
ஊரெல்லாம் மணந்த மரம்!
மாசமாசம் வருகையில
மரந்தானே வரவேற்கும்!
மரமெல்லாம் மரம் அல்ல;
மனுச உசிராட்டம்!
”அய்யன் அம்மாள
அலுங்காம காப்பாத்த
தம்பி நானிருக்கேன்;
தயங்காம நீ கெளம்பு”
வாசல்ல நின்ன மரம்
வழியனுப்பி வச்சதென்ன!
”காத்தால போகோணுமா
காப்பியாச்சும் குடியண்ணா!”
”அண்ணிக்கு நல்லாருக்கா
கொடம் எடுத்தா ஆகாதே!”
”பரிச்ச லீவுக்காச்சும்
பாப்பாள கூட்டி வாண்ணா!”
பாசத்த தோக்கடிச்ச
பச்ச மர உத்தரவு!
காத்துல காத்தாடி
கருசனையாப் பேசும் மரம்!
குடும்பத்தோட வந்தப்போ
காஞ்சு தான் போனதப்பா!
அசலூரு போன மகன்
அங்கருந்து வந்துட்டானே!
கடம முடிஞ்சதுன்னு
கண்ண மூடிடுச்சோ?
தெரிஞ்சா  சொல்லுங்களே
தேன் சிட்டுக் குருவிகளே!

சபாஷ் போட்டது நாய்க்குட்டி!காக்கை குருவிக்கெல்லாம்
கவிதை எழுதுகிறாய்!
கடைக்குட்டி பாப்பாவுக்கும்; எனை
கட்டி வைக்கும் அக்காவுக்கும்
கவிதை எழுதி விட்டாய்!
கடும் குளிரில் வெறும் தரையில்
காவல் இருக்கின்றேன்;
கண்மூடி போகின்றாய்!
வாலை ஆட்டிக்கொண்டே
வழிமறித்தது நாய்க்குட்டி
வருத்தமாய் இருப்பது போல்
குரைத்தது காலைக் கட்டி
‘உனக்கும் ஒரு கவிதை
எழுதித்தான் விடுகின்றேன்’
என்றே தான் சொல்லி
தப்பித்து நான் வந்தேன்
‘காலம் முழுவதும் காவல்காரன்’
‘காப்பி, டீ கேட்காத வேலைக்காரன்’  
‘சம்பளம் இல்லை; போனஸ் இல்லை 
சட்டம் பேசாத சாகசக்காரன்’
சிரிப்புடனே நான்
சொல்லக்கேட்டதும்
‘சரிதான், சரிதான்’ என்றபடி
சபாஷ் போட்டது நாய்க்குட்டி!

சனி, 14 டிசம்பர், 2013

தம்பி…சாவி பத்திரம்!


உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தனக்கேயென அடைய விரும்பும் அதிசயப் பொருள், சாவி. அவரவர் வசதியைப் பொறுத்து, அது வீட்டுச் சாவி, வண்டிச்சாவி, பீரோ சாவி, கொத்துச்சாவி என வேறுபடலாம்.
சாவியின் வல்லமை அசாத்தியமானது. குடும்பங்களை உடைக்கும்; கூட்டாளிகளை பிரிக்கும். சாவியின் வரலாறு, சதிகளையும், சங்கடங்களையும்தான் அதிகமாய் நினைவு படுத்துவதாய் இருக்கிறது.
சாவியை மறந்தும், தொலைத்தும், தெருவில் திண்டாடிய அனுபவம், ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட அப்பாவி ஜீவன்களை உற்சாகப்படுத்துவதும், உய்விப்பதுவுமே நம் நோக்கம். சாவியின் சரித்திரப் புத்தகத்தில் நான் படித்த பக்கங்கள் சில:
அனுபவம் 1
அலுவலகத்தில் பணம் செலுத்த வந்த ஏஜன்ட் உடன் பேசிக் கொண்டிருந்தேன். உபசரிப்பில் உற்சாகமான ஏஜன்ட், ஒரு மணி நேரம் இருந்தபின் பிரியாவிடை கொடுத்துச்சென்றார். அவர் சென்ற சில மணி நேரம் ஆன பிறகே, மொபட் சாவி காணாமல் போயிருப்பது தெரிந்தது.
‘யார் எடுத்திருப்பர்’ என்று யோசனையில் இருந்தபோதுதான், ‘சார், ஏஜன்ட் வெரல்ல சாவிய வெச்சு சுத்திட்டு இருந்தாரு சார்’ என்றான் ஆபீஸ் பையன், தயங்கியபடி. ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஏஜன்ட் போனில் கிடைத்தார். ”சார், கையில வெச்சுட்டே இருந்த ஞாபகம். அப்புடியே வந்துட்டுது. ஊர்ல வந்து தான் தெரிஞ்சுது, சாவி நம்முளுது இல்லன்னு” என்று மென்று விழுங்கினார்.மறுநாள் டவுனுக்கு வந்த ஒருவரிடம் சாவியை கொடுத்து அனுப்பினார்.
அனுபவம் 2
நிருபரான நண்பரின் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு போயாக வேண்டும். அலுவலகத்தை பூட்ட தயாரான நேரத்தில் தன் மொபட் சாவியை தேட ஆரம்பித்தார் நண்பர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி நிகழ்ச்சிக்கு இருவரும் என் மொபட்டில் சென்றோம்.
வழியெங்கும், ‘சாவிய யாரு எடுத்திருப்பாங்க’ என்ற யோசனையும், புலம்பலுமாகவே வந்தார் நண்பர். ‘யாரெல்லாம் ஆபீசுக்கு வந்தாங்க’ என்று லிஸ்ட் அவுட் செய்து புலன் விசாரணை நடத்தியதில், பத்திரிகைச்செய்தி கொடுக்க வந்திருந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மீது சந்தேகம் கிளப்பினார், சர்க்குலேசன் பிரிவு அலுவலர். ‘சேச்சே, அவர்ட்டப்போய் எப்புடி’ என கேட்கத் தயங்கினார் நண்பர். அதற்குள் அந்த தலைமை ஆசிரியரே அலுவலகத்துக்கு போன் செய்து விட்டார்.
”சார், மறந்தாப்புல ஏதோ சாவிய எடுத்துட்டு வந்துட்டம்போல இருக்கு. உங்க ஆபீஸ் சாவியான்னு ஒரு சந்தேகம். அதான் போன் பண்ணிப் பாப்பமேன்னு” என்றார். நண்பர் பல்லைக் கடித்துக் கொண்டார்.
அனுபவம் 3
இதுவும் அதே ஊரில் நடந்தது தான். நண்பரான உள்ளூர் ஏஜன்ட், தினமும் மாலை வேளைகளில் அலுவலகம் வந்து நாட்டு நடப்புகள் பற்றி பேசிக்கொண்டிருப்பார். அன்றும் அப்படித்தான் பேசிக்கொண்டிருந்தார்.
பேசி முடித்து, கிளம்பும் வேளையில், ‘வண்டி சாவிய எங்கியோ வெச்சுட்டனே’ என்று தேட ஆரம்பித்தார். வெளியில் சென்று மொபட்டில் பார்த்தார். அரை மணி நேரமாக தேடியும் சாவி கிடைத்தபாடில்லை.
அப்போது தான், செய்தி கொடுப்பதற்காக வந்து சென்ற உள்ளூர் டிவி வீடியோகிராபர் ஞாபகம் வந்தது. சந்தேகத்தோடு தான் போன் செய்தேன். ”ஏப்பா எங்க ஆபீஸ்ல ஏதோ சாவிய காணங்கிறாங்க, நீ வந்தப்ப ஏதாவது பாத்தியா என்றேன். ”அண்ணே அது உங்க சாவியாண்ணே. ஏதுடா நம்மகிட்ட புதுசா ஒரு சாவி இருக்குதேன்னு எனக்கு அப்பவே சந்தேகம்ணே, ஒடனே கொண்டாரண்ணே” என்று வேகவேகமாக பேசியவர், முக்கால் மணி நேரத்துக்கு பிறகு வந்தார்.
பொறுமையிழந்து, கால் மாற்றி கால் நின்று, சிகரெட்டுகள் சிலவற்றை ஊதி விட்டு, வெறுப்போடு இருந்த போட்டோகிராபரும், ஏஜன்டும், சாவியுடன் வந்தவரிடம், கடுபபைக்காட்டினர். வாக்குவாதம் முற்றியது.
”உன் வண்டி சாவிய ஒர்த்தன் எட்த்திருந்தா சும்மார்ப்பியா’ என்ற போட்டோக்காரர், வந்தவர் வண்டியில் இருந்து சாவியை உருவி, கை போன போக்கில் வீச, அது அந்த வழியில் சென்று கொண்டிருந்த மினி பஸ்சின் கூரையில் விழ, ‘சாவி, சாவீ, நிர்த்து நிர்த்து’ என அவர் மினி பஸ்சை பார்த்து கூவிக்கொண்டே துரத்த… ஒரே களேபரம்.
இந்த மூன்று சம்பவங்களும் ஒரே ஊரில் ஒரு சில ஆண்டு இடைவெளியில் நடந்தவை. டேபிள் மீது இருக்கும் பொருளை எடுத்து கையில் வைத்திருப்பதும், அதை அப்படியே பாக்கெட்டில் வைத்துச் சென்று விடுவதும், ஒரு விதமான மறதிநோயின் வெளிப்பாடு.
இந்த வியாதியின் பெயர் தமிழில் சாவியோபோவியா.
ஆங்கிலத்தில் ‘கீயோ லவட்டிஸ்’ எனலாம். எந்த வயதினருக்கும் வரக்கூடிய இந்த வியாதிக்கு, தடுப்பூசிகளோ, மாத்திரை, மருந்துகளோ கிடையாது. தற்காப்பு மட்டுமே உங்கள் சாவியை காக்கும்; அவதியில் இருந்து உங்களையும் காக்கும். ஆகவே, அன்போடு நான் சொல்வதெல்லாம் ஒன்று மட்டும் தான். தம்பி…சாவி பத்திரம்!

அடிமையின் பலம்!


காப்பிக்கோப்பையுடன்
காலைத்துயில் எழுப்பும்
கடைக்குட்டி பாப்பாவின்
கற்பூரச்சிரிப்புக்கு
காலமெல்லாம் நான் அடிமை!
இரவுப்பொழுதினிலே
எல்லோரும் உறங்குகையில்
தான் மட்டும் விழித்திருந்து
தந்தைக்கு பரிமாறும்
தலைமகளே நான் அடிமை!
நடுநிசி கடந்தாலும்
கடும்பசியாய் இருந்தாலும்
‘கணவன் உண்ணவில்லை
கடுகளவும் பசியில்லை;
காலை உண்டதெல்லாம்
குரல்வளையில் உள்ளதென’
இனிதே பொய் உரைக்கும்
இல்லாளின் ‘இம்சை’க்கும் நான் அடிமை!
‘பப்பாளிப்பழம் கொடுத்து
பல நாட்கள் ஆனதடா
பார்த்தாயா; உண்டாயா’
எனக்கேட்பார் என் தந்தை!
கொடுத்துச் சென்று விட்டால்
கூடையிலே போட்டிடுவார் என்றெண்ணி
கூடவே நின்றிருந்து
புசிப்பதையும் பார்த்திடுவார்!
நள்ளிரவு என்றாலும்
நண்பகல் என்றாலும்
நான் வந்து சேரும் வரை
தான் துஞ்சா காத்திருக்கும்
தந்தைக்கும் நான் அடிமை!
இமை மூடா இரவுப்பணி
சுமையாக இருந்தாலும்
தமைக்காக்கும் தனயன்
துஞ்சுகிறானென்று
பகல்பொழுதில் விளையாடும்
பக்கத்துச் சிறுவர்களை
பார்வையிலே அதட்டும்
பாசமிகு அன்னைக்கும் நான் அடிமை.
‘பல நாளாய் பார்க்கலையே
பசங்க படிப்பதெங்கே
வேல வேலையின்னு
வெய்யில்ல அலையாதே
காசு பணமெல்லாம்
தானாத்தேடி வரும்
தாய் தகப்பனை பாத்துக்கடா’
பாசமழை பொழியும்
பண்பாளர் பேச்சுக்கும் நான் அடிமை!
அவசரம் என்றழைத்தால்
ஓடோடி வந்துதவும்
உறவுக்கும் நான் அடிமை!
வாழ்ந்திருப்போம் இப்படியே
வாங்கி வந்த வரம் அப்படி!
அடிமைக்குத் தானிருக்கும்
ஆயிரம் பலவீனம்!
அடியவன் பலமெல்லாம்
அடிமையாய் இருப்பது தான்!
காரணம் கூறணுமா;
ஆம்! ஆயிரத்தில் நான் ஒருவன்!

மொய்யெனப்படுவது…! ·


ஒவ்வொரு சுபமுகூர்த்த தினத்துக்கும், நான்கைந்து சுபநிகழ்ச்சிகளுக்காவது சென்று வருவது இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகி விட்டது. அப்படி செல்லுமுன், ‘அவுங்க எத்தன வெச்சுருக்காங்கனு நம்மு முய் நோட்டுல பாரு’ என்று, குடும்பத்தார் கூடியோ, தனித்தனியாகவோ, தேடிப்பார்ப்பது வாடிக்கை.
‘அவர்கள் வைத்த மொய்யை விட குறைவாக வைத்து விட்டால், சொல்லிக்காட்டுவர்; மானம் போகும்’ என்ற முன்னெச்சரிக்கை ஒரு பக்கம். ‘அவனே100 தான் வெச்சுருக்கான், நாம எதுக்கு 500 வெச்சுட்டு, 101 வெச்சாப்போதும்’ என்கிற எண்ணம் மறுபக்கம். ஆகவே தான், காலண்டர் காகிதங்கள் மட்டுமின்றி, மொய் நோட்டுக்காகிதங்களும் ஆண்டு முழுவதும் புரட்டப்படுகின்றன.
பங்காளி முறை உறவினர் வீட்டு சுபகாரியங்களுக்கு செல்வதென்றால், இப்போதெல்லாம் நெஞ்சில் திகிலோடு தான் செல்ல வேண்டியிருக்கிறது. மொய் வைப்பதல்ல பிரச்னை; எழுதுவதே பிரச்னை. பங்காளி வீட்டு நிகழ்ச்சிகளில், அவரது பங்காளிகளே மொய் எழுதவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.
இந்த இம்சையில் இருந்து தப்பிக்க, மண்டபத்தினுள் புகுந்த உடனேயே பதுங்கு குழிகளை தேடுவர், பங்காளிகள். சமையற்கூடமும், பந்தி பரிமாறும் கூடமும் தான், பெரும்பாலும் பதுங்குகுழிகளாக பயன்படுத்தப்படும். இந்த விஷயத்தில் முன்அனுபவம் இல்லாத படித்த பங்காளிகள் பாடு திண்டாட்டம் தான்.
சரியாக முதல் பந்தி முடியும் தருவாயில் மொய் எழுதும் திருப்பணியை தொடங்க உத்தரவு வரும். எழுதுவதற்கு ஒருவர், பணம் எண்ணி வாங்க ஒருவர் என குறைந்தபட்சம் இருவர் தேவை. இந்த இரு வேலைகளையும் திறம்படச்செய்ய வேண்டுமானால், வெறும் கலைக்கல்லூரி படிப்பெல்லாம் போதாது. செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் ராக்கெட்டை வழிநடத்தும் விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவு இருந்தால் மட்டுமே சாத்தியம்.
முதல் பந்தியில் சாப்பிட்ட அத்தனை பேரும். மொய் எழுதுபவரை சுற்றி நின்று, முற்றுகையிடுவர். ரூபாய் நோட்டை நீட்டிக்கொண்டே, தங்கள் பெயரையும் கூறுவர். யாரிடம் முதலில் பணம் வாங்குவது எனத்தெரியாமல் எழுதுபவர் குழம்புவார். அவர்களில் நெருங்கிய உறவினர் யாரேனும் இருந்து நீண்ட நேரம் காக்க வைத்து விட்டால், மொய் எழுதுபவரின் பரம்பரைக்கே ஏழேழு ஜென்மத்துக்கும் நீங்காப்பழி வந்து விடும்.
ஆகவே யாரும் முகம் சுளிக்காத வண்ணம், இன்முகம் காட்டிக் கொண்டே, அதிவிரைவாக, அதுவும் பிழையின்றி, அடித்தல் திருத்தல் இன்றி எழுதுவதே மொய் எழுதுவதற்கான அடிப்படைத்தகுதி.
பிழையுடனோ, அடித்தல் திருத்தலுமாகவோ எழுதி வைத்தால், ஒவ்வொரு முறை சந்தேகம் வரும்போதும், திருமண வீட்டுக்காரர், மொய் எழுதியவர் வீட்டுக்கு படையெடுப்பார். இது வாழ்நாள் முழுவதும் தொடரும் இம்சை என்பதால், ஏதோ டாக்டர், தனக்கும், நர்சுக்கும் மாத்திரமே புரியுமளவில் எழுதக்கூடிய மருந்துச்சீட்டு போல் எழுதி வைத்து விட்டு தப்பி தலைமறைவாக முடியாது என்பதையும் நினைவில் கொள்க.
இப்படியாகப்பட்ட சோதனைகளை எதிர்கொள்ள முடியாமல் தான், துப்பாக்கிப்பிரயோகம் நடக்கும் இடத்திலிருந்து தப்பியோடும் அப்பாவிக்கூட்டத்தினரைப்போல, பின்னங்கால் பிடரியில் அடிக்க பறந்தடித்து ஓடுவது பங்காளிகள் வழக்கம்.
தப்பிக்க வழியின்றி சிக்கிக்கொள்ளும் பங்காளிகள் முகம் போகும் போக்கைப் பார்க்க வேண்டுமே! எண்ணெய் குடித்து விட்டு கழிவறைக்கதவை திறந்து வைத்து காத்திருப்பவர் போல, செய்யாத தவறுக்கு பெஞ்சு மேல் நிறுத்தப்பட்ட பள்ளிச்சிறுவனைப்போல, புலம்பலும் சிணுங்கலும் அஷ்டகோணலுமாய், பார்க்கவே பரிதாபமாய் இருக்கும். எழுத ஆரம்பிக்கும்போதே, ‘இன்னொரு கல்யாணத்துக்கும் போகணும்’ என்று இழுப்பார், பங்காளி
. ”அட கொஞ்ச நேரம் எழுதுப்பா, அதுக்குள்ள வேற ஆளப்புடிச்சறலாம்,” என்பார், மாட்டி விட்டவர். அவ்வளவு தான், அதன்பிறகு அந்தப்பக்கமே வரமாட்டார். மாட்டிக்கொண்டவரோ, ‘யாராவது ஆபத்பாந்தவன் வந்து நம்மை காப்பாற்ற மாட்டாரா’ என்ற ஏக்கத்துடனேயே எழுதிக்கொண்டிருப்பார். அவர் சாப்பிடப்போகவும் முடியாது; பாத்ரூம் போகவும் முடியாது.
இத்தகைய இக்கட்டில் சிக்கி தவிப்பவரிடம், ”உங்கு மாமன் பேர்ல 501 எழுது கண்ணு” என்று, ஒரு அக்கா பணத்தை நீட்டும். ‘உறவுக்காரர் சரி, பேர் தெரியாதே, கேட்டால் தப்பாகி விடுமே’ என்ன செய்வதென தெரியாமல் மண்டை காயும்.
”பெரீப்பன் பேர்ல 101” என்று ஒரு பெரியம்மா சொல்லும். ‘கணவன் பெயர் சொல்லாத மனைவிமார்கள் இன்னும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்’ என்கிற சரித்திர உண்மையெல்லாம் மொய் எழுதும்போது தான் விளங்கும்.
இன்னும் சிலர் எதுவுமே சொல்லாமல் பணத்தை மட்டுமே நீட்டுவர். எழுதுபவர் தான் அடையாளம் கண்டறிந்து ஊர் பேர் எழுதிக்கொள்ள வேண்டும். சில பேர் தங்கள் பேர் சொல்லும் வித்தை இருக்கிறதே! அப்பப்பா… ”தோட்டத்துப்பேர் எழுதுனாத்தான் எல்லாருக்கும் தெரியும்” என்று கூறிக்கொண்டு, முப்பாட்டனார் காலத்தில் பண்ணையம் செய்த தோட்டத்து பெயரை அடம் பிடித்து மொய்நோட்டில் எழுதச்சொல்வர். அந்த தோட்டமே இப்போது இருக்காது. ‘நிஜத்தில் இல்லாத தோட்டம், மொய்நோட்டிலாவது இருக்கட்டுமே’ என்பது அவர்கள் எண்ணமாக இருக்கக்கூடும்.
தாங்கள் பணிபுரியும் நிறுவனம் அலுவலகத்தின் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்து மொய் எழுதுவதைக்கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒட்டகம் மேய்க்கும் வேலைக்குச்சென்று வந்தவர் எல்லாம், பெயருக்கு முன்னால் ‘துபாய்’ என்று மொய்நோட்டில் எழுதச்சொல்லும் அழிச்சாட்டியத்தையும், பல்லாண்டு காலமாக பங்காளிகள் உலகம் எப்படித்தான் சகித்துக்கொள்கிறதோ!
சரி விஷயத்துக்கு வருவோம். எப்படியோ ஒரு வழியாக மொய் எழுதி முடித்தாகி விட்டது.பங்காளியின் தலைவலி அதோடு தீர்ந்து விடாது. கணக்கை சரிபார்க்க வேண்டும். பக்கத்துக்கு பக்கம் கூட்டி அதை அப்படியே மொத்தமாகவும் கூட்டி, ஆயிரம் எவ்வளவு, ஐநூறு எவ்வளவு, நூறு எவ்வளவு என்று பார்த்தால், கணக்கில் கொஞ்சம் இடிக்கும். ஒவ்வொரு முறை கூட்டும்போதும் ஒவ்வொரு விதமான கூட்டுத்தொகை வந்து தொலைக்கும். நோட்டில் இருக்கும் கணக்கை காட்டிலும் கூடுதல் தொகை கையில் இருந்தால் பரவாயில்லை. கணக்கை காட்டிலும் குறைவான தொகை இருந்து விட்டால், சத்திய சோதனை தான். திருமண வீட்டுக்காரரை அழைத்து, ‘நோட்டு, பணம் எல்லாம் இருக்குது நீங்களே கூட்டிப்பாத்துக்குங்க என்று சொல்லி விடலாம் தான். அவர் ஒப்புக்கொள்ள வேண்டுமே! ‘அட உக்காரப்பா, கணக்கெல்லாம் பாத்துட்டுப் போய்டலாம்’ என்று உரிமையோடு உத்தரவு போட்டு விடுவர். அப்புறம் என்ன! மொய் எழுதிய பங்காளி, நோட்டும், பணமுமாகவே அன்று முழுவதும் அலைய வேண்டியதுதான்! சமையல்காரன், பாத்திரக்காரன், மண்டப வாடகை, சீரியல் செட் வாடகை என ஒவ்வொருவராக கணக்கு முடிக்கும்போதும், மொய் எழுதிய பங்காளியை கூப்பிடுவர். எல்லாம் பார்த்து முடிந்து புறப்படும்போது, இருட்டுக்கட்டி விடும்.
திருமண வீட்டுக்காரர், தன் மனைவி வழி உறவினரிடம் சொல்லிக் கொண்டிருப்பார். ”எங்கு பங்காளி மகந்தானுங்.இவிய அப்பனோடஅப்பாரு, எங்கப்பாரு, எல்லாஅண்ணந்தம்பீக.ஏதோ, இந்தப்பய்யன் இருந்ததுனால பரவால்லீங்க. இல்லீனா சிரமந்தேன். அடுத்த மாசம், எங்கு அண்ணனூடு புண்ணியார்ச்சன வருது. அதுலயும் இந்தப்பய்யனைவே எழுத வெச்சுருலாம்!”
புண்ணியார்ச்சனைக்கு, போய்டுவாரா நம்ம பங்காளி?