ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

இந்தா பிடி, சாபம்!

பொதுவாழ்க்கை, பொதுவாழ்க்கை என்று, மூச்சுக்கு முந்நூறு முறை, நாமெல்லாம் ஊருக்குள் உதார் விடும் இந்த அற்ப மானிடப்பிறவியில், அப்பாவிகள் சந்திக்கும் அவமானங்கள், எண்ணிலடங்காதவை. அவற்றில், அதிமுக்கியமானது, போலீஸ்    சோதனை.
இரவு நேரங்களில், டார்ச் விளக்கும், குண்டாந்தடியும் கைகளில் ஏந்தி, வாகனத்தை வழி மறிக்கும் அவர்களிடம், அன்னைத்தமிழின் அருமை பெருமைகளையும், பன்மை, ஒருமை விதிமுறைகளையும், இன்னபிற இலக்கண இலக்கிய சங்கதிகளையும் எதிர்பார்ப்பது, மனைவியானவள், ஞாயிற்றுக்கிழமை மூன்று வேளையும் சமைக்க வேண்டுமென எதிர்பார்ப்பதற்கு சமம்.
சமூகத்துக்கு அப்படி பேராசை கிடையாது. நரி இடம் போனாலென்ன, வலம்  போனாலென்ன, நம்மைக் கடிக்காமல் விட்டால் போதாதா? ஆகவே, இரவு நேரமெனில், போலீஸ்காரர்கள் வம்பிழுத்தாலும், பதில் பேசாமல், அமைதி காப்பதே சமூகத்தின் கொள்கை.
ஆனால், பகல் நேரத்தில், அப்படியெல்லாம் எளிதில் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணாகதி அடைவதற்கு சமூகத்தின் மனம் ஒப்புவதில்லை. அதிலும், வீடு, அலுவலகம், பள்ளி, வீடு, அலுவலகம் என சுற்றிச்சுழல வேண்டிய, மதிய உணவுக்கும், மாலை காப்பிக்கும் இடையிலான சிறுபொழுது இருக்கிறதே! அப்பப்பா...! பெரும் சிக்கல்கள் நிறைந்தது; அவற்றைச் சமாளிப்பதற்கு, சமூகம் வைத்திருக்கும் ஹோண்டாவும், நோக்கியாவும் போதவே போதாது.
அன்றொரு நாள், இளைய மகளை பள்ளியில் இருந்து, வீட்டில் கொண்டுசென்று விட்டு, சமூகம் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழக்கமானதொரு போலீஸ் சோதனை.
பெண் போலீஸ் ஒருவர், ஒற்றைக் கையை மட்டும், ஸ்டைலாக காட்டி, வழிமறித்தார்.
‘டாக்குமென்ட்ஸ் எடுங்க’ என்று உத்தரவு போட்டுவிட்டு, அடுத்த வண்டிக்கு கை காட்டப் போய் விட்டார். ‘வண்டியை தடுத்து நிறுத்துவது மட்டும்தான் அவருக்கு இடப்பட்ட வேலை போலும்’ என்றெண்ணிக் கொண்டது, சமூகம்.
அன்றைக்குப் பார்த்து, அலுவலகத்தில் கொஞ்சம் அவசர வேலை. ஆகவே, சமூகம், வண்டியிலேயே உட்கார்ந்தபடி, டிரைவிங் லைசென்ஸை எடுத்து நீட்டிவிட்டது.
நான்கடிக்கு அப்பால் நின்று கொண்டிருந்த போலீஸ்காரருக்கு, வீட்டில் சம்சாரத்துடன் ஏதோ பிரச்னை இருந்திருக்க வேண்டும்.
‘ஏன், எறங்கி வர மாட்டீங்களோ’ என்று, சமூகத்தைப் பார்த்து, சுடச்சுட கேட்டு விட்டார். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு, மானம், அவமானம் பார்த்தால் முடியுமா? வண்டியை ஆஃப் செய்து, சைடு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, லைசென்ஸ், ஆர்சி, இன்சூரன்ஸ் நகல்களை கொண்டு சென்றது சமூகம்.
வாங்கிப்பார்த்த போலீஸ்காரர், பொடி எழுத்தில் இருந்த இன்சூரன்ஸ் ஆவணத்தை எழுத்துக்கூட்டி, சிரமப்பட்டு படித்தார். அப்படியும் அவரால், பெயர் எங்கே, தேதி எங்கே என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை.
‘எல்லாம் கரெக்டா இருக்குதா’ என்றார்.
‘நீங்களே பாத்துக்கலாமே’ என்றது, சமூகம்.
அவர் மனதுக்குள் திட்டிக் கொண்டே, இன்சூரன்ஸ் நகலை உற்று உற்றுப் பார்த்தார். அப்புறம், எதுவுமே பேசாமல், சமூகத்திடமே திருப்பிக் கொடுத்து விட்டார். போவென்றோ, இரு என்றோ, எதுவும் சொல்லவில்லை.
‘சார், கரெக்டா இருக்குதா, நான் போலாமா’ என்றது, சமூகம்
அவருக்கு, நக்கல் செய்வதாக, தோன்றியிருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, அந்தப்பக்கம் சென்று விட்டார். ‘போனால் போகட்டும்’ என்று, வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டது சமூகம்.
அந்த வழித்தடத்தில், செயின் பறிப்பு அடிக்கடி நடக்கும். ஆகவேதான், 24 மணி நேரமும் போலீஸ் சோதனை நடந்து கொண்டே இருக்கிறது; திருடர்கள் தான் பிடிபட்டபாடில்லை.
‘யாராவது ஏமாந்தவன் கிடைத்தால், வண்டியை விட்டு இறங்கி வரச்சொல்லும் போலீஸ்காரர்கள் இருக்கும்வரை, எந்த திருடனும் கிடைக்க மாட்டான்’ என்பதே, சமூகத்தின் இன்றைய கருத்து; இல்லையில்லை, சாபம்!

3 கருத்துகள்:

  1. இப்படியே போனால் ஒரு நாளைக்கு சமூகம் முழிச்சிக்கப் போவுது.

    பதிலளிநீக்கு
  2. ஹாஹாஹா...! வாங்க மேடம்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஆமாங்க! இது கண்டிப்பா சாபம் தான்...ஆனா இந்தச் சாபம் ஒரு நாள் எதிர் திசையில் திருப்பப்படலாம்.....சாது மிரண்டால் என்பது போல்.....

    பதிலளிநீக்கு