திங்கள், 5 ஜனவரி, 2015

எங்கே இருக்கிறது, சேவை?

தேசிய நெடுஞ்சாலைகளில், முக்கிய சாலை சந்திப்புகளில், அவசர உதவிக்கென்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். சாலை விபத்துக்களில் சிக்குவோரை உடனுக்குடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றி, உயிர் பிழைக்க வைப்பதற்கு அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் காத்திருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால், அது மிக மிகத்தவறு.
இந்த ஆம்புலன்ஸ்கள் எல்லாம், தனியார் மருத்துவமனைகளின் மார்க்கெட்டிங் எந்திரங்கள். அணைகளுக்கு தண்ணீர் வரத்து அளிக்கக்கூடிய மலைப்பகுதியை, ‘கேட்ச்மெண்ட் ஏரியா’ அல்லது நீர்ப்பிடிப்பு பகுதி என்பார்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு லட்சம் லட்சமாக கொட்டித்தரும் நோயாளிகளை அளிக்கக்கூடிய ‘கேட்ச்மெண்ட் ஏரியா’வாக, இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
மக்களுக்கு சேவை செய்வதாக, தனியார் மருத்துவமனைகள் போடும் வேஷத்துக்கு வசதியாகவே, இந்த ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப் படுகிறது. ‘சேவை’யை அனுபவித்தவர்களுக்குத்தான், அதன் சிரமம் புரியும்.
சாலைகளில் விபத்து நடந்து விட்டால், இந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் புயல் வேகத்தில் போட்டி போட்டுக் கொண்டு வருவர். ‘ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்குத்தான் இவர்களுக்கு எத்தனை அக்கறை’ என்று மெச்சிக்கொள்ளும் வகையில் இருக்கும், அவர்கள் வேகம். அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது. அடிபட்டவரை தங்களிடம் கொண்டு வரும் ஒவ்வொரு டிரைவருக்கும், குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் மூவாயிரம் ரூபாய் வரை, கோவை மருத்துவமனைகள் கமிஷன் தருகின்றன.
அடிபட்டவரை, சிகிச்சைக்கு அட்மிஷன் போட்டவுடனேயே, டிரைவர் கையில் பணம் தரப்பட்டு விடுகிறது. ஆகவே, சாலையில் எங்கு விபத்து நேரிட்டாலும், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பறந்தடித்துக் கொண்டு வருவதும், ‘எந்த மருத்துவமனைக்கு போகலாம்’ என்று அடிபட்டவருக்கும், உடன் இருப்பவருக்கும் அறிவுரை, ஆலோசனை வழங்குவதும், அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இந்த மோசடிகளுக்கு இப்போதெல்லாம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் துணைபோவதாக புகார்கள் வரத் தொடங்கி விட்டன.
அடிபட்டவர் அல்லது உடன் இருப்பவர், எந்த மருத்துவமனை போகச்சொல்கிறாரோ, அங்கு செல்ல வேண்டியதுதான் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கடமை. ஆனால், தனியார் மருத்துவமனைகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அத்தகைய நோக்கத்துடன் நடந்து கொள்வதில்லை. அடிபட்டவரிடம் இருந்து, தங்களுக்கோ, கமிஷன் தரும் மருத்துவமனைக்கோ, எதுவும் தேறாது என்று உறுதிப்படுத்திக் கொண்டபிறகே, அரசு மருத்துவமனைக்கு செல்வது வழக்கமாகி விட்டது.
எனது உறவினர் ஒருவர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் காலில் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக, அருகேயிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. வந்ததும், அந்த டிரைவர், குறிப்பிட்ட ஒரு தனியார் மருத்துவமனைக்கு போகலாம் என்கிறார். உறவினரோ, வேறு ஒரு மருத்துவமனைக்கு போகச்சொல்லியிருக்கிறார். டிரைவரோ, ‘நான் அந்த மருத்துவமனைக்குத்தான் போவேன்’ என்று குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரை கூறியிருக்கிறார்.
‘அந்த மருத்துவமனைக்கு வந்து, ஒரே நிமிடம் இருந்து, வேறு மருத்துவமனைக்குப் போகிறேன் என்று கூறி விட்டுப் போய் விடுங்கள்’ என்கிறார், டிரைவர். காலில் எலும்பு முறிவுடன் துடித்துக் கொண்டிருந்த உறவினரோ, எரிச்சலாகி, ‘வேறு வண்டியை பிடியுங்கள்’ என்று கூறி விட்டார். அதன்பிறகுதான், அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வழிக்கு வந்தார். இது, மூன்றாண்டுக்கு முன் கோவையில் நடந்த சம்பவம். இப்போது, இன்னும் நிலைமை மோசமாகியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், மருத்துவமனைகள் தரும் கமிஷன் தவிர, வேறென்னவாக இருந்து விட முடியும்?
‘இந்த கொள்ளையர்களும் இல்லாவிட்டால், விபத்தில் படுகாயமுற்று, சுய நினைவிழந்து கிடப்பவர்களை, காப்பதற்கு வேறு நாதியில்லை’ என்பதாலேயே, இவர்களை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேறென்ன செய்ய முடியும்?

16 கருத்துகள்:

  1. வாங்க வாங்க மேடம். சரமாரியாக அடி உதை சேவை விழும் வரை, இப்படி அடாவடி சேவை செய்பவர்கள் இருக்கத்தான் செய்வர் என்றே தோன்றுகிற மேடம். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  2. ஆச்சர்யமாகிவிட்டது, எப்படியெல்லாம் நடக்குது பாருங்க ! எங்கே போய் முடியும்னே தெரியல.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம்! வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  3. தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  4. அன்புடையீர்!
    வணக்கம்!
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

    நட்புடன்/நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  5. இப்படியெல்லாம் கூட நடக்கிறதா? ;ஸேவை என்றபெயரில் பகற்கொள்ளைதான்.
    விஷயங்கள் படிக்கும் போது ஆச்சரியமாகவும்இருந்தது. அநியாயம் என்றும் தெரிந்தது. வேலிகட்டுவது எப்படி?
    பொங்கல் வாழ்த்துகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் அம்மா. ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்...’ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. அடப்பாவி! என்னக் கொடுமை சார் இது! உயிருக்குப்போராடும் நபருக்கு உதவுவதில் கூட இப்படி ஒரு ஊழலா? மனித நேயம் இல்லையா,....கொடுமை கொடுமை....என்ன கொடுமை சார் இது?! இதற்கு அரசு என்ன செய்கின்றது? கேவலம்,. அருமையான ப்திவு...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஐயா. தனியார் மருத்துவமனைகள் புற்றீசல்போல் பல்கிப்பெருகியதும், அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் ஆரோக்கியமற்ற போட்டியும்தான், இப்பிரச்னைகளுக்கு காரணம்.
      தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  7. படித்தும் மனம் கணக்கிறது நண்பரே... சரி இந்த வகையான அரசுகளை நாம்தானே கொண்டு வந்தோம் இதற்கெல்லாம் முடிவு தான் என்ன 80தை நாம் நினைத்துப்பார்ப்பதில்லை இனியெனும் இதுபோல் நடவாதிருக்கு என்ன செய்யவேண்டும் 80தே நமது அடுத்த சிந்தனையாக இந்த தைநாளிளாவது உறுது கொள்வோம் சமூக நலன் வேண்டிய நல்லதொரு விடத்தை அளித்தமைக்கு நன்றி நண்பேரே...

    நண்பரே தாங்கள் விரும்பும் வரிசையில் என்னையும் வைத்திருப்பது கண்டு மகிழ்ந்தேன் தங்களை இனித்தொடர்வேன் தங்கள் தளத்துக்கு இணைப்பு இல்லையே..

    தங்களது தளம் போகச்சொன்ன நண்பர் துளசி தரன் கோஷ்டியினருக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஐயா. அரசு சேவையோ அல்லது அதைவிட சிறப்பான தனியார் சேவையோ இருக்கும் பட்சத்தில் இத்தகைய பெருச்சாளிகள் தானே மடிந்து விடுவர். அத்தகைய நன்னாளை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் காத்திருப்போம். வருகைக்கு நன்றி! பரிந்துரைத்த துளசிதரன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

      நீக்கு
  8. மருத்துவமனை என்றாலே டாக்டர் முதல் டிரைவர் வரை கமிஷன் என்றாகி விட்டது .திருத்த வேண்டியவர்களும் கமிஷனுக்கு அடிமையாகி விட்டார்கள் !

    பதிலளிநீக்கு
  9. இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும் நிலையில் நம் சமுதாயம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது, அடுத்து என்ன அரங்கேறப்போகிறது? என வேதனைப்படவேண்டியுள்ளது.

    பதிலளிநீக்கு