புதன், 27 மே, 2015

மதிப்பற்றதா மதிப்பெண்?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானவுடன் பதிவு போடலாம் என்று காத்திருந்தேன். ஆனால், தேர்வு முடிவு பற்றிய எதிர்மறை விமர்சனங்கள், அந்த எண்ணத்தை தடுத்து விட்டன. முடிவு வெளியான தினத்தில் சந்தித்த நண்பர் ஒருவர்,  ‘நீங்க வேணா விசாரியுங்க, யாராச்சும் நிச்சயமா 500க்கு மேல மார்க் வாங்கீருப்பாங்க’ என்றார். நக்கல்தான். ‘இந்த முறை மார்க் அள்ளிப் போட்டுட்டாங்க’ என்பது, பலரும் கூறும் கருத்தாக இருக்கிறது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் ஏனோதானோவென இருப்பதாகவும், விடைத்தாள் திருத்தும் முறை சரியில்லை என்றும், பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாகி விடக்கூடாது என்ற கவலையில், எல்லோருக்கும் கூடுதலான மதிப்பெண் போட்டு தேர்ச்சி பெற வைப்பதாகவும், மதிப்பெண்களை, மதிப்பே இல்லாத வெற்று எண்களாக தேர்வு முடிவுகள் மாற்றி விட்டதாகவும், பல விதமான விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதிகப்படியான பேர், சென்டம் வாங்கியிருப்பதும் இத்தகைய கருத்துகளுக்கு வலுச் சேர்த்து விட்டது.
மதிப்பெண் தாறுமாறாக அதிகரித்தமைக்கு, எனக்குத் தெரிந்த காரணம் ஒன்றுண்டு. அது, ஒரு தேர்வுக்கும், மற்றொரு தேர்வுக்குமான இடைவெளி. தமிழ் முதல் தாளுக்கும், இரண்டாம் தாளுக்கும் இடையே நான்கு நாட்கள் விடுமுறை. அறிவியல் தேர்வுக்கு ஆறு நாட்கள்; சமூக அறிவியலுக்கும், கணிதத்துக்கும், தலா மூன்று நாட்கள். விடுமுறை இல்லாத தேர்வு, ஆங்கிலம் மட்டுமே.
அறிவியலில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்டம் வாங்கியதற்கு, ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்ததும், 75 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தியதும் முக்கிய காரணங்கள்.
தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதும், மாணவர்கள் 499 மதிப்பெண் பெறுவதும், தமிழகத்தில் இதுவொன்றும் முதல் முறையல்ல; சில ஆண்டுகளாகவே இதே நிலைதான் இருந்து வருகிறது. மகனோ, மகளோ, என்ன வகுப்பில் படிக்கின்றனர் என்றே தெரியாமல் இருந்த தாய், தந்தையர் காலம் மலையேறி விட்டது. இப்போதைய பெற்றோர், ஆசிரியரின் குலம், கோத்திரம், குடும்ப விவகாரம் வரை தெரிந்து வைத்திருக்கின்றனர். கிராமத்துப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் கூட, புளூபிரிண்ட்டும், வினா வங்கி புத்தகங்களும் வைத்துக் கொண்டு தேர்வுக்கு தயார் செய்கின்றனர்.
பல அரசுப்பள்ளிகளில், ஆசிரியர்கள், தங்கள் கைக்காசை செலவழித்தும், ஸ்பான்சர் பிடித்தும், மாணவியருக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதை காண முடிகிறது. விளைவு, ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆகவே, ‘நான் படித்த காலத்தில் இப்படியெல்லாம் மதிப்பெண் போடவில்லையே’ என்று பேசுவதும், எழுதுவதும், சரியான ஒப்பீடாக இருக்க முடியாது என்பதே என் கருத்து.

டெய்ல் பீஸ்: என் மூத்த மகள், 481 மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறாள். மிகவும் சிரமப்பட்டு பயிற்சி செய்த கணிதத்தில் 92 மதிப்பெண்கள். இதையொட்டி நடத்தப்பட்ட ஒரு வார கால கொண்டாட்டங்கள் புதன்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளன.

தேர்வு முடிவு பற்றிய விலாவாரியான பார்வை:
மேலோட்டமான பார்வை:

11 கருத்துகள்:

  1. பத்தாம் வகுப்பு தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்று, வெற்றி பெற்ற உங்கள் மூத்த மகளுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    // பல அரசுப்பள்ளிகளில், ஆசிரியர்கள், தங்கள் கைக்காசை செலவழித்தும், ஸ்பான்சர் பிடித்தும், மாணவியருக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதை காண முடிகிறது. விளைவு, ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. //

    நன்றாகவே சொன்னீர்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முன்பெல்லாம் தற்காலிக ஆசிரியர்கள்தான் அதிகம் இருந்தனர். இப்போதோ நிரந்த ஆசிரியர்கள்; அவர்களும் தங்கள் பள்ளிகளுக்கு மாணவர்களுக்காக கடுமையாக உழைப்பதைக் காண முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் தமிழ் இளங்கோ ஐயா, வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. "டெய்ல் பீஸ்: என் மூத்த மகள், 481 மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறாள். மிகவும் சிரமப்பட்டு பயிற்சி செய்த கணிதத்தில் 92 மதிப்பெண்கள்." என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தந்துள்ளீர்கள்.
    பெற்றோரை விடப் பிள்ளைகள் சிறந்த அறிஞர்களாக வரவேண்டும்.
    தமிழரின் முதலீடு கல்வி ஒன்றே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி ஐயா! கல்விச்செல்வம் தானே, பிள்ளைகளுக்கு நாம் சேர்க்கும் சொத்து? நம்மை விட நமது சந்ததிகள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று சீனத்தலைவர் ஒருவர் கூறியது நினைவுக்கு வருகிறது ஐயா. வருகைக்கு நன்றி!

      நீக்கு
  3. மகளுக்கு இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு அலசல் தங்களது மகளுக்கு வாழ்த்துகள் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கில்லர்ஜி சார்!

      நீக்கு
  5. என் மகனும் ,இன்று cbse பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் முதல் கிரேடில் (A1) வெற்றி பெற்றுள்ளான் ,இரவு விழித்து படித்ததன் பலனை அடைந்து விட்டான் ,கேந்தர்ய வித்யாலயா பள்ளிகளில் மார்க்கை அள்ளி எல்லாம் போட மாட்டார்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வாருங்கள் பகவான்ஜி சார். தன் மகனைச்சான்றோன் என பிற சொல்லக்கேட்பது தானே பெற்றோருக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை அளித்த தங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள் சார்!

      நீக்கு
  6. தங்கள் மகளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

    ஒன்று இங்கு சொல்ல விரும்புகின்றோம் ஐயா! குழந்தைகள் நன்றாகத்தான் படிக்கின்றார்கள். பாடத்திட்டமும் மெருகேற்றப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில். ஆனால் சிபிஎஸ்ஸி யில் மதிப்பெண்கள் அள்ளிப் போடுவதில்லை. மட்டுமல்ல அரசு பள்ளிகளிலில் மாணவச் செல்வங்களை மக் அடிக்கச் சொல்லாமல், ஆழ்ந்து, ஆராய்ந்து, ரெஃபர் செய்து படிக்கச் சொல்லி படித்தல் என்பதை விட கற்றல் என்பதை வளர்த்தார்கள் என்றால் அவர்களால் மேற்படிப்புக்குச் சேரும் போது கல்லூரிகளில் புரிந்து கொள்ள முடியும். 99% மாணவ, மாணவிகள், மக் அடித்துப் பழகியதால் கல்லூரிப் பாடங்களில் திணறுகின்றார்கள். எங்கள் வீட்டில் கல்லூரி ஃப்ரொஃபசர்கள் நிறைய இருப்பதால் இதனை அறிந்து சொல்லுகின்றோம் ஐயா....

    பதிலளிநீக்கு