வியாழன், 3 ஜூலை, 2014

சத்திய சோதனை!

‛நல்லவர்களை கடவுள் அடிக்கடி சோதிப்பார்’ என்பது நாமறிந்த ஒன்றுதான். அன்று காலை 6 மணிக்கெல்லாம், எனக்கு கடவுளின் சோதனை ஆரம்பமாகி விட்டது. உயர் அதிகாரி தொலைபேசியில் அழைத்தார்.
‛‛ கோவிலுக்கு ஏழரை மணிக்கு வந்துடறேன். கொஞ்சம் வர முடியுமா?’’
வேண்டுதல் தொனி இருந்தாலும், அது உத்தரவுதான். அதிகாரியாயிற்றே! அவசரம் அவசரமாக குளித்து, உடைமாற்றி, கோவிலுக்கு ஓடினேன். கோவில் அர்ச்சகர்களை தெரியாது. ‛மரியாதை எல்லாம் நல்லபடியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதிகாரி முன் நம் மானம் போய்விடும்’ என்று, படபடப்பாக இருந்தது.
‛தெரிந்த முகங்கள் இருக்கின்றனரா’ என, தேடினேன். நல்ல வேளையாக, ஊழியர்கள் இருவர் இருந்தனர். அவர்களுக்கு, வாயெல்லாம் பல்லாக சிரித்தபடி, வணக்கம்போட்டு, குசலம் விசாரித்து, விஷயத்தை சொன்னேன்.
‛அதுக்கென்ன சார், தாராளமா வரட்டும், சிறப்பா செஞ்சுருவோம்’ என்றார், கோவில் ஊழியர். லேசாக நிம்மதி வந்தது.
கோவில் வாசலில் காத்திருந்தேன். அதிகாரி, காரில் வந்தார்.
முன்கூட்டியே சிக்னல் தரப்பட்டிருந்தபடியால், கோவில் அர்ச்சகர்கள் இருவர் வந்து அதிகாரியை வரவேற்றனர். சன்னதி முன் உட்கார வைத்து, சிறப்பு பூஜை செய்தனர். அர்ச்சனை எல்லாம் செய்தாகி விட்டது. பரிவட்டம் கட்டி, மாலை மரியாதை செய்து, பிரசாதம் கொடுத்து, பெரிய கும்பிடுபோட்டு வழியனுப்பினர்.
அதிகாரிக்கு மிக்க மகிழ்ச்சி. ‛வெரிகுட், வெரிகுட்’ என்று பாராட்டினார். ‛ கோவிலை ஒரு சுத்து சுத்திரட்டுமா’ என்று கேட்டபடி புறப்பட்டார்.  ‛எப்படியோ, மிக எளிதில் சமாளித்து விட்டோம்’ என்று எனக்கு உள்ளூர கொண்டாட்டம்.
அதற்குள், கோவில் வாசலுக்கு கார் வந்து விட்டது. கார் கதவை திறந்து வைத்துக் கொண்டு, டிரைவர் காத்திருந்தார்.  கோவிலை சுற்றி வந்த அதிகாரி, எதையோ தேடிக் கொண்டிருந்தார். ‛ஏம்ப்பா, இங்கதான் விட்டிருந்தேன், காணமே’ என்றார். அவர் செருப்பைத்தேடுவதை, வினாடி நேரத்திலேயே புரிந்து கொண்டு விட்ட எனக்கு, நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது.
ஐயோ! பதற்றத்தில் அங்குமிங்கும் ஓடினேன், இல்லையில்லை தேடினேன். அதிகாரியும்தான். ஓரிரு நிமிடங்கள் தேடிய அதிகாரி, பின் சுதாரித்துக் கொண்டார். ‛சரி விடுப்பா, பழைய செருப்புதான், போகட்டும், கார்ல ஷூ இருக்கு’ என்றபடி, காருக்குள் ஏறிக் கொண்டார். ‛சரி வரட்டுமா’ என்று, அவர் கூறிச் சென்று இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகியும், எனக்கு சுய நினைவே இல்லை.
கோவில் ஊழியர் வந்து கூப்பிட்டபோதுதான், நினைவு திரும்பியது. பெரும் அதிர்ச்சி. எல்லாவற்றையும் சிறப்பாக செய்து, செருப்பை கோட்டை விட்டு விட்டோமே! அதிகாரி கோபித்துக் கொள்வாரோ? கிலி பிடித்துக் கொண்டது. கோவில் ஊழியர், ‛‛சார், அதெல்லாம் எதுவும் நடக்காது. பகவான் மேல பாரத்தப்போட்டுருங்க சார்,’’ என்று ஆறுதலாக பேசினார்.
‛‛சரி சார், காலங்காத்தால யாராச்சும் செருப்பு திருடுவாங்களா’’
இது, எனது சந்தேகம்.
‛‛சார், நீங்க தேங்கா, பழம், மாலை எல்லாம் இங்க கடைல வாங்குனா, செருப்புக்கு பங்கம் வராது.  தேங்கா பழம் வாங்காமப்போனாலோ, இல்ல பிச்சைக்காரங்களுக்கு பிச்சை போடாம போனாலோ, செருப்ப காணாமப் போக்கிடுவாங்க. இதுல கடைக்காரங்களும், கோவில் வாசல்ல இருக்க பிச்சைக்காரங்களும் கூட்டு. இனியாவது உஷாரா இருந்துக்குங்க’’
இன்று ஒரு தகவல் மாதிரி, அன்று ஒரு உண்மையை நான் புரிந்து கொண்டேன். எப்போது, எந்த கோவிலுக்கு போனாலும், செருப்பில்லாமல் போவதுதான், நமக்கும் நல்லது; பாக்கெட்டுக்கும் நல்லது; பாவம், பகவானுக்கும் நல்லது. பிறகு, நாட்டில் இருக்கும் ஆயிரம் பிரச்னைகளை தீர்க்கவே, பகவான் ஓவர்டைம் பார்க்க வேண்டியிருக்கும். இதில், நமது செருப்புக்கெல்லாமா, அவர் காவல் இருப்பார்?

.....
திருப்பூரில் 20 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவம் இது. அந்த நிறுவனத்துக்குப்பிறகு, மூன்று நிறுவனங்கள் மாறி வி்ட்டேன் . ஆனாலும், மேற்கண்ட சம்பவம் நினைவுக்கு வந்தாலே, வியர்த்துக் கொட்டி விடும். கடவுளின் சோதனையல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக