ஞாயிறு, 6 ஜூலை, 2014

யார் குற்றம்?

அன்றாடம் வெளியாகும் பத்திரிகை செய்திகளைப் பார்க்கும்போது, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர சம்பவங்கள்,  அதிகரித்து விட்டது நன்றாகவே தெரிகிறது. ‛மனித மனதின் அடி ஆழத்தில், ஏதோ ஒரு மூலையில் படிந்து கிடக்கும் வக்கிரம்தான் இதற்கெல்லாம் காரணம்’ என்கின்றனர், உளவியல் வல்லுநர்கள்.
மனதை அடக்கி ஆளும் வல்லமை கொண்ட மனிதன், வக்கிர எண்ணங்களை வெற்றி கொண்டு விடுகின்றான்; மனதை ஆளத் தெரியாத மனிதன், வக்கிரங்களுக்கு அடிமையாகி விடுகிறான். வக்கிர எண்ணங்கள், வகைதொகையற்றவை. அவற்றின் உந்துதலே, உலகின் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம். மது, அவற்றை உந்தி மேலெழுப்பி, ஊருக்குள் அனுப்பி விடுகிறது. விளைவுகளே, அன்றாடம், பத்திரிகை செய்திகளாக இடம் பெறுகின்றன.
......
கரூரில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கிராமம் அது. அதிகபட்சம் 100 வீடுகள் இருக்கும். சாலையோரம் சில டீக்கடைகள், பெட்டிக்கடைகளை தவிர வேறு பெரிதாக சொல்லிக் கொள்வதற்கு எதுவுமில்லாத ஊர் அது.
இரவு 10 மணிக்கு மேலாகி விட்டால், அந்த ஊரில் போக்குவரத்து நெரிசல் தாறுமாறாக அதிகரித்து விடும். சில நேரங்களில், போலீசார் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நிலைகூட ஏற்படுவதுண்டு. இப்படி பெரும்கூட்டம் கூடுவதால், இரவு ரோந்து  போலீசாருக்கு, அங்கு செல்வது கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது.
அந்த வழியில் வாகனம் இயக்கும் டிரைவர்கள், கிளீனர்கள், வாலிப, வயோதிக அன்பர்கள் அனைவருக்கும் அத்துபடியான கிராமம் அது.  இரவுப்பணிக்காக தினமும் சேலம் சென்று திரும்பியபோதுதான், அந்த கிராமத்துக்கு இருக்கும் கிராக்கி,  தெரியவந்தது.
நான் பணி முடிந்து வீடு திரும்பும்போது, அதாவது அதிகாலை 2 மணிக்குக்கூட, அந்த கிராமத்தில் குறைந்தது 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், லாரிகள் நின்றிருக்கும். எதற்கு...? டீ குடிப்பதற்குத்தான்!  அதுவும் குறிப்பிட்ட கடையில் மட்டுமே கூட்டம் இருக்கும். மற்ற கடைகளில் எல்லாம் ஈ, கொசு கூட இருக்காது; கடைக்காரர்கள் தூங்கி வழிந்து கொண்டிருப்பர்.
குறிப்பிட்ட இந்த கடையில் மட்டும், ‛நான்-ஸ்டாப்’ ஆக, டீ போடும் வேலை நடந்து கொண்டே இருக்கும். டீயில் ஏதேனும் விசேஷம் இருக்கிறதா என்றெல்லாம் கேட்கத்தோன்றுமே? அதையும் சொல்லி விடுகிறேன். அதில் அப்படியொன்றும் சிறப்பில்லை. வழக்கமான கலப்படத்
தூள்; விலையும் வழக்கமான விலைதான். வேறு என்னதான், ஸ்பெஷல்...?
கடையில் கல்லாவில் இருக்கும் பெண் ஒருவர்தான், இவ்வளவு களேபரத்துக்கும் காரணம். அவர் ஒன்றும், மோசமானவர் அல்ல. அவரது பேச்சிலும், செய்கையிலும் யாரும் குறை கூற வாய்ப்பில்லை.
கல்லாப்பெட்டியில் அமர்ந்திருக்கும் அவர், வாடிக்கையாளர்களிடம் சிரித்த முகத்துடன் பேசும் வழக்கம் கொண்டவர். அவரது அழகும், சிரிப்பும் தான், ஏராளமானோரை கடைக்கு கவர்ந்திழுக்கின்றன என்பது சில நாட்களிலேயே எனக்குப் புரிந்து விட்டது. ஆனால், கடைக்கு செல்பவர்களில் பெரும்பகுதியினர், அவரது சிரிப்புக்கும், பேச்சுக்கும்தான் செல்கின்றனர் என்பது உண்மையிலேயே வருந்தத்தக்க செய்தி.
போலீசார் உட்பட அனைவருக்கும் இந்த விஷயம் தெரியும். கடையில் இருந்து வியாபாரம் செய்வதை யாராவது, தவறென்று சொல்ல முடியுமா? இப்படி டீக்கடையில் இருக்கும் பெண்ணுக்காக, பல் இளித்துக் கொண்டு திரியும் ஜொள்ளர்களால் எதுவும் அசம்பாவிதம் நேரிட்டு விடக்கூடாது என்பதற்காக, போலீசார் இரவு மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருந்த நாட்களும் உண்டு.
பிஞ்சுக் குழந்தையை கூட விட்டு வைக்காத கொடியவர்கள் சுற்றும் பூமியில், பிறன்மனை நோக்காப் பேராண்மையாளர்கள், அதுவும் இரவு நேரத்தில் டீ குடிக்க வருவதெல்லாம் சாத்தியமா என்ன?


1 கருத்து: