ஞாயிறு, 4 ஜனவரி, 2015

‘வசூல்’ வாரியம்!

பணியிட மாறுதலில் வெளியூர் சென்றபோது, ஏழாண்டுகள் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாக்கியம் அடியேனுக்கு வாய்த்தது. அடி முதல் முடி வரை, ஊழல் புரையோடியிருக்கும் அரசுத்துறைகளில் முக்கியமானது வீட்டு வசதி வாரியம்.
அங்கு கோப்பு எதுவும், வைத்த இடத்தில் இருக்காது; கேட்ட நேரத்திலும் கிடைக்காது. ஒதுக்கீடெல்லாம், கடவுளே நினைத்தாலும் காசு தராமல் வாங்கி விட முடியாது. அலுவலகத்தில் நினைத்த இடத்தில் எல்லாம், குப்பை போல் கோப்புகள் கிடக்கும். குப்பை மலைகளுக்குள் ஆங்காங்கே பதுங்கிக் கொண்டு ஊழல் பெருச்சாளிகள் வேலை பார்க்கும். ஒரு அலுவலகத்துக்கு ஓரிருவர் நல்லவர் இருந்தாலே ஆச்சர்யம். அவர்களும் சந்தர்ப்பம் சூழ்நிலை வாய்க்காமலே நல்லவர்களாக இருந்து தொலைப்பர்.
நான் அங்கு குடிபோனபோது, அக்கம் பக்கத்தில் இருந்த பலரும் கேட்ட முதல் கேள்வி, ‘அலாட்மென்ட் ஆர்டருக்கு எவ்வளவு கொடுத்தீங்க’ என்பதுதான். ‘நான் அரசு ஊழியர் அல்ல; பத்திரிகையாளர்’ என்பதைக் காட்டிலும், ‘லஞ்சம் கொடுக்காமல் அலாட்மென்ட் வாங்கிவிட்டேன்’ என்பதுதான் அவர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
‘எங்கிட்டயே பத்தாயிரம் வாங்கிட்டான்’ என்றார், ஒரு வருவாய் ஆய்வாளர். ‘நான் அஞ்சாயிரம் கொடுத்துத்தான் ஆர்டர் வாங்கினேன்’ என்றார், ஒரு ஆசிரியர். பி.டி.ஓ., ஒருவரும், அவர்கள் இருவரையும் வழிமொழிந்தார்.
இவர்கள் எல்லோரும் அரசு ஊழியர்கள். பத்தாண்டுகள், இருபதாண்டுகள் என அரசுத்துறைகளில் ஊறியவர்கள். அவர்களையே, பல முறை இழுத்தடித்து, பல ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டுதான், ‘அலாட்மென்ட் ஆர்டர்’ தரப்பட்டிருக்கிறது என்றால், எந்த அளவுக்கு வீட்டு வசதி வாரியத்தில் லஞ்சம் விளையாடும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
லஞ்சம் தராமல், வீடு அலாட்மென்ட், கீ ஆர்டர் எதுவும் வாங்க முடியாது. கேட்டால், ‘சீனியாரிட்டி லிஸ்ட் இருக்குது சார், அதன்படி தான் தர முடியும். எங்க வேணும்னாலும் சொல்லுங்க’ என்பார்கள். ‘கலெக்டரே சொன்னாலும் காரியம் நடக்காது; காசு கொடுத்தால் கைமேல் ஆர்டர் கிடைத்து விடும்’ என்பதுதான் நிதர்சனமான உண்மை. வாடகை குறைவு என்பது மட்டுமே, வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருக்கும் ஒரே அனுகூலம்.
அரசு ஊழியர் அல்லாதவர்கள், வீட்டு வாடகையை, கருவூல சலான் பூர்த்தி செய்து, பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டு வசதி வாரியத்தின் கணக்கில் செலுத்த வேண்டும். இப்படி செலுத்தும் சலான்களை, போட்டோ காப்பி எடுத்து, வீட்டு வசதி வாரியத்துக்கு அனுப்பிவிட வேண்டும். ஒரிஜினல் சலானை, நாம் பைல் செய்து வைத்துக்கொள்வது முக்கியம்.
திடீர் திடீரென, ‘நீங்கள் வீட்டு வாடகை செலுத்தவில்லை’ என்று கடிதமோ, போன் அழைப்போ வந்து விடும். நமக்கு வந்தால் பரவாயில்லை. அலுவலகத்துக்கு போனால் இன்னும் சிக்கல். ஆகவே, சலான் ஒரிஜினலை பத்திரமாக பைலில் வைப்பது எதிர்காலத்துக்கு நல்லது. கேட்கும்போது, அதையும் போட்டோ காப்பி எடுத்து அனுப்பி விட வேண்டும்.
தீபாவளி பொங்கல் வரும்போது, சம்பந்தப்பட்ட செக்ஷன் ஊழியர் மகிழும் வண்ணம் ‘கவனித்து’ வைப்பது முக்கியம். இல்லையெனில், அவர்பாட்டுக்கு, ‘உங்கள் ஊழியர், வாடகை செலுத்தவில்லை’ என்று அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி விடுவார். அப்புறம், அக்னிப்பிரவேசம் செய்தாலும்கூட, நாம் யோக்கியர் என்பதை அலுவலகத்தில் யாரும் நம்பமாட்டார்கள். இந்த இம்சைக்கு பயந்தே, என் சக ஊழியர் ஒருவர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தார், தீபாவளிக்கு வெளியிடும் ஸ்வீட் கூப்பனை, வீட்டு வசதி வாரிய ஊழியருக்கு தபாலில் அனுப்பி வைப்பார்.
ஐந்தாறு இந்தியன் தாத்தாக்கள் அவதரித்து, தொடுவர்மம், தொடாவர்ம வித்தையெல்லாம் சரமாரியாக காட்டினால்தான், வீட்டு வசதி வாரியம் போன்ற அரசுத்துறைகளில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த முடியும் என்பதே, ஏழாண்டு அனுபவத்தில் நான் தெளிந்த உண்மை.

3 கருத்துகள்:

  1. "வாடகை குறைவு என்பது மட்டுமே, வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருக்கும் ஒரே அனுகூலம்" ___ சரியாச் சொன்னீங்க. தோழி(அரசு வேலை) ஒருவர் வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பில் இருந்தார். பல வருட போராட்டங்களுக்குப் பின்னர்தான் கிடைத்ததாகச் சொன்னார். வீட்டைப்போய் பார்த்தபிறகு "இந்தப் போராட்டம் தேவைதானா" என்றிருந்தது வீட்டின் நிலைமை.

    பதிலளிநீக்கு
  2. வாங்க மேடம். வீட்டு வசதி வாரியத்தில், நல்ல நிலையில் இருக்கும் வீடு கிடைப்பவர்கள், அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்ல வேண்டும். அதிகம் தகராறு செய்தாலோ, லஞ்சம் தர மறுத்து சவுண்ட் விட்டாலோ, பழுதடைந்த, பாடாவதி வீடுகளாகப் பார்த்து கொடுத்து, பழி வாங்கி விடுவர். ஆகவே, அந்த விஷயத்திலும் முன்ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு! மிகவும் தைரியமான ஒரு பதிவு! ம்ம்ம் "இதுஒன்றும் கம்பன் சூத்திரம் இல்லையே. உலகே அறியுமே" என்று நீங்கள் சொல்லுவதும் காதில் விழுகின்றது.ஹஹ நீங்கள் சொல்லுவது போல் ஒரு இந்தியன் தாத்தா அவதரிக்க வேண்டும்....அது சரி இருப்பவர்களில் யாருமே இந்தியன் தாத்தா இல்லையோ....ஐயா! ?

    பதிலளிநீக்கு