சனி, 3 ஜனவரி, 2015

மின் அலுவலகத்தில் ‘ஷாக்!’

கடைசி நாளில் கட்டணம் செலுத்தும் சராசரி இந்தியர்களின் வழக்கப்படி, மின் வாரிய அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். நல்ல கூட்டம். நான்கைந்து வரிசைகளில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். பத்திரிகை செய்தியாளர் என்கிற தோரணையில், நேரே அதிகாரியை சந்தித்து, ஓரிரு வினாடிகளில் கட்டணம் செலுத்தி விடுவதற்கு, கொஞ்சம் திறமையும், நிறைய கொழுப்பும் வேண்டும். நம்மிடம் அதுவெல்லாம் கிடையாதென்பதால், ‘ஆனது ஆகட்டும்’ என வரிசையில் நின்று கொண்டேன்.
இப்படி காத்திருப்பதற்கு காரணம் இருக்கவே செய்கிறது. எந்த சூழ்நிலையிலும், வரிசைகளில் காத்திருப்போர் உலகம் தனித்துவம் கொண்டதாகவே இருக்கும். பஸ்சுக்கு, ரயிலுக்கு, விமான நிலைய பரிசோதனைக்கு, சினிமா டிக்கெட் வாங்குவதற்கு, வங்கிகளில், அரசின் பிற அலுவலகங்களில் என வரிசைகளும், காத்திருக்கும் மனிதர்களும் வேறுபடுவரே தவிர, அவர்களின் குணாதிசயங்களும், அடிக்கும் கமெண்ட்டுகளும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும்.
கட்டணம் வசூலிக்கும் நபர்களை, அவர்கள் பணியை, தங்கள் சொந்தக்கதையை, கிரிக்கெட்டை, உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையிலும் பேசியபடி நின்றிருக்கும் மனிதர்களின் சுவாரஸ்யம் அத்தகையது. நமக்கும் பொழுதுபோக வேண்டுமல்லவா? ஆகவே, எங்கு சென்றாலும், வரிசை என்று வந்து விட்டால், புறமுதுகிட்டு ஓடாமல், விழுப்புண் விரும்பும் வீரனைப்போல், எதிர்கொண்டு சந்திப்பதே நம் தலையாய இயல்பு.
அப்படி சுமார் இரண்டு மணி நேரமாக காத்திருந்து, அக்கம் பக்கத்தில் நின்றவர்களின் சொந்தக்கதை, சோகக்கதை எல்லாம் கேட்டபிறகு, எனது முறை வந்தது. கட்டண அட்டையுடன், பணத்தையும் நீட்டினேன்.
கட்டணம் வசூலிக்கும் அலுவலர், அட்டையை, திருப்பித்திருப்பி பார்த்தார்.
‘‘கடைசியாக எப்ப கரண்ட் பில் கட்டுனீங்க’’
என்னைப்பார்த்து கேட்டார்.
‘‘ரெண்டு மாசம் இருக்கும்,’’ என்றேன், நான்.
‘‘இல்ல, இந்த மாசத்துக்கு பில் கட்டுனீங்களா’’
‘‘இன்னிக்குத்தான லாஸ்ட் டேட், அதான் வந்துட்டனே’’
‘‘இல்லியே, இந்த நம்பருக்கு பில் கட்டியாச்சே’’
எனக்கு அதிர்ச்சி
‘‘சார், நம்பர நல்லா செக் பண்ணுங்க,’’ என்றேன்.
‘‘எல்லாம் பண்ணியாச்சு. இந்த நம்பருக்கு பில் கட்டீருக்கு’’
‘‘நான் கட்டவே இல்லியே’’
‘‘வீட்டுல வேற யாராச்சும் கட்டிருப்பாங்களா’’
‘‘இல்லியே, எங்க வீட்டுல ஊர்ல இருக்காங்ளே’’
‘‘சரி, நானெதுவும் பண்ண முடியாது. இந்தாங்க,’’ என்று, அட்டையுடன், பணத்தை திருப்பிக் கொடுத்தார்.
’’நல்லாப்பாருங்க, அப்புறம் கட்டலைன்னு சொல்லி, பீஸ் கேரியர புடுங்குறேன்னு வரக்கூடாதுங்க’’
‘‘சார், இது உங்க அட்டைதானே’’
‘‘ஆமா, எங்களுதுதான்’’
‘‘அப்படின்னா, இந்த அட்டைக்கு கரண்ட் பில் கட்டியாச்சு. நான் வேணும்னா அட்டைல என்ட்ரி போட்டுத்தாரேன்’’
சொன்னபடி என்ட்ரியும் போட்டுக்கொடுத்து விட்டார்.
எனக்கு அதிர்ச்சி குறைந்தபாடில்லை.
‘யார் கட்டியிருப்பார்’ என்று, யோசனையாக இருந்தேன்.
எனக்குப்பின் வரிசையில் நின்றிருந்தவர்கள் எல்லோரும் நமட்டுச்சிரிப்பு சிரிப்பது போல் இருந்தது.
‘‘சார், யாராச்சும் பணம் கட்டுனத, நம்பர் மாத்தி, உங்க நம்பருக்கு கட்டுனதா என்ட்ரி போட்டுருப்பாங்க, இவுங்க வேலைபாக்குற லட்சணம் தெரியாதா,’’ என்றார், ஒருவர்
இன்னொருவர், ‘அதான் என்ட்ரி போட்டுட்டாங்களே, தைரியமா போங்க சார்’ என்றார்.
வீட்டுக்கு சென்றபிறகும், குழப்பம் தீரவில்லை.
‘எதற்கும் கேட்டு வைப்போம்’ என்று ஊரில் இருக்கும் மனைவிக்கு போன் போட்டேன்.
‘‘கரண்ட் பில் ஏதாச்சும் கட்னியா’’
‘‘இல்லியே, அதெல்லா உங்கு டிபார்ட்மென்ட் தான’’
‘‘இல்ல, கரண்டுபில் கட்டப்போனா, அங்க இந்த நம்பர் ஏற்கனவே பில் கட்டியாச்சுன்னு சொல்லிட்டாங்க, அதான் குழப்பமா இருக்கு’’
‘‘நல்லப்பாத்திங்ளா, நம்மு நெம்பர்தானா’’
‘‘எல்லாம் செக் பண்ணியாச்சு, நம்மு நெம்பர்தான்னு சொல்லிட்டாங்க’’
‘‘செரி, பணம் மிச்சம்னு நெனைங்க’’
அதன்பிறகு, நானும் அதை மறந்து விட்டேன். அக்கம் பக்கத்து வீடுகளில் அனைவரும் அரசு ஊழியர்கள். அவர்களை பகல் நேரத்தில் சந்திப்பது அரிது. ஆகவே யாருடனும் அதைப்பற்றி பேசவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, கீழ் தளத்து வீட்டில் ஏதோ கலவரம் நடப்பது போன்று சத்தம் கேட்டது. என் மனைவி போய்ப்பார்த்துவிட்டு, சிரித்துக் கொண்டே வந்தார்.
‘‘கரண்ட் பில் யாரோ கட்டிட்டாங்கன்னு சொன்னீங்களே, அது வாத்யார் சம்சாரம்தான். நம்பர் தெரியாம மாத்திச் சொல்லி பில் கட்டிருச்சாமா, பணம் கட்டுலன்னு சொல்லி, அவங்க வீட்டுல பீஸ் கேரியரை கழட்டீட்டு போய்ட்டாங்க’’
அபராதத்தை கட்டி, பீஸ் கேரியரை மீட்டு வந்தார், ஆசிரியர்.
நானும், என் மனைவியும், ஆசிரியரை சந்தித்து, நடந்த விவரத்தைக்கூறி, கட்டணத்தை கொடுத்து விட்டோம்.
ஆசிரியரின் மனைவி, ‘நான் நாலஞ்சு மாசமா, அந்த நம்பர்லதான் கரண்ட் பில் கட்றதா ஞாபகம்’ என்று கூற, எனக்குப் பகீரென்றது; பயந்து ஓடி வந்து விட்டோம்.

12 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமாகச் சொல்லிப் போனவிதம்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஐயா, வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  2. தெருவில் கிடந்த பர்ஸை உரியவரிடம் ஒப்படைக்கப் போனால் ,அதில் இருந்த ரூபாயைக் கொடுங்கள் என்று அபாண்டமாய் கேட்பார்கள் ...ஆசிரியர் மனைவியும் அப்படித்தான் போலிருக்கு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா... வாருங்கள் ஐயா. ஆசிரியரின் மனைவி, அறியாமல் செய்த தவறை மறைக்கவும், கணவரிடம் இருந்து தப்பிக்கவும், ஏதோ சமாளிக்க முயற்சித்தார். ஆனாலும் நமக்கு பீதி கிளம்பியது என்னவோ உண்மைதான். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  3. பகவான்ஜி கருத்தை அய்யா பழனி கந்தசாமி அவர்கள் வழிமொழிந்ததைப் போல நானும் அப்படியே வழி மொழிகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக வருக ஐயா. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

      நீக்கு

  4. ஹா ஹா. இது மாதிரியெல்லாம் நடந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சொல்வதும் உண்மைதான் மேடம். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. ஹஹஹஹ செம ஸ்வாரஸ்யம் சார்! இப்படிக் கட்டிய பிறகும் கூட கட்டலைனு கரண் கட் பண்ணியதும் உண்டு...என்ன இபி காரங்களோ...இப்பல்லாம் ஆன்லைனில் கட்டுவது வந்துவிட்டதே. அங்கு இன்னும் வரலையோ?

    பதிலளிநீக்கு
  7. வாருங்கள் ஐயா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆன்லைன் முறை இப்போது வந்து விட்டது. இது பத்தாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் ஐயா

    பதிலளிநீக்கு