புதன், 31 டிசம்பர், 2014

விருது வாங்கலையோ விருது!


அரசியல் நிகழ்வுகளைப் பற்றி அடிக்கடி கருத்து சொல்லாமல் இருப்பதே புத்திசாலித்தனம். நம்மிடம் அதுவெல்லாம் கிடையாது என்பதாலும், கருத்து கந்தசாமிக்களின் எண்ணிக்கை நாட்டில் குறைந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தாலும், நாமும் அவ்வப்போது எதுனாவது கருத்துச் சொல்லி, தமிழ் கூறும் நல்லுலகை வாழ்வித்து வருவது, எல்லோரும் அறிந்ததே. அந்த வகையில், இந்த கட்ஜூ, கட்ஜூ என்றொரு மகா வில்லங்க நீதிபதி இருக்கிறாரே, அவரது கருத்துக்களைப் பற்றி கருத்துச் சொல்லும் பேறு, இன்று நமக்கு வாய்த்திருக்கிறது.
கட்ஜூ, இப்போது நீதிபதியல்ல, ஓய்வு பெற்று விட்டார். பிரஸ் கவுன்சில் எனப்படும் வீணாய்ப்போன ஒரு அமைப்புக்கு, தலைவராகவும் இருந்தவர். இப்போது எந்த வேலையும் இல்லை போலிருக்கிறது. அது, அவர் வலைப்பக்கத்தை பார்த்தாலே தெரிந்து விடும். தினமும் மூன்று, நான்கு பதிவு போடுவதைப்பார்த்தால், அப்படித்தான் தோன்றுகிறது.
பாரத ரத்னா விருது வழங்குவதைப் பற்றி, வலைப்பக்கத்தில் கட்ஜூ எழுதியிருக்கிறார். ஏதோ, இப்போது மட்டும் தவறான நபர்களுக்கு விருது வழங்கப்போவது போலவும், முன்பெல்லாம் மிகச்சரியாக நடந்தது போலவும் இணையத்தில் கருத்துக்கள் உலா வருவது, வேடிக்கையாக இருக்கிறது. பாரதியாருக்கு, பாரத ரத்னா விருது தரப்பட வேண்டும் என்பதுவும், கட்ஜூவின் கருத்துக்களில் ஒன்று. ‘அதை, முந்தைய அரசும் கண்டுகொள்ளவில்லை; இப்போதைய அரசும் கண்டுகொள்ளவில்லை’ என்று, வருத்தப்படுகிறார் கட்ஜூ. இனி மேல், பாரதியாருக்கு விருது கொடுத்தால் என்ன, கொடுக்காவிட்டால் என்ன?
பாரத ரத்னா விருது இருக்கட்டும். தமிழக அரசின் புண்ணியத்தால், ஆண்டுக்கு ஆண்டு 50க்கும் மேற்பட்டோருக்கு, கலைமாமணி விருதுகள் கிடைக்கின்றன.
இது தவிர, கலை வளர்மணி, கலைமுதுமணி என்று, வயது வாரியாக வேறு விருதுகள் உண்டு. இவற்றுக்கெல்லாம் எப்படி ஆட்தேர்வு செய்கின்றனர் என்று விசாரித்துப் பார்த்தால், யாரும் விருதே வாங்க மாட்டார்கள்.
கலைமாமணி விருதுக்கு, அந்தந்த மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்து அனுப்பி வைப்பார். கலெக்டருக்கு யார் பரிந்துரை செய்வார்? கலெக்டரின் பி.ஏ., கார் டிரைவர், டபாலி, அவரது மனைவி என்று யாராவது பரிந்துரை செய்யக்கூடும். கடைசியில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சில பேரைப்புகுத்துவார். அங்கும் யாராவது சில கழிசடைகளின் பரிந்துரை இருக்கும். சினிமா நடிகைகளை கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்வதில் நடக்கும் அக்கிரமம், வெளியில் சொல்ல முடியாதது. நல்லாசிரியர் விருதுக்கு, அந்தந்த மாவட்ட கல்வித்துறை அலுவலகங்களில் ‘பிளாட் ரேட்’ நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள். இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதுகளும், அவ்வப்போது சர்ச்சைகளால் கேவலப்படுத்தப்படுகின்றன.
பத்ம விருதுகள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், மாநில அரசுகளின் பரிந்துரைகளுக்கு உட்பட்டவை. அதிலும், நடிகர், நடிகையர் பெயர்கள் எப்படியோ இடம் பிடித்து விடுகின்றன. இதற்கெல்லாம், மத்திய அரசில் என்ன அளவுகோல் வைத்திருக்கின்றனர் என்ற விவரத்தை நானும் நீண்ட காலமாக யோசித்துக் கொண்டே இருக்கிறேன்; பிடிபட்டபாடில்லை. வெள்ளைப்பணத்துக்குள், கருப்புப்பணத்தை கலந்து விட்டு, கணக்குக் காட்டி விடும் கொள்ளையர்கள் போல், கழிசடைகள் பலரோடு, நல்லவர்கள் சிலருக்கும் விருது கொடுத்து, மொத்தக்கும்பலையும், உத்தமர்கள் ஆக்கி விடுகிறது, அரசு.
சினிமா பின்னணிப்பாடகி எஸ்.ஜானகிக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது, ‘எனக்கு பாரத ரத்னா தான் வேண்டும்’ என்று அவர், வெளிப்படையாகவே கூறி விட்டார். ‘தன்னை விட தகுதி குறைந்தவர்களுக்கு அந்த விருது எப்போதோ வழங்கப்பட்டு விட்டபோது, தனக்கு இவ்வளவு தாமதமாக விருது அறிவிப்பது தவறு. ஆகவே அந்த விருது போதாது’ என்பது அவர் கருத்து. நியாயம்தான்.
சரி போகட்டும். இப்படி விருதுகளை அறிவிப்பது சரி. கூடவே, விருதுக்கு விண்ணப்பித்தவர் யார், பரிந்துரைத்தவர் யார், ஒப்புதல் அளித்தவர் யார் என்ற விவரத்தையும், மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டால், எதிர்கால சந்ததிகள், படித்துப்பார்த்து, புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் என்பது நம் கருத்து.

9 கருத்துகள்:

 1. //இப்படி விருதுகளை அறிவிப்பது சரி. கூடவே, விருதுக்கு விண்ணப்பித்தவர் யார், பரிந்துரைத்தவர் யார், ஒப்புதல் அளித்தவர் யார் என்ற விவரத்தையும், மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டால், எதிர்கால சந்ததிகள், படித்துப்பார்த்து, புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் என்பது நம் கருத்து.//

  மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

  இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. கருத்து கந்தசாமியைப் பத்தி என்னய்யா புகார்? எங்கிட்ட சொன்னா தீத்து வைக்க மாட்டேனா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா... வாருங்கள் ஐயா. உங்களிடம் வந்து புகார் சொல்லும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய விவகாரம் இல்லை, நானே கருத்து சொல்லி தீர்த்து விட்டேன் ஐயா.

   நீக்கு
 3. வணக்கம்
  ஐயா

  சிறப்பான ஆய்வு.. எப்போது மாறினது பிளக் பக்கம் முன்பு wordpress.com. எழுதின நீங்கள்.. மாறியமைக்கு நன்றி ஐயா.
  இனி என்வருகை தொடரும்..
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் ஐயா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! வேர்ட்பிரஸ் பக்கமும் இருக்கும், பிளாக்கரிலும் அவ்வப்போது எழுதுவேன். தங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றிகள் ஐயா

   நீக்கு
 4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் மேடம். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   நீக்கு
 5. நம் ஊரில் விருதுகள் என்றாலே லாபி பண்ணி பெறப்படுவதுதான்...அதனால் தான் நம் படிப்புச் சான்றிதழ் கூட வெளிநாடுகளில் மதிக்கப்படுவதில்லை. குறிப்பாக மருத்துவத் துறையில்....எஸ் ஜானகியின் கருத்தி நியாயமானதுதான். ஆனால் கேட்டுப் பெறுவது அல்லவே விருது. அப்படிப் பெறப்படும் விருதுகள் கடையில் வாங்கும் கத்தரிகாய், வெண்டைக்காய் போல் அல்லவா? மதிப்பு கிடையாதே...அதை விட கோடானு கோடி மக்களின் இதயங்களில் இன்னும் இருக்கின்றாரே, தொலைக்காட்சி, வானொலி வழியாக....அதுவல்லவோ விருது!!!

  நல்ல இடுகை..

  பதிலளிநீக்கு