சனி, 14 டிசம்பர், 2013

தம்பி…சாவி பத்திரம்!


உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தனக்கேயென அடைய விரும்பும் அதிசயப் பொருள், சாவி. அவரவர் வசதியைப் பொறுத்து, அது வீட்டுச் சாவி, வண்டிச்சாவி, பீரோ சாவி, கொத்துச்சாவி என வேறுபடலாம்.
சாவியின் வல்லமை அசாத்தியமானது. குடும்பங்களை உடைக்கும்; கூட்டாளிகளை பிரிக்கும். சாவியின் வரலாறு, சதிகளையும், சங்கடங்களையும்தான் அதிகமாய் நினைவு படுத்துவதாய் இருக்கிறது.
சாவியை மறந்தும், தொலைத்தும், தெருவில் திண்டாடிய அனுபவம், ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட அப்பாவி ஜீவன்களை உற்சாகப்படுத்துவதும், உய்விப்பதுவுமே நம் நோக்கம். சாவியின் சரித்திரப் புத்தகத்தில் நான் படித்த பக்கங்கள் சில:
அனுபவம் 1
அலுவலகத்தில் பணம் செலுத்த வந்த ஏஜன்ட் உடன் பேசிக் கொண்டிருந்தேன். உபசரிப்பில் உற்சாகமான ஏஜன்ட், ஒரு மணி நேரம் இருந்தபின் பிரியாவிடை கொடுத்துச்சென்றார். அவர் சென்ற சில மணி நேரம் ஆன பிறகே, மொபட் சாவி காணாமல் போயிருப்பது தெரிந்தது.
‘யார் எடுத்திருப்பர்’ என்று யோசனையில் இருந்தபோதுதான், ‘சார், ஏஜன்ட் வெரல்ல சாவிய வெச்சு சுத்திட்டு இருந்தாரு சார்’ என்றான் ஆபீஸ் பையன், தயங்கியபடி. ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஏஜன்ட் போனில் கிடைத்தார். ”சார், கையில வெச்சுட்டே இருந்த ஞாபகம். அப்புடியே வந்துட்டுது. ஊர்ல வந்து தான் தெரிஞ்சுது, சாவி நம்முளுது இல்லன்னு” என்று மென்று விழுங்கினார்.மறுநாள் டவுனுக்கு வந்த ஒருவரிடம் சாவியை கொடுத்து அனுப்பினார்.
அனுபவம் 2
நிருபரான நண்பரின் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு போயாக வேண்டும். அலுவலகத்தை பூட்ட தயாரான நேரத்தில் தன் மொபட் சாவியை தேட ஆரம்பித்தார் நண்பர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி நிகழ்ச்சிக்கு இருவரும் என் மொபட்டில் சென்றோம்.
வழியெங்கும், ‘சாவிய யாரு எடுத்திருப்பாங்க’ என்ற யோசனையும், புலம்பலுமாகவே வந்தார் நண்பர். ‘யாரெல்லாம் ஆபீசுக்கு வந்தாங்க’ என்று லிஸ்ட் அவுட் செய்து புலன் விசாரணை நடத்தியதில், பத்திரிகைச்செய்தி கொடுக்க வந்திருந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மீது சந்தேகம் கிளப்பினார், சர்க்குலேசன் பிரிவு அலுவலர். ‘சேச்சே, அவர்ட்டப்போய் எப்புடி’ என கேட்கத் தயங்கினார் நண்பர். அதற்குள் அந்த தலைமை ஆசிரியரே அலுவலகத்துக்கு போன் செய்து விட்டார்.
”சார், மறந்தாப்புல ஏதோ சாவிய எடுத்துட்டு வந்துட்டம்போல இருக்கு. உங்க ஆபீஸ் சாவியான்னு ஒரு சந்தேகம். அதான் போன் பண்ணிப் பாப்பமேன்னு” என்றார். நண்பர் பல்லைக் கடித்துக் கொண்டார்.
அனுபவம் 3
இதுவும் அதே ஊரில் நடந்தது தான். நண்பரான உள்ளூர் ஏஜன்ட், தினமும் மாலை வேளைகளில் அலுவலகம் வந்து நாட்டு நடப்புகள் பற்றி பேசிக்கொண்டிருப்பார். அன்றும் அப்படித்தான் பேசிக்கொண்டிருந்தார்.
பேசி முடித்து, கிளம்பும் வேளையில், ‘வண்டி சாவிய எங்கியோ வெச்சுட்டனே’ என்று தேட ஆரம்பித்தார். வெளியில் சென்று மொபட்டில் பார்த்தார். அரை மணி நேரமாக தேடியும் சாவி கிடைத்தபாடில்லை.
அப்போது தான், செய்தி கொடுப்பதற்காக வந்து சென்ற உள்ளூர் டிவி வீடியோகிராபர் ஞாபகம் வந்தது. சந்தேகத்தோடு தான் போன் செய்தேன். ”ஏப்பா எங்க ஆபீஸ்ல ஏதோ சாவிய காணங்கிறாங்க, நீ வந்தப்ப ஏதாவது பாத்தியா என்றேன். ”அண்ணே அது உங்க சாவியாண்ணே. ஏதுடா நம்மகிட்ட புதுசா ஒரு சாவி இருக்குதேன்னு எனக்கு அப்பவே சந்தேகம்ணே, ஒடனே கொண்டாரண்ணே” என்று வேகவேகமாக பேசியவர், முக்கால் மணி நேரத்துக்கு பிறகு வந்தார்.
பொறுமையிழந்து, கால் மாற்றி கால் நின்று, சிகரெட்டுகள் சிலவற்றை ஊதி விட்டு, வெறுப்போடு இருந்த போட்டோகிராபரும், ஏஜன்டும், சாவியுடன் வந்தவரிடம், கடுபபைக்காட்டினர். வாக்குவாதம் முற்றியது.
”உன் வண்டி சாவிய ஒர்த்தன் எட்த்திருந்தா சும்மார்ப்பியா’ என்ற போட்டோக்காரர், வந்தவர் வண்டியில் இருந்து சாவியை உருவி, கை போன போக்கில் வீச, அது அந்த வழியில் சென்று கொண்டிருந்த மினி பஸ்சின் கூரையில் விழ, ‘சாவி, சாவீ, நிர்த்து நிர்த்து’ என அவர் மினி பஸ்சை பார்த்து கூவிக்கொண்டே துரத்த… ஒரே களேபரம்.
இந்த மூன்று சம்பவங்களும் ஒரே ஊரில் ஒரு சில ஆண்டு இடைவெளியில் நடந்தவை. டேபிள் மீது இருக்கும் பொருளை எடுத்து கையில் வைத்திருப்பதும், அதை அப்படியே பாக்கெட்டில் வைத்துச் சென்று விடுவதும், ஒரு விதமான மறதிநோயின் வெளிப்பாடு.
இந்த வியாதியின் பெயர் தமிழில் சாவியோபோவியா.
ஆங்கிலத்தில் ‘கீயோ லவட்டிஸ்’ எனலாம். எந்த வயதினருக்கும் வரக்கூடிய இந்த வியாதிக்கு, தடுப்பூசிகளோ, மாத்திரை, மருந்துகளோ கிடையாது. தற்காப்பு மட்டுமே உங்கள் சாவியை காக்கும்; அவதியில் இருந்து உங்களையும் காக்கும். ஆகவே, அன்போடு நான் சொல்வதெல்லாம் ஒன்று மட்டும் தான். தம்பி…சாவி பத்திரம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக