ஞாயிறு, 9 நவம்பர், 2014

மார்க்கெட் மதிப்பும், வழிகாட்டி மதிப்பும்!

அரசு அறிவிக்கும் வளர்ச்சித்திட்டங்கள் பல, நிறைவேற்ற முடியாமல் முடங்கிப் போவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, நிலம் எடுக்கும் விவகாரமே. அரசு நிலமாக இருந்தால் பிரச்னையில்லை. தனியார் நிலமாக இருந்தால், அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பர்; வழக்கும் தொடுப்பர்.
ஏதாவது வில்லங்கமான வக்கீல்களிடம் வழக்கு சென்று விட்டால், அந்த திட்டத்தின் கதி அதோகதி தான். தமிழகத்தின் மிக முக்கியமான ரயில் பாதை திட்டம், இப்படிப்பட்ட பிரச்னையில் சிக்கி, ஆண்டுக்கணக்கில் தாமதம் ஆனதை நான் அறிவேன்.
தனியார் நிலத்தை அரசு எடுப்பதில் இருக்கும் சிக்கல்களை ஒரேயடியாக தீர்ப்பதற்கு, மத்திய அரசோ, மாநில அரசுகளோ தயாராக இல்லை. மாற்றி மாற்றி காலை வாரிக் கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள் அமைந்திருந்தால், எந்த ஒரு திட்டமும் விரைந்து நிறைவேற வாய்ப்பே இல்லை.
தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில்கூட, நிலம் எடுப்பு பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பது வேதனைப்பட வேண்டிய ஒன்று. அதிகாரிகளை கேட்டுப்பாருங்கள்! ‘அரசாங்கம்தான், நிலத்தின் உரிமையாளர்; அதை வைத்திருப்பவர் பெயரில் பட்டா மட்டுமே தரப்படுகிறது. ஆகவே தன் நிலத்தை, தனக்குத் தேவையானபோது எடுக்க அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது’ என்று, விளக்கம் கொடுப்பர்.
இப்படி ஊருக்குள் போய்ச்சொன்னால், தர்ம அடி விழுந்து விடும். அரசியல்வாதிகள் ஓட்டுக்கேட்க மட்டுமல்ல; ஓடி ஒளியவும் முடியாத நிலை ஏற்பட்டு விடும். டாட்டாவின் டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம், குப்பைக்குப் போனதை நாடு பார்த்ததே!
ஆக, தமிழகத்தில் பாலங்கள் கட்டவோ, சாலை அமைக்கவோ, விரிவாக்கவோ, புதிதாக நிலம் எடுக்க முடியவில்லை. சென்னை, கோவை போன்ற இடங்களில் விமான நிலையங்களை விரிவாக்க முடியவில்லை.
இப்போதுகூட, எரிவாயுக் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டம், விவசாயிகள் எதிர்ப்பால் முடங்கிக் கொண்டிருக்கிறது.
‘இனி அரசு திட்டங்களுக்கு ஒரு இஞ்ச் கூட நிலம் எடுக்கவே முடியாது’ என்ற நிலை, தவிர்க்க முடியாததாகி விட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது, மார்க்கெட் மதிப்பு. மார்க்கெட் நிலவரப்படி, ஏக்கர் மூன்று கோடி போகும் நிலத்துக்கு, வழிகாட்டி மதிப்பு வெறும் பத்து லட்சத்துக்கும் கீழே இருக்கிறது.
அரசு நிர்ணயிக்கும் வழிகாட்டி மதிப்பை ஏற்க மறுப்பவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அந்த வழக்கு, ஓரிரு தலைமுறைகளில் முடிந்து விட்டால் பரவாயில்லை. முப்பது ஆண்டுக்கும் மேலாக நடக்கும் வழக்குகள், தமிழகத்தில் ஏராளம் இருக்கின்றன. பறிக்கப்பட்ட நிலத்துக்கு, தன் வாழ்நாளில் இழப்பீடே கிடைக்காமல் இறந்து போன விவசாயிகள் எத்தனையோ பேர். அரசுக்கு சொற்ப விலைக்கு நிலத்தைக் கொடுத்துவிட்ட சோகத்தில் இறந்தவர்களும், நடைபிணம் ஆனவர்களும் பலருண்டு.
வழிகாட்டி மதிப்புக்கும், மார்க்கெட் மதிப்புக்கும் இருக்கும் மெகா இடைவெளிதான் அடிப்படை பிரச்னை. அதை சரி செய்து விட்டால், நிலம் எடுப்பு பிரச்னைகள் தீர்ந்து விடும். யாராவது தேவதூதர்கள் வான்வெளியில் பறந்து வந்தால்தான், இதுவெல்லாம் சாத்தியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக